ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் வினு சக்ரவர்த்தி காலமானார்

  • 27 ஏப்ரல் 2017

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமான நடிகர் வினு சக்ரவர்த்தி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

படத்தின் காப்புரிமை YOUTUBE

கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலமின்றி இருந்து வந்த அவர், வியாழக்கிழமையன்று மாலை 7 மணியளவில் காலமானார்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கன்னட பதிப்பான பரசக்கே கண்டதிம்ம படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வினு சக்கரவர்த்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என 1002 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கோபுரங்கள் சாய்வதில்லை, மண் வாசனை ஆகிய படங்கள் இவரது திரையுலக வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தன.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த முனி திரைப்படம் இவரது 1000வது திரைப்படமாகும். 2014ஆம் ஆண்டில் வெளிவந்த வாயை மூடிப் பேசவும் இவரது கடைசித் திரைப்படமாகும்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது பள்ளிக் கல்வியையும் கல்லூரிப் படிப்பையும் சென்னையில் முடித்தார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த வினு சக்கரவர்த்தி, கண்டிப்பான அப்பா, பிடிவாதம்மிக்க உறவினர், கொடூரமான வில்லன் என பலவிதமான பாத்திரங்களில் ரசிகர்களை மகிழ்வித்தவர். குரு சிஷ்யன், சுந்தரா டிராவல்ஸ் ஆகிய படங்களில் நகைச்சுவையைத் தூண்டும் இவரது நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது.

தமிழின் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையாக வலம்வந்த சில்க் ஸ்மிதா வினு சக்கரவர்த்தி எடுத்த வண்டிச் சக்கரம் படத்தின் மூலமாகவே திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவையும் படிக்கலாம்:

172 ஆக குறைந்தது 500 கிலோ; இந்தியாவை விட்டு புறப்படுகிறார் எகிப்து பெண்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி

டிடிவி தினகரனிடம் சென்னையில் விசாரணை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்