'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' கேள்வி உருவான கதை: ராஜமௌலி பேட்டி

Image caption பிபிசி தமிழுக்கு லண்டனில் பிரத்யேக பேட்டியளித்த எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அனுஷ்கா ஷெட்டி

பாகுபலி-2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பிரபலமடைந்த கேள்வி 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்பது.

இது திரைப்படத்தின் விளம்பரத்திற்காக திரைப்படக்குழுவினர் உருவாக்கிய கேள்வி அல்ல என்றும், வட இந்திய ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவர்களே பிரபலப்படுத்திய கேள்வி இது என்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறினார்.

பிபிசி தமிழுக்கு லண்டனில் பிரத்யேக பேட்டியளித்த எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த கேள்வி வட இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கியதைப்பார்த்த பாகுபலி திரைப்படக்குழுவினர் படத்தின் விளம்பரத்துக்காக அந்த கேள்வியை பயன்படுத்த தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

"முதலில் உருவானது சிவகாமி கதாப்பாத்திரமே தவிர பாகுபலி அல்ல"

படத்தின் காப்புரிமை @Baahubali
Image caption சிவகாமி கதாப்பாத்திரப்படைப்பு தன்னை தூங்கவிடாமல் செய்ததாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

பாகுபலி கதைக்கான கரு முதலில் உருவான விதம் குறித்து கூறிய ராஜமௌலி, தன் தந்தை முதன்முதலில் சிவகாமியின் கதாப்பாத்திரத்தை மட்டுமே தன்னிடம் விவரித்ததாகவும் சிவகாமி கதாப்பாத்திரப்படைப்பு, தன்னை தூங்கவிடாமல் செய்ததாகவும் தெரிவித்தார்.

சிவகாமிக்கு அடுத்து, கட்டப்பா, பல்லாள்தேவா, பிஜிள்தேவா ஆகிய பாத்திரங்களை தன்னிடம் சொன்ன தனது தந்தை இறுதியாகவே பாகுபலியின் பாத்திரத்தை விவரித்ததாக தெரிவித்த ராஜமௌலி, பாகுபலி திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்ற ஊக்கமும் உத்வேகமும் சிவகாமி மற்றும் கட்டப்பா கதாபாத்திரங்களிலிருந்தே தோன்றியதாக கூறினார்.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ள 'பாகுபலி' திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் உள்ளிட்ட 11 திரைப்படங்களில், 9 திரைப்படங்களுக்கான கதையை அவரது தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாண்டுகள் திரைக்கலைஞர்களை கட்டிப்போட செய்த தந்திரங்கள் என்ன?

ஐந்து ஆண்டுகள் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள மிகப்பெரிய சவால் அந்த திரைப்படக் குழுவினரின் ஆர்வம் குறையாமல் வைத்திருப்பது. அவ்வகையில் திரைப்படக் கலைஞர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் நீட்டிப்பதற்காக இயக்குனர் ராஜமௌலி புதிய உத்தியை கடைபிடித்ததாக கூறினார்.

படத்தின் காப்புரிமை @Baahubali
Image caption பாஹுபலி 1 மற்றும் 2 படங்களை உருவாக்க் ஐந்து ஆண்டுகள் பிடித்துள்ளன

பாகுபலி திரைப்படத்தின் ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் படம்பிடிக்கப்பட்ட பகுதியை தொகுத்து உரிய கிராஃபிக்ஸ் காட்சிகளையும் இணைத்து அதை நடிகர்களுக்கு காண்பித்து அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியதாகவும் தங்கள் நடிப்பின் பிரம்மாண்டத்தை திரையில் பார்த்த ஊக்கமடைந்த கலைஞர்களின் ஆர்வம் அடுத்த சிலமாதங்களுக்கு நீடித்ததாகவும் அதை தான் பயன்படுத்திக்கொண்டதாகவும் ராஜமௌலி பிபிசி பேட்டியில் குறிப்பிட்டார்.

"இணையத்தில் திருட்டுப்பிரதிகள் பரவுவதை தடுக்க யோசனை'

பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களானாலும் சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களானாலும் அவை இணையத்தில் சட்டவிரோதமாக பரவுவது திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உருவாகியுள்ளது.

திருட்டு பிரதிகள் பரவுவதை தடுக்க இயக்குனர் ராஜமௌலி ஒரு யோசனையை முன்வைக்கிறார்.

படத்தின் காப்புரிமை @Baahubali
Image caption பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் அதிகபட்ச வசூல் சம்பாதித்தத் திரைப்படமாக கூறப்படுகிறது.

திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க விரும்புபவர்களைப்போல, தொலைக்காட்சியில் திரைப்படங்களை பார்க்க விரும்புபவர்களைப்போல டேப்ளெட்களிலும் கைபேசிகளிலும் திரைப்படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கென பிரத்யேக சேவையை வழங்குவதே இதற்கு சிறந்த வழி என்கிறார் அவர்.

ஆனால் இந்த திட்டத்தை ஒரே நாளில் உருவாக்க முடியாது என்றும், அனைத்து திரைப்படத்தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இணைந்து இதற்கு ஒரு தீர்வை காண வேண்டியது அவசியம் என்றும் இயக்குனர் ராஜமௌலி கூறினார்.

"ஒரே நாயகனுக்கு மனைவியாகவும், தாயாகவும் நடிப்பது சவால் மிகுந்தது'

தந்தை அமரேந்திர பாகுபலியின் மனைவி தேவசேனாவாகவும், மகன் மகேந்திர பாகுபலியின் தாயாகவும் நடிப்பது தனக்கு சவால் மிகுந்த ஒன்றாக இருந்தது என நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்தார்.

நடிகர் பிரபாஸின் தாயாக நடிக்கும்போது அந்த கதாப்பாத்திரத்தை முழுமையாக நடிக்கமுடியுமா என்கிற சவால் மட்டுமே தன் முன் இருந்ததாக அனுஷ்கா பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.

படத்தின் காப்புரிமை @Baahubali
Image caption தேவசேனா கதாப்பாத்திரத்தில் நடித்த அனுஷ்காவுக்கு நிறைய பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

பாகுபலி திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் வெறும் தாய் வேடத்தில் மட்டுமே அனுஷ்கா நடித்தார். இரண்டாம் பாகத்தில் தான் தந்தை அமரேந்திர பாகுபலியின் மனைவியாக அவர் தோன்றினார்.

"நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அதிகரிக்கின்றன''

இந்திய திரையுலகில் நடிகைகள் ஒரு காட்சிப்பொருளாக மட்டுமே பல திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதாக கூறப்படும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகை அனுஷ்கா அந்த நிலை தற்போது படிப்படியாக மாறிவருகிறது என்றார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பல கதைகளும் திரைப்படங்களும் அண்மையில் வெளியாகிவருவதாகவும், 2005ஆம் ஆண்டு தான் திரையுலகில் நுழைந்ததிலிருந்து தற்போது வரை படிப்படியாக மாறுதல்கள் ஏற்பட்டு வருவதாகவும் அனுஷ்கா தெரிவித்தார்.

அதற்கு எடுத்துக்காட்டாக தான் நடித்த ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி, அருந்ததி போன்ற திரைப்படங்களை அவர் குறிப்பிட்டார்.

தொடர்படைய செய்திகள்:

''நடிகனாக இருப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத தமிழனாக இருப்பதே எனக்கு பெருமை''

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

பாகுபலி வெற்றியின் பின்னணியில் இருப்பது யார்?

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

இதையும் நீங்கள் படிக்கலாம்:

கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல சி.ஐ.ஏ சதி -வடகொரியா குற்றச்சாட்டு

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை!

தமிழ்நாட்டின் `தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்`

திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்

சீனா தயாரித்த முதலாவது பயணியர் விமானம் வெள்ளோட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கட்டப்பாவோடு மீண்டும் கைகோர்ப்பாரா? ராஜமௌலி பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்