சினிமா விமர்சனம்: போங்கு

நட்டி நடித்த சதுரங்க வேட்டை படத்திற்குப் பிறகு, அவர் நடிக்கும் படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. எங்கிட்ட மோதாதே படத்திலாவது அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்தவர், இந்தப் படத்தில் முழுவதுமாக ஏமாற்றியிருக்கிறார்.

சினிமா விமர்சனம்: போங்கு

ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன், ஒரு காரை டெலிவரி செய்யப்போகும்போது அந்தக் கார் திருடப்பட்டுவிடுகிறது. இதனால், வேலை போகிறது. சிறையிலிருந்து வெளியில் வருபவர்கள் காரைத் திருடுவதைத் தொழிலாகக் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அப்போது மதுரையில் இருக்கும் ஒருவரிடமிருந்து பத்து கார்களைத் திருட வேண்டுமென ஒரு அசைன்மெண்ட் வருகிறது. அதைச் செய்யும்போதுதான், தாங்கள் டெலிவரி செய்ய இருந்த காரைத் திருடியது யார் என தெரியவருகிறது.

மேலே இருக்கும் கதையைக் கேட்கும்போது, ஒரு அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லர் படம் என்று தோன்றலாம். ஆனால், கிடைத்திருப்பதென்னவோ, மேலோட்டமாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு சுமாரான படம்.

நாயகனாக நடித்திருக்கும் நட்டி, சதுரங்க வேட்டை படத்தில் பேசுவதைப் போலவே பல பஞ்ச் வசனங்களை படம் முழுக்க பேசிக்கொண்டேயிருக்கிறார். பழகிப்போன முகபாவங்களையும், உடல்மொழியையும் வெளிப்படுத்துகிறார்.

வில்லனாக வரும் சரத் லோகிதஸ்வா, முந்தைய படங்களைப் போலவே ஒரு மிரட்டலான வில்லன். அதுல் குல்கர்னி உள்பட படத்தில்வரும் யாரும் எவ்வித திருப்தியையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகிறார்கள். மயில்சாமியும், சாம்ஸும் வரும் சில காட்சிகள் மட்டுமே படத்தில் ரசிக்கும்படி இருக்கின்றன.

மதுரைக்குச் சென்று பத்து கார்களைத் திருடச் சொல்லும் தாதா எதற்காக அப்படிச் சொல்கிறார், மதுரையையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் சாதாரண போலீஸ் அதிகாரியைப் பார்த்தவுடன் ஏன் நடுங்குகிறார் என்பது போன்ற சந்தேகங்கள் படம் முழுக்க தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. அதுவும் படத்தின் உச்சகட்டமாக ரோல்ஸ் ராய்ஸ் காரை நாயகன் திருடும் காட்சிகள், குழந்தைகளால்கூட நம்ப முடியாதவை.

படம் துவங்கியதிலிருந்தே ஏதோ பெரிதாக செய்யப்போவதுபோல பில்ட் - அப் கொடுத்துக்கொண்டே இருந்தாலும் படம் முடியும்வரை அப்படி ஏதும் நடப்பதேயில்லை. ஏற்கனவே மிக மெதுவாக நகரும் படத்தின் நடுவில் வரும் இரண்டு குத்து பாடல்கள், மேலும் பொறுமையை சோதிக்கின்றன. பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு கூடுதல் மைனஸ்.

பிற சினிமா செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்