திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம்

  • 17 ஜூன் 2017

மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த பேய்ப் படம். ஆனால், பேய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாகச படங்களுக்கான பாணியில் தன் முதல் படத்தை அளித்திருக்கிறார் சரவன்.

திரைப்படம் மரகத நாணயம்
நடிகர்கள் ஆதி, மைம் கோபி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், கோட்ட சீனிவாசராவ்
இசை திபி நினன் தாமஸ்
ஒளிப்பதிவு,இயக்கம் ஏ.ஆர்.கே. சரவண்.

கடன் பிரச்சனையின் காரணமாக, பெரிதாக சம்பாதிப்பதற்காக சென்னைக்கு வரும் செங்குட்டுவன் (ஆதி) சிறிய அளவில் கடத்தலில் ஈடுபடும் ராமதாஸிடம் (முனீஸ்காந்த்) வேலைக்குச் சேர்கிறான்.

அந்த நேரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்பொறை என்ற மன்னனுக்குச் சொந்தமான மரகத நாணயம் என்ற ஒரு சக்தி வாய்ந்த பொருளை எடுத்துத் தந்தால் 10 கோடி கொடுப்பதாக ஒரு கும்பல் சொல்கிறது.

ஆனால், அந்த நாணயத்தை தொட்டாலே இறந்துவிடுவார்கள் என்பதால் எல்லோரும் பின்வாங்கிவிட, நண்பன் (மைம் கோபி) உதவியுடன் களத்தில் இறங்குகிறான் செங்குட்டுவன். அவனுக்கு உதவியாக சிதம்பரம் (முனீஸ்காந்த்) என்ற பேய் வருகிறது. ஒரு கட்டத்தில் மரகத நாணயத்தை எடுத்துவிடும் செங்குட்டுவனை, மரணம் ஒருபக்கம் துரத்த, மற்றொரு பக்கம் அதைக் கைப்பற்ற ட்விங்கிள் ராமநாதன் என்ற தாதாவும் (ஆனந்த்ராஜ்) துரத்துகிறான்.

தமிழில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு பேய்ப் படமாவது வெளியாவதால் (இந்த வாரம் இரண்டு!) சற்று வித்தியாசமாக முயற்சிசெய்திருக்கிறார் சரவன். நாயகனுக்கு உதவுவதற்காக சிதம்பரம் என்ற பேயை உசுப்ப, அது செத்துப்போன ராமதாஸ் வடிவில் வருகிறது.

அந்தப் பேய் மேலும் மூன்று பேரை உசுப்ப, அவர்கள் வெவ்வேறு குரல்களில் பேசுகிறார்கள்.

அதில் ஒருவருக்கு பருத்திவீரன் 'பொணந்தின்னி'யின் குரல். கதாநாயகிக்கு ஆண் குரல்!! படத்தின் முதல் சில காட்சிகளில் மட்டும், உயிரோடு வரும் கதாநாயகி (நிக்கி கல்ராணி) பிறகு ஆண்குரலில் பேசும் பேயாகத்தான் படம் முழுக்க வருகிறார்.

கதாநாயகி பாத்திரத்தில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். இப்படி ஒரு பாத்திரத்தை ஒப்புக்கொண்டு, அதை ரசிக்கும்படியும் செய்திருக்கிறார் நிக்கி.

படத்தின் மற்றொரு பலம், தாதாவாக வரும் ஆனந்த்ராஜ். வசனத்திலும் உடல்மொழியிலும் பிரமாதப்படுத்துகிறார்.

அவருக்கான காட்சியமைப்புகளும் அட்டகாசம். தான் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஒரு ஸ்பீக்கரையும் தன்னுடைய கோமாளி அடியாள்களையும் அனுப்பி டிவிங்கிள் ராமநாதன் செய்யும் அட்டகாசம் ரசிக்கவைக்கிறது.

உயிரோடு ராமதாஸ் என்ற கடத்தல்காரன், இறந்த பிறகு சிதம்பரம் என்பவரின் பேய் என இரண்டு பாத்திரங்களில் வரும் முனீஸ்காந்த், நிறைவாகச் செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வரும் எம்.எஸ். பாஸ்கர், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் படம் முழுக்க வரும் மைம் கோபியும் அவ்வப்போது நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள்.

ஆனால், தொலைக்காட்சி நாடக பாணியில் அமைக்கப்பட்ட காட்சிகள், துவக்கத்தில் ரொம்பவும் வேகவேகமாக முன்கதையைச் சொல்வது, பிறகு மிக மிக மெதுவாக நகரும் திரைக்கதை என படம் பார்ப்பவர்களை சோதனைக்குள்ளாக்கும் அம்சங்களும் படத்தில் உண்டு.

திரைப்பட விமர்சனம் : புலிமுருகன்

பிற செய்திகள் :

“ரான்சம்வேர் இணைய தாக்குதல் வட கொரியாவிலிருந்து தொடுக்கப்பட்டது”

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்