சினிமா விமர்சனம்: வனமகன்

  • 24 ஜூன் 2017
திரைப்படம் வனமகன்
நடிகர்கள் ஜெயம் ரவி, சயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ், வருண், சண்முகராஜா
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் விஜய்

காடு சார்ந்த படம் என்றாலே, அங்கு அமைதியாக வாழும் மக்கள் vs காட்டில் பெரிய தொழிற்சாலையை ஆரம்பிக்க முயலும் பெரும் நிறுவனங்கள் என்ற ரீதியிலேயே படங்கள் வருவது பல சமயங்களில் வழக்கமாக இருக்கிறது. கும்கி போன்ற சில படங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

சில வாரங்களுக்கு முன்பாக வெளிவந்த கடம்பன் திரைப்படத்தில், நிம்மதியாக காடுகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை தொழிற்சாலைக்காக வெளியேற்ற முயலும்போது, அந்த மக்களைச் சேர்ந்த ஒருவன், அந்த முயற்சியைத் தடுக்கிறான் என்பது கதையாக இருந்தது. இப்போது விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் வனமகனிலும் இதேபோல காட்டில் வாழும் மக்கள் vs பெரிய நிறுவனம் என்ற மோதல் இருப்பது அயர்ச்சியூட்டுகிறது.

அந்தமானில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜாரா (ஜெயம் ரவி). அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார்கள்.

இதற்கிடையில் அங்கு சுற்றுலா வரும் தொழிலதிபரான காவ்யாவின் வாகனத்தில் ஜாரா மோதிவிட, அவரை சென்னைக்கு அழைத்துவந்து குணப்படுத்த முயற்சிக்கிறார் காவ்யா.

வனத்திலேயே வசித்த ஒருவர் நகரத்தை எதிர்கொள்ளும்போது வரும் பிரச்சனைகள் முதல் பாதி. அதன் பிறகு, அந்தமானுக்கு காவல்துறையால் கொண்டுவரப்படும் ஜாரா, தன் மக்களோடு சேர்ந்துகொண்டாரா, தொழிற்சாலை அமைக்கப்படும் முயற்சி கைவிடப்பட்டதா என்பது பிற்பாதி.

படத்தின் முற்பாதி பரவாயில்லை என்றாலும் பிற்பகுதி தொய்வான திரைக்கதையால் பொறுமையை சோதிக்கிறது. சீக்கிரமே, படம் எப்போது முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜாரா நகரத்திற்கு வரும்போது, சற்று மிரட்சி இருக்கக்கூடும்தான். ஆனால், பிதாமகனில் வரும் சித்தனைப் போல பல இடங்களில் நடந்துகொள்ள வேண்டுமா? போதாக்குறைக்கு மரத்தின் மேலேயே தூங்குகிறார். அதேபோல, பல காட்சிகளில் பழங்குடியின மக்கள் குரங்குகளைப் போல நடந்துகொள்கிறார்கள்.

அந்தமானில் பழங்குயின மக்கள் வசிக்கும் பகுதிக்கு உள்ளே செல்லவே தடையிருக்கும்போது, அங்கே சென்று காற்றாலை அமைக்க அனுமதி எப்படி கிடைக்கிறது? அந்தமான் காவல்துறை, வனத்துறை எல்லாம் அந்த காற்றாலை நிறுவனத்திற்காக வேலை பார்ப்பவர்களைப் போல படம் முழுக்க வருகிறார்கள். துப்பாக்கியில் சுட்டபிறகும் நூற்றுக்கணக்கானவர்களை துவம்சம் செய்கிறார் நாயகன்.

நாயகனாகவரும் ஜெயம் ரவிக்கு பெரிதாக வசனங்களே இல்லை என்பதால் முகபாவங்களிலேயே சமாளிக்கவேண்டிய நிலை. சிறப்பாகவே அதைச் செய்துவிடுகிறார். பிரகாஷ் ராஜ் ஒரு வழக்கமான வில்லன். தம்பி ராமையாவுக்கு நாயகியின் சமையல்காரன் பாத்திரம். வழக்கத்தைப்போல சில இடங்களில் மட்டும் சிரிப்பை ஏற்படுத்தும் வேலை.

ஆனால், படத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துபவர் அறிமுக நடிகையான சயிஷா. ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக வரும் இவர், எந்த இடத்திலும் உறுத்தலே ஏற்படுத்தாமல் இயல்பாக நடித்துச் செல்கிறார். பாடல் காட்சிகளில் இன்னும் அசரவைக்கிறார். உண்மையிலேயே ஒரு இனிய புதுவரவு.

ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு, இந்தப் படத்தின் மற்றுமொரு பிளஸ். நகரம், காடு என வெவ்வேறு விதமான நிலப்பரப்பை, ரசிக்கும்படி வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மனிதர். அதிலும் காடுகளின் மீதான ''ட்ரோன் ஷாட்கள்'' அட்டகாசம்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஐம்பதாவது படம். 'டம்.. டம்', 'யம்மா.. அழகம்மா' என்ற இரண்டு பாடல்களும் பின்னணி இசையும் ஓ.கே.

நடிகர்கள் தேர்விலும் காட்சிகளைப் படமாக்குவதிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் விஜய், கதையிலும் திரைக்கதையிலும் சொதப்பியிருப்பதால் பிற்பகுதியில் அலுப்பூட்டுகிறார் வனமகன்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்