திரை விமர்சனம்: யானும் தீயவன்

  • 29 ஜூன் 2017
திரைப்படம் யானும் தீயவன்
நடிகர்கள் அஸ்வின் ஜெரோம், வர்ஷா, ராஜு சுந்தரம், பொன் வண்ணன், சந்தான பாரதி, விடிவி கணேஷ், மதுமிதா
இசை அச்சு
ஒளிப்பதிவு; இயக்கம்: பிரசாந்த் ஜி சேகர். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா;பிரசாந்த் ஜி சேகர்.

புதிய இயக்குனர், அறிமுக நாயகன், புதிய தயாரிப்பாளர் என்றவுடன் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் சென்றால்கூட சற்று ஏமாற்றத்தைத் தரும் படம்.

மைக்கலும் (அஸ்வின் ஜெரோம்) சவுமியாவும் (வர்ஷா) காதலர்கள். ஒரு நாள் கடற்கரைக்குச் செல்லும்போது ஏற்படும் பிரச்சனையில் ஒரு சைக்கோ கொலைகாரனை அடித்துவிடுகிறார்கள். பிறகு வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு, அந்த கொலைகாரன் இருக்கும் வீட்டின் மாடியிலேயே தங்குகிறார்கள்.

அப்போது சவுமியா வேறு ஒரு கொலையைப் பார்த்துவிடுகிறாள். கொலைகாரனும் இந்த ஜோடியைப் பார்த்துவிடுகிறான். பிறகு அவர்களைச் சித்ரவதை செய்து கொல்ல முடிவுசெய்கிறான். இதே நேரத்தில் அந்த கொலைகாரனை காவல்துறை அதிகாரி ஒருவரும் (பொன்வண்ணன்) தேடுகிறது.

ஒரு சைக்கோ கொலைகாரன் - அவன் பிடியில் நாயகன், நாயகி - கொலைகாரனை கொல்லத் துரத்தும் போலீஸ் என்பது ஒரு நல்ல த்ரில்லருக்கான ஒன் லைன்தான். ஆனால், திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் மைக்கலும் சவுமியாவும் காதலிக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது 80களின் இறுதியில் வந்த படத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறது. காட்சியமைப்பு மட்டுமல்ல, ஒளிப்பதிவே அப்படித்தான் இருக்கிறது.

பிற திரை விமர்சனங்கள்:

சினிமா விமர்சனம்: வனமகன்

திரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்

திரைப்பட விமர்சனம் : புலிமுருகன்

இதன் பிறகு தொடரும் காதல், வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் என எந்தக் காட்சியிலும் மனம் ஒட்டவில்லை. ராஜு சுந்தரம் வரும் காட்சிகள் மட்டும் - குறிப்பாக படத்தின் பின் பாதியில் வரும் காட்சிகள் - சற்றுப் பரவாயில்லை.

க்ளைமாக்ஸில் ஹீரோ, ஏதோ புத்திசாலித்தனமாக செய்து தப்பிக்கப்போகிறார் என்று பார்த்தால், வில்லனை அடித்துப்போட்டுவிட்டு தப்பிக்கிறார்.

இதை முதலிலேயே செய்திருக்க வேண்டியதுதானே என்று தோன்றுகிறது. கௌதம் மேனன் படங்களைப் போல அவ்வப்போது பின்னணியில் குரல் ஒலிப்பது, படத்திற்கு எந்த விதத்திலும் உதவிசெய்யவில்லை. ஒளிப்பதிவு, இசை ஆகியவை மிக சராசரி ரகம்.

படத்தில் நாயகனாக வரும் அஸ்வின் ஒரு நல்ல அறிமுகம். நாயகி வர்ஷா, ஏற்கனவே சதுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு நல்ல கவனிப்பைத் தரக்கூடும். வில்லனாக வரும் ராஜு சுந்தரம் இந்தத் திரைக்கதைக்குள் என்ன செய்திருக்க முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.

படம் ஒன்றே முக்கால் மணி நேரமே ஓடுகிறது என்பது ஆசுவாசமளிக்கிறது. இதற்கேற்றபடி காட்சிகளை சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

பிற செய்திகள்:

ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்

இந்தியாவிலும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல்

குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு எத்தனை மதிப்பெண் வழங்கலாம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்