பசுக்களின் உயிர்காக்க 60000 டாலரை இழந்த பிரிட்டிஷ் விவசாயி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பசுக்களின் உயிர்காக்க 60000 டாலரை இழந்த பிரிட்டிஷ் விவசாயி

  • 4 ஜூலை 2017

பிரிட்டிஷ் விவசாயி ஜே வைல்டின் தந்தை 2011 ஆம் ஆண்டு இறந்தபின் அவர்களின் குடும்பப்பண்ணையை பராமரிக்கும் பொறுப்பு இவரிடம் வந்தது.

பண்ணை மாடுகளின் நலன் குறித்தும் மாமிசத்துக்காக மாடுகளை வளர்ப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் இவர் பல ஆண்டுகளாக கவலைப்பட்டுவந்தார்.

பசுக்களுக்கும் உணர்வுண்டு, தாம் கொல்லப்படுவோம் என்பது அவற்றுக்குத் தெரியும் என்கிறார் மாமிசத்துக்காக மாடுகள் வளர்க்கும் விவசாயி ஜே வைல்ட்.

“பசுக்களின் கண்களை வைத்தே அவற்றின் மகிழ்ச்சி, சோகம், சோம்பல் என எல்லா உணர்வுகளையும் என்னால் சொல்லமுடியும். நான் மாமிச மறுப்பாளன். ஆனால் மாமிசத்துக்காக மாடுகளை வளர்த்தவன்” என்று கூறும் ஜே அதற்கு ஒரு முடிவுகட்டினார்.

தன் பண்ணை மாடுகளை பசுபராமரிப்பு இல்லத்துக்கு அனுப்பினார் அவர். அவை தம் இறுதிக்காலம் வரை அங்கேயே இருக்கும்.

மாமிசம் சாப்பிடாத தான் மாமிசத்துக்காக மாடுகளை வளர்த்தது மிகப்பெரிய இரட்டை நிலைப்பாடு என்கிறார். பல ஆண்டுகளாக பலநூறு பசுக்களை கசாப்புக்கடைகளுக்கு இவர் அனுப்பியிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு தன் தந்தை இறந்தபோது ஜே இந்த பண்ணையை பொறுப்பேற்றார். குடும்பத் தொழிலை தொடரவேண்டிய நிர்பந்தம்.

“ஒரு பண்ணையை நீங்கள் பொறுப்பேற்கும்போது அதை எதிர்காலத்திலும் உயிரோட்டத்துடன் வைத்திருக்கவேண்டிய கடமையும் வந்து சேர்கிறது. இந்த விலங்குகளை இரண்டு மூன்று ஆண்டுகள் பராமரித்து நன்கு பழகியபின் கசாப்புக்கடைக்கு அனுப்புவது கஷ்டமான விஷயம். அவற்றுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதைப்போல உணர்வீர்கள்”, என்று பிபிசியிடம் கூறினார் ஜே.

தனது பண்ணை மாடுகளை மாமிசத்துக்கு விற்றிருந்தால் அறுபதாயிரம் டாலர்வரை சம்பாதித்திருக்கலாம். ஆனால் பசுக்களின் சுதந்திரமே முக்கியமென அவர் முடிவெடுத்தார்.

தனது பண்ணையில் இனிமேல் விலங்குகளின் எந்தவித பங்களிப்பும் இல்லாத வேகன் மரபுவழி காய்கறிகளையும் தானியப்பயிர்களையும் பயிரிட முடிவு செய்துள்ளார்.

இவரது இந்த திட்டம் லாபம் தருமா என்று ஜேக்கு தெரியாது. ஆனாலும் தன் மனசாட்சி தெளிவாக இருக்கிறது என்கிறார்.

“பசுபாதுகாப்பு நிலையத்தில் லாரியில் இருந்து இறங்கும் பசுக்கள் உற்சாகமாக துள்ளிக்குதித்து வயலில் ஓடும்போது ஹையா விடுமுறைக்காக வேறு இடம் வந்திருக்கிறோம் என்று நினைக்கக்கூடும் என்றே நான் நம்புகிறேன்”, என்றார் ஜே வைல்ட் என்கிற பிரிட்டிஷ் விவசாயி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்