சினிமா விமர்சனம்: ஸ்பைடர் மேன் - ஹோம்கமிங்

  • 9 ஜூலை 2017

திரைப்படம் : ஸ்பைடர் மேன் - ஹோம்கமிங்

நடிகர்கள்: டாம் ஹாலண்ட், மிச்செல் கீடன், ராபர்ட் டானி ஜூனியர், மாரிஸா டொமெய்;

காமிக்ஸ் கதை வடிவம்: ஸ்டான் லீ, ஸ்டீவ் திட்கோ;

இயக்கம்: ஜான் வாட்ஸ்.

ஸ்பைடர் மேன் படங்களுக்கேன்றே ஒரு துவக்கம் உண்டு. கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு சிலந்தி, பீட்டர் பார்க்கரைக் கடித்துவிட அவனுக்கு சிலந்தியைப் போல பல சக்திகள் கிடைத்துவிடும். இந்தத் துவக்கம் பல படங்களில் பார்த்து சலித்துப்போன ஒரு துவக்கம். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் Spiderman - Home Coming, முற்றிலும் வேறு மாதிரியாகத் துவங்குகிறது.

2016ல் வெளியான Captain America: Civil War படத்தில் ஒரு சிறிய சாகஸத்தில் ஸ்பைடர் மேனும் ஈடுபடுவார். அதன் தொடர்ச்சியே இந்தப் படம்.

அந்தப் படத்தில் அவெஞ்சர்களோடு சேர்ந்து சாகசம் செய்த பிறகு, மீண்டும் ஒரு சாகசத்திற்காக ஏங்குகிறான் பீட்டர் பார்க்கர். ஆனால், அவனுடைய வழிகாட்டியும் குருவுமான டோனி ஸ்டார்க், அதாவது அயர்ன் மேன், பீட்டர் பார்க்கரைப் பள்ளிக்கூடத்திற்கே திரும்பும்படி சொல்கிறார். ஆனால், சும்மா இருக்க முடியாமல் பீட்டர் பார்க்கர் சின்ன சின்ன சாகசங்களைச் செய்கிறான்.

இதற்கிடையில், பல விசித்திரமான சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்கும் ஆட்ரியன் டூமஸுடன் மோத நேர்கிறது. அந்த மோதலில் சொதப்பிவிட, உதவிக்கு வரும் அயர்ன் மேன், பீட்டர் பார்க்கரின் ஸ்பைடர் மேன் ஆடையை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்.

பிறகு ஒரு சொதப்பலான ஒரு ஸ்பைடர் மேன் ஆடையை அணிந்தபடியே, பல சாகசங்களைச் செய்து வில்லனைக் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்து அயர்ன் மேனின் பாராட்டைப் பெறுகிறான் பீட்டர் பார்க்கர்.

துவக்கம் மட்டுமல்ல, முழுவதுமே மாறுபட்ட ஒரு ஸ்பைடர் மேன் சாகஸம்தான் இது. இதற்கு முந்தைய ஸ்பைடர் மேன் படங்களில், அந்தப் பாத்திரத்தோடு ரசிகர்கள் ஒன்ற முடியாத அளவுக்கு சூப்பர் ஹீரோ தனத்தோடு இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் பீட்டர் பார்க்கர் படிக்கும் பள்ளிக்கூடம், அவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள், காதல் என ஒரு ரொமான்டிக் காமெடிக்கான பாணியில் அமைந்திருப்பது ரொம்பவுமே ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

படம் துவங்கி வெகு நேரத்திற்குப் பிறகே, ஸ்பைடர் மேனின் முதல் ஆக்ஷன் நடக்கிறது; போதுமான அளவுக்கு விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றும் சிலர் குறைபடலாம். ஆனாலும் எங்கேயுமே, தொய்வு ஏற்படவில்லை. ஒரு அழுகாச்சி அத்தைக்குப் பதிலாக, சிறுவயது அத்தையும் தந்தையும்கூட ஸ்பைடர் மேனுக்கு வருகிறார்கள்.

ஹீரோவே, சாதாரணமாக இருக்க முடியும் என்கிறபோது, வில்லனும் அதே மட்டத்திற்கு இறங்கிவருகிறார். ஒரு பயங்கரமான வில்லனாக இல்லாமல், குடும்பத்தின் மீது அதீத பாசம் வைத்திருக்கும் தந்தைதான் வில்லன். அந்த வில்லனின் மகளைத்தான் ஹீரோ காதலிக்கிறார். ஆகவே தமிழ் ரசிகர்களுக்கு படம் இன்னும் நெருக்கமாகிறது.

தவிர, அவ்வப்போது ஸ்பைடருக்கு கைகொடுக்க அயர்ன் மேன் வருவதும் குழந்தைகளை மிகவும் குதூகலப்படுத்தக்கூடும்.

முந்தைய படங்களில் ஸ்பைடராக நடித்த டோபி மகெய்ர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஆகியோரைவிட டாம் ஹாலண்ட் பொருத்தமாக இருப்பதாகவே படுகிறது. வில்லனாக வரும் மிச்செல் கீடெனும் படத்திற்கு ஒரு ப்ளஸ்.

பீட்டர் பார்க்கராக ஒரு இயல்பான வாழ்வை வாழ்வதா அல்லது ஸ்பைடர் மேனாக இருந்து, உலகத்தைக் காப்பதா என்ற போராட்டம்தான் இந்தப் படங்களின் அடிநாதமாக இருக்கும். ஆனால், Spiderman - Home Comingல், பீட்டர் பார்க்கர் சாகசங்களுக்காகத் துடிக்கிறான்.

அந்த வகையில், இந்த ஸ்பைடர் மேன் வரிசை படங்களுக்கு மீண்டும் ஒரு துவக்கப் புள்ளி அமைந்திருக்கிறது. சில அளவுகோல்களில், சமீப காலங்களில் வந்த ஸ்பைடர் படங்களில் சிறந்த படம் என்றுகூட இந்தப் படத்தைச் சொல்லலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்