சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிப்பதாக புகார்! ஆதாரம் அழிக்கப்பட்டதாக டிஐஜி அறிக்கை

  • 15 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Facebook
Image caption எனது விடியோ ஆதாரங்கள் அழிப்பு: டிஐஜி ரூபா

பெங்களூரு சிறையில் அதிமுக "அம்மா அணி" பொதுச் செயலாளர் சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அப்துல் கரீம் தெல்ஹி ஆகியோருக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் தொடர்பான தனது விடியோ ஆதாரங்கள், சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சிறைத்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ரூபா ஜி.மொடுகில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது துறை மேலதிகாரியும் சிறைத்துறை தலைமை இயக்குநருமான (டிஜிபி) எச்.என்.சத்யநாராயணா ராவிடம் டிஐஜி ரூபா சில தினங்களுக்கு முன்பு அறிக்கை அளித்திருந்தார்.

அதில் சத்யநாராயணா மீதே ஊழல் புகாரை ரூபா சுமத்தியிருந்த நிலையில், சனிக்கிழமை இரண்டாவது அறிக்கையை அவர் அளித்துள்ளார்.

சசிகலா, தெல்ஹிக்கு சலுகைகள்

முதலாவது அறிக்கையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தமது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருடன் சேர்த்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட வி.கே.சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹார சிறையில் தனி சமையலறை, உதவியாளர் வசதிகள் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

அந்த வசதிகளை அளிப்பதற்காக தமது உயரதிகாரியான சத்யநாராயணராவுக்கு ரூபாய் ஒருகோடியும், மீதமுள்ள அதிகாரிகள், ஜெயில் வார்டன்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூபாய் ஒருகோடியும் பகிர்ந்து வழங்கப்பட்டதாக ரூபா தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில், முத்திரைத்தாள் மோசடி வழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்துல் கரீம் தெல்ஹிக்கும் அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் உயர் ரக மெத்தை அடங்கிய படுக்கை வசதி, தண்ணீர் கேன், எல்இடி தொலைக்காட்சி போன்றவையும் உள்ளதாக ரூபா கூறியிருந்தார்.

அதிகாரிகளின் தீடீர் ஆய்வு

இதையடுத்து கர்நாடக சிறைத் துறை கூடுதல் தலைவர் வீரபத்ரசாமி, சசிகலா, தெல்ஹி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகங்களை வெள்ளிக்கிழமை இரவு பார்வையிட்டார்.

Image caption கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா

இந்நிலையில் சனிக்கிழமை காலையில் சில அதிகாரிகளுடன் டிஜிபி சத்யநாராயணராவ் சிறை வளாகத்துக்குச் சென்று பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரம் அவர் அங்கு இருந்து விட்டு திரும்பினார்.

அவர் புறப்பட்ட சில மணி நேரத்தில் டிஐஜி ரூபாவும் சிறை வளாகத்துக்கு வந்தார். சிறைத்துறை ஊழியர்கள் சிலரிடம் அவர் பேசிய பிறகு சத்யநாராயண ராவ் அலுவலகத்துக்குச் சென்றார்.

2-ஆவது அறிக்கை தாக்கல்

பின்னர் வெளியே வந்த ரூபா செய்தியாளர்களிடம் பேசும்போது, "எனது இரண்டாவது அறிக்கையை சமர்ப்பித்து விட்டேன். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE
Image caption முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அப்துல் கரீம் தெல்கி

தனது இரண்டாவது அறிக்கை நகலை சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ், உள்துறைச் செயலாளர், கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக ரூபா கூறினார்.

"ரூபாவின் அறிக்கையில் ஊடகங்களுக்கு தனது அறிக்கையை வலியச்சென்று கசியவிடவில்லை. இது பற்றி விசாரணை நடத்தினால் அதற்கு ஒத்துழைக்கத் தயார். சிறையில் சேகரித்த ஆதாரங்களை அழித்து விட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளதாக இந்திய தொலைக்காட்சிகளில் சனிக்கிழமை செய்திகள் ஒளிபரப்பாகின.

ஆதாரங்கள் அழிப்பு

இதையடுத்து ரூபாவிடம் செய்தியாளர்கள் பேச முயன்றபோது, "சிறையில் ஆய்வுக்காக நான் சென்றபோது எனது செல்லிடப்பேசியில் தொலைத்தொடர்பு வசதி இயங்கவில்லை.

அதனால் சிறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கேமிராவை எடுத்துச் சென்று சில பகுதிகளை படம் பிடித்தேன். பின்னர் அந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஒரு பென் டிரைவில் பதிவேற்றம் செய்து தருமாறு கூறினேன்.

ஆனால், சிறையில் உள்ள அதிகாரிகள் எனக்கு எதிராக இருந்தனர். நான் பதிவு செய்த ஆதாரங்களை அழித்து விட்டனர். என்னிடம் வேறு ஆதாரங்களும் உள்ளன. அவற்றை உள்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளேன்" என்றார்.

தனது உயர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி அவரிடமே அந்த விவகாரம் பற்றி ரூபா அளித்த அறிக்கை, கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸுக்கு மட்டுமின்றி தமிழகத்திலும் ஆளும் முதல்வர் பழனிசாமி அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

வலைபதிவீட்டாளர்கள் ஆதரவு

டிஐஜி ரூபாவை "ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர்" ஆக சில தொலைக்காட்சிகளும் வலைபதிவீட்டாளர்களும் புகழந்து வருகின்றனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், ரூபாவின் டுவிட்டர் முகவரியைக் குறிப்பிட்டு, அவரது சேவையைப் பாராட்டினார்.

படத்தின் காப்புரிமை Twitter

"எங்கு பணியமர்த்தப்பட்டாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்லவும். நீங்கள் நாட்டுக்குத் தேவை. உங்களைப் போல இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை இளைய தலைமுறைக்கு நீங்கள் அளிப்பீர்கள்" என்று கிரண் பேடி கூறினார்.

அதற்கு பதில் பதிவிட்ட ரூபா, "உங்களின் ஆதரவான வார்த்தை, நூறு யானைகளின் பலத்துக்கு ஒப்பானது" என்று கூறினார்.

சசிகலா ஆதரவாளர் விளக்கம்

இதற்கிடையே சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்று கர்நாடகத்தில் உள்ள அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறினார்.

அதே சமயம், டிஐஜி ரூபாவின் செயலை ஆதரிப்பதாக தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு தெரிவித்தார்.

விசாரணை குழு அமைப்பு

இந்த நிலையில் சிறை விதிகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன் என்று ரூபாவுக்கும் அம் மாநில சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவுக்கும் கர்நாடக உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸுக்கு ரூபா பதில் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே சிறையில் ஊழல் நிலவுவதாக ரூபா அளித்த அறிக்கை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் உயதிகாரி வினய் குமாரை கர்நாடக முதல்வர் சித்தராமையா நியமித்துள்ளார்.

வினய் குமார் குழு சிறை வளாகத்துக்குச் சென்று விசாரணை நடத்தும் முன்னரே, புகார் சர்ச்சையில் சிக்கியுள்ள கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்யநாரயணராவ், ரூபா ஆகியோர் அடுத்தடுத்து பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சனிக்கிழமை சென்று வந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்