தமிழ் திரையுலகினர் அரசியல் களத்தில் சாதித்தனரா? சறுக்கினரா?

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கமல் அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற யூகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியதையடுத்தே இந்த யூகங்கள் எழுந்தன.

படக்குறிப்பு,

கமல் அரசியலில் ஈடுபடப்போகிறாரா?

இதனிடையே, இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தபோதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென்னிந்திய திரையுலகில் உள்ள அரசியல் களத்தில் நுழைந்து வெற்றி மற்றும் தோல்வியடைந்த திரையுலக பிரபலங்கள் குறித்து ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.

மூன்றெழுத்து மந்திரம் எம் ஜி ஆர்

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராகவும், மிகுதியான ரசிகர்களை கொண்டவருமான எம் ஜி ராமச்சந்திரன் (எம் ஜி ஆர் ) வாழ்க்கையை திமுகவில் துவங்கினார். 1967 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் தேர்தல்களில் அவர் திமுகவின் சார்பாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1972-ஆம் ஆண்டு எம் ஜி ஆர் அதிமுகவை துவக்கினார்.

படக்குறிப்பு,

மோதிய தலைவர்கள்

1977-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த எம் ஜி ஆர் , 1987-ஆம் ஆண்டு இறக்கும் வரை 3 சட்டமன்ற தேர்தல்களில் வென்று முதல்வராக நீடித்தார்.

தமிழ் திரையுலகில் இருந்து அரசியல் களத்துக்கு வந்து பெரும் வெற்றி பெற்றது எம் ஜி ஆர் மட்டுமே.

படக்குறிப்பு,

எம்.ஜி.ஆர்

வந்தார்; வென்றார்; சென்றார் - ஜெயலலிதா

100 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதா, அதிமுகவில் சேர்ந்ததும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக, மாநிலங்களவை உறுப்பினராக , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக, அதிமுகவின் பொது செயலாளராக பின்னர் தமிழக முதல்வராக விஸ்வரூபம் எடுத்தது எல்லாம் ஆரம்ப காலத்தில் அவரை அறிந்தவர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஆகும்.

2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ஆம் தேதியன்று காலமானார்.

சினிமாவில் வெற்றி; அரசியலில் தோல்வி - இது சிவாஜி

ரசிகர்கள் மற்றும் திரையுலக போட்டியில் எம்ஜிஆருக்கு இணையாக கருதப்பட்ட சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின்னர், தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார் சிவாஜி. 1989-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. திருவையாறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கட்சித்தலைவர் சிவாஜியும் தோல்வியடைந்தார்.

பின்னர் தமிழக ஜனதாதள கட்சி தலைவராக பொறுப்பு வகித்த சிவாஜி சிறிது காலம் கழித்து அரசியலில் இருந்து விலகினார். சினிமாவில் பெரும் வெற்றி ஈட்டிய சிவாஜி, அரசியலில் பெரிதாக சாதிக்கவில்லை.

சட்டமன்ற உறுப்பினராக, முதல்வராக சாதனை படைத்த 'வசனகர்த்தா'

நடிகர்கள், நடிகைகள்தான் அரசியல் வானில் ஒளி வீச முடியுமா?

பராசக்தி, மனோகரா போன்ற திரைப்பட வசனங்களால் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த கருணாநிதி, திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இடம்பெறாத போதும் பின்னர் விஸ்வரூப வளர்ச்சி கண்டார்.

படக்குறிப்பு,

சாதனை படைத்த 'வசனகர்த்தா' கருணாநிதி

1957-ஆம் ஆண்டு குளித்தலையில் தொடங்கிய கருணாநிதியின் சட்டமன்ற தேர்தல் பயணம் இன்று வரை வெற்றிப் பயணமாகவே இருந்து வருகிறது.

1969-ஆம் ஆண்டு முதல் திமுகவின் தலைவராக இருந்து வரும் கருணாநிதி, 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளார்.

அரசியலில் இலட்சிய நடிகருக்கு வெற்றியா?

` பராசக்தி` திரைப்படம் மூலம் பிரபலமடைந்த எஸ் எஸ் ராஜேந்திரன், இலட்சிய நடிகர் என்று அறியப்பட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தமிழக அரசியலில் எஸ் எஸ் ராஜேந்திரன் செயல்பட்டார். திமுகவின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், பின்னர், அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் சார்பாக ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படக்குறிப்பு,

எஸ் எஸ் ராஜேந்திரன்

பின்பு அரசியலிருந்து அவர் ஓய்வுபெற்றார்.

வருவாரா? மாட்டாரா? ரஜினி

நீண்ட காலமாகவே தமிழகத்தில், ஏன் இந்தியாவெங்கும் பலரும் அறிய விரும்புவது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? அல்லது வர மாட்டாரா என்பதுதான்.

கடந்த மே மாதத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை புகைப்படம் எடுப்பதற்காக சந்தித்தபோது, மேடைகளில் கூறிய கருத்துகள் அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதோ என்ற நீண்ட நாள் சந்தேகத்தை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது.

படக்குறிப்பு,

அரசியலுக்கு ரஜினி வருவாரா?

ஆனால், ரஜினிக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அரசியல் அபிலாஷைகள் எத்தகையவை? அவரால் அரசியல் களத்தில் வெற்றிபெற முடியுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

நடிகர் சங்க தலைவர் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரானார்

எவ்வித பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு நுழைந்த விஜயகாந்த் , தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை 2005-ஆம் ஆண்டில் தொடங்கி 2006-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேமுதிக சார்பாக வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.

2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக ஆனது மிகப் பெரிய வளர்ச்சியாக பார்க்கப்பட்டது.

ஆனால், 2014 மற்றும் 2016 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த்தின் கட்சி எந்த வெற்றியும் பெறவில்லை. விஜயகாந்தும் 2016 தேர்தலில் தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

அரசியலில் தான் இருக்கிறாரா கார்த்திக்?

'நவரச நாயகன்' என்றழைக்கப்பட்ட நடிகர் கார்த்திக், அரசியலில் நுழைந்தது யாரும் எதிர்பாராத ஒன்று.

அனைத்து இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்த கார்த்திக், அக்கட்சி மாநில செயலாளராக இருந்தார்.

பின்னர், நாடாளும் மக்கள் கட்சியை துவக்கிய கார்த்திக், விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். தேர்தல் காலத்தில் மட்டும் பிரசாரம் செய்வது, அறிக்கைகள் விடுவது என கார்த்திக் இன்னமும் ஒரு தீவிர அரசியல்வாதியாக உருவெடுக்கவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்.

அரசியலில் சரத்குமார் சாதித்தாரா?

திரைப்படங்களில் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்த போது திமுகவுக்காக 1996-ஆம் ஆண்டு சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 1998- ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக பின்னர் செயல்பட்டார்.

படக்குறிப்பு,

சரத்குமார்

அதிமுகவின் சில காலமே இருந்த சரத்குமார், அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி கட்சியை தொடங்கி 2011-இல் இரண்டு இடங்களில் வென்றார். ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்தார்.

அடுக்கு மொழி அரசியலில் வென்றதா?

நீண்ட காலமாக திமுகவில் இருந்து வந்த நடிகர் மற்றும் இயக்குநர் விஜய் டி ராஜேந்தர், அனைத்து இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தை 2004-ஆம் ஆண்டில் தொடங்கினார். அரசியலில் இக்கட்சி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை.

இன்னமும் பலர்

நடிகை லட்சுமி, இயக்குனர் ராம நாராயணன், கருணாஸ், நெப்போலியன், வாகை சந்திரசேகர், குமரிமுத்து, பாக்யராஜ், நமீதா, மனோபாலா, விந்தியா,ஆனந்த்ராஜ் என பல நடிகர்கள் மற்றும் திரையுலகினர் அவ்வப்போது அரசியலில் சிறு வெற்றியை பெற்றாலும் யாரும் பெரிதாக சாதிக்கவில்லை.

ஆனாலும், இன்றளவும், தமிழ் திரையுலகினர் யாராவது அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக செய்தி வந்தால் மக்களிடையே அதற்கு ஈடுபாடு உள்ளது. ஆனால், இவை அரசியலில் பெரும்பாலும் வாக்குகளாக மாறுவதில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்.

தொடர்பான செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்