வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதாக சினிமா தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு

  • 3 ஆகஸ்ட் 2017
Image caption வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதாக ஃபெப்சி அறிவிப்பு

பல்வேறு விவகாரங்களின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஃபெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக அறிவித்திருக்கிறது.

பல்வேறு சினிமா தொழிலாளர் அமைப்புகளை உள்ளடக்கிய ஃபெப்சி கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. மதுரையில் நடந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு, தொழிலாளர்களால் நிறுத்தப்பட்டதால் ஃபெப்சி அமைப்புடன் இணைந்து வேலை பார்க்கப்போவதில்லையென தயாரிப்பாளர்கள் அறிவித்ததையடுத்தும் புதிய ஊதிய விகிதங்களை அறிவிக்கக்கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றுவந்தது.

படத்தின் காப்புரிமை Twitter

ஆனால், தயாரிப்பாளர் சங்கம் ஃபெப்சியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. பிற தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்தப்போவதாக அறிவித்தது. ரஜினிகாந்த் நடித்துவரும் காலா, விஜய் நடித்துவரும் மெர்சல் உள்ளிட்ட சுமார் 35 படங்களின் படப்பிடிப்புகள் இதனால் பாதிக்கப்பட்டன.

இருந்தபோதும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சிதம்பரத்தில் நடைபெற்றுவந்தது.

இதையடுத்து தமிழக தொழிலாளர் நலத்துறையிடம் ஃபெப்சி மனு அளித்தது. தயாரிப்பாளர் சங்கம் தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. ஆனால், அப்படி பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஃபெப்சி மூன்று நாட்களாக நடந்துவந்த வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு நாளை பணிக்குத் திரும்பப் போவதாக அறிவித்தார்.

"நாளை தயாரிப்பாளர் சங்கத்துடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடக்குமென எதிர்பார்க்கிறோம். முன்பு பேச்சுவார்த்தைக்கு வர மறுத்த தயாரிப்பாளர்கள் தற்போது பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பதால் வேலை நிறுத்தத்தைக் கைவிடுகிறோம்" என செல்வமணி அறிவித்தார்.

இருந்தாலும் நாளை பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. "அவர் சிதம்பரத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் துணைத் தலைவரோடு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்" என்றார் செல்வமணி.

படத்தின் காப்புரிமை Vishal Film Factory

ஃபெப்சி அமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தாமல் அனைவருக்கும் வேலை அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார்.

ஃபெப்சியில் சினிமா துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 23 அமைப்புகள் உறுப்பினராக உள்ளன. இதில் டெக்னீஷியன் பிரிவுதான் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக தயாரிப்பாளர் சங்கம் குற்றம்சாட்டிவந்தது. அவர்களைத் தவிர்த்த பிறருடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது.

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக தொழிலாளர் தரப்பில் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக ஃபெப்சி தெரிவித்திருக்கிறது.

வேலைக்குத் திரும்புவது என்பது பின்னடைவல்ல என்றும் ஃபெப்சியின் தலைவர் செல்வமணி தெரிவித்திருக்கிறார்.

ஃபெப்சியின் இந்த முடிவுகுறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், "ஃபெப்சியின் முடிவு குறித்து மகிழ்ச்சி. ஆனால், முன்பே கூறியபடி ஃபெப்சியோடு மட்டுமல்லாமல் பிறருடனும் இணைந்து வேலைபார்ப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்