சினிமா விமர்சனம்: மகளிர் மட்டும்

  • கே. முரளீதரன்
  • பிபிசி தமிழ்
ஜோதிகா

'குற்றம் கடிதல்' மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரம்மாவின் அடுத்த படம் என்பதாலும் '36 வயதினிலே'வுக்குப் பிறகு ஜோதிகா நடித்திருக்கிறார் என்பதாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த திரைப்படம் இது.

பள்ளிக்காலத்தில் ஒரே விடுதியில் தங்கியிருந்து, அட்டகாசம் செய்யும் மூன்று தோழிகள் - கோமாதா (ஊர்வசி), ராணி (பானுப்ரியா), சுப்புலட்சுமி (சரண்யா). படிக்கும் காலத்திலேயே ஒரு சிறு பிரச்சனையால் பிரிந்துவிடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து கோமாதாவின் வருங்கால மருமகள், பிரபாவதி (ஜோதிகா) இவர்கள் மூவரையும் ஒன்றாக இணைக்கிறார்.

ஒவ்வொருவரும் தங்கள் தினசரிக் கடமைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்க, அவர்களை மூன்று நாட்கள் அதிலிருந்து விடுவித்து ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். இந்தப் பயணத்தின் முடிவில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கின்றன.

குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள்ளும் பெண்கள், பெரும்பாலும் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும், அவர்களது குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்பதுதான் படத்தின் மையமான கரு.

இதைச் சொல்ல, வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த மூன்று பெண்களை இணைத்து அவர்களது பிரச்சனைகளைச் சொல்கிறார் இயக்குநர்.

ஆனால், இந்தப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எங்கேயுமே அழுத்தமாக வெளிப்படவில்லை.

பெரும்பாலான காட்சிகள் மிக மெதுவாக, எவ்வித சுவாரஸ்யமுமின்றி நகர்கின்றன.

நகைச்சுவையை ஏற்படுத்த முயலும் சில குறும்புத்தனமான காட்சிகளும், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

அதனால், படம் துவங்கி சிறிது நேரத்திலேயே சலிப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது.

ஏதோ ஒரு பிரச்சனை, அதன் முடிவை நோக்கிய உச்சகட்டக் காட்சிகள் என்று எதுவும் இல்லாததால், க்ளைமாக்ஸில் எதிர்பார்க்க படத்தில் எதுவுமே இல்லை.

ராணிக்கு ஏற்படும் பிரச்சனையும் படத்தின் பிற்பகுதியிலேயே தீர்க்கப்பட்டுவிடுகிறது.

ஆக, படத்தில் சீக்கிரமே ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான தன்மை ஏற்பட்டுவிடுகிறது.

பிரபாவதியின் பாத்திரப்படைப்பு படு செயற்கையாக இருக்கிறது.

இந்தப் படத்தில் வரும் ஒரு காதல் ஜோடிக்கு சங்கர் - கவுசல்யா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உடுமலைப்பேட்டை சங்கரைப் போலவே இந்த சங்கரும் வெட்டப்படுகிறார்.

ஆனால், எதற்காக வெட்டப்படுகிறார் என்பதைச் சொல்லாமல் மேலோட்டமாக கடந்துபோகிறார்கள். இந்தப் படத்தில் பேசப்படும் பெண்ணியமும் அப்படித்தான், மேலோட்டமாக கடந்துசெல்கிறது.

பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி ஆகியோர் ஏற்கனவே தேர்ந்த நடிகைகள். குறிப்பாக அம்மா பாத்திரங்களில் வெளுத்துக்கட்டியவர்கள் என்பதால் இந்தப் படத்தில் பெரிய ஆச்சரியமெதையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.

ஆனால், சின்னச் சின்ன பாத்திரங்களில் வரும் லிவிங்ஸ்டன், மாதவன், நாசர் போன்றவர்கள் ஆசுவாசமேற்படுத்துகிறார்கள். அதேபோல, ராணியின் மகனாக நடித்திருக்கும் பாவல் நவகீதனும் பாராட்ட வைக்கிறார்.

பயணக் காட்சிகளை அதிகம் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ரசிக்கவைக்கிறது. இசையும் ஓகே. படத்தில் வரும் சில 'பெண்ணிய' வசனங்களுக்கு திரையரங்குகளில் பெரும் கைதட்டல் கிடைக்கிறது.

வீட்டில் புறக்கணிக்கப்படும் பெண்களைப் பற்றி பேச விரும்பிய இயக்குநர், சற்று வலுவான காட்சிகளை யோசித்திருக்கலாம். மிக மெதுவான பல காட்சிகளையும் நீக்கியிருக்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :