சினிமா விமர்சனம்: ஸ்பைடர்

திரைப்படம் ஸ்பைடர்
நடிகர்கள் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பரத், ஆர்.ஜே. பாலாஜி, ஜெயபிரகாஷ்
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ்

தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து, தெலுங்கிலும் தமிழிலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் இது. கத்தி படத்திற்குப் பிறகு, முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளிவரும் படம் என்பதாலும் இந்தப் படம் குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

ஹைதராபாதில் அரசுக்காக தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் பணியில் சேர்கிறார் சிவா (மகேஷ் பாபு). இதன் மூலம் பல குற்றங்களை நடப்பதற்கு முன்பாகவே தடுக்கிறார். ஒரு நாள், ஒரு இளம் பெண் தன் தோழிக்கு அச்சத்துடன் பேசும் பேச்சை ஒட்டுக்கேட்கும் சிவா, ஒரு பெண் காவலரை அங்கு அனுப்புகிறார்.

மறுநாள் இருவருமே துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் கொலைகளைச் செய்த சுடலை என்ற ஒரு இளைஞனை (பரத்) தேடிப் பிடிக்கிறான் சிவா.

ஆனால், உண்மையில் சுடலை என்பது அந்த இளைஞனின் அண்ணன் (எஸ்.ஜே. சூர்யா) எனத் தெரியவருகிறது. சுடலை ஏன் இப்படிக் கொலைகளைச் செய்கிறான் என்பதும் அவனை எப்படி சிவா முறியடிக்கிறான் என்பது மீதிக் கதை.

ஒரு 'சைக்கலாஜிகல்' த்ரில்லரை முயற்சித்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். படம் துவங்கும்போது, நாயகன் பணியாற்றும் இடம் எங்கும் நீல வண்ணத்தில் பெரிய, பெரிய கணிணித் திரைகள், எதை வேண்டுமானாலும் 'ஹாக்' செய்வது என்பதையெல்லாம் பார்க்கும்போது, மற்றொரு 'விவேகமோ' என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஆனால், சிறிது நேரத்திலேயே படம் திசை மாறிவிடுகிறது.

ஒரு கொடூரமான கொலை சம்பவம், அதைச் செய்தது யார் என்பதற்கான தேடல். அந்தத் தேடலில் அதைவிட பெரிய பயங்கரம் தெரியவருவது என ஒரு ஸ்காண்டிநேவிய த்ரில்லருக்கான அனைத்து சாத்தியங்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன.

குறிப்பாக, சுடலை என்று நினைத்து, அவரது தம்பியைப் பிடித்த பின் நடக்கும் சம்பவங்கள் படத்தின் மிகச் சிறந்த காட்சிகள்.

ஆனால், வெகு சீக்கிரத்திலேயே புத்திசாலித்தனமாக குற்றவாளியைப் பிடிப்பதற்குப் பதிலாக நாயகன் தன் சாகஸங்களின் மூலம் குற்றவாளியை நெருங்கும்போது படம் ஏமாற்றமளிக்க ஆரம்பிக்கிறது.

குறிப்பாக, மலை மீதிருக்கும் பெரிய பாறை உருண்டுவருவதை, நாயகன் கண்டெய்னர் லாரி மூலம் நிறுத்துவது, இறுதிக் காட்சியில் நடக்கும் சண்டைகள் போன்றவை, ஒரு நல்ல த்ரில்லருக்கு உரிய காட்சிகள் அல்ல.

தவிர, நாயகனும் அவரது நண்பர்களும் நினைத்தால் எந்த கேமராவை வேண்டுமானாலும் ஹேக் செய்வது, தொலைக்காட்சி ஒளிபரப்பை இடைமறித்து, தாங்கள் விரும்பியதை ஒளிபரப்புவது போன்ற காட்சிகளும் மோசமான க்ராஃபிக்ஸும் படத்தை ரசிக்க மேலும் சில தடைகள்.

இதையெல்லாம்விட சுட்டிக்காட்ட வேண்டிய முக்கியப் பிரச்சனை, வில்லனாக வரும் சுடலைக்கு கொலைசெய்ய ஆசை ஏன் வருகிறது என்பதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் ஃப்ளாஷ் பேக்.

சுடலை சிறுவனாக இருக்கும்போது சுடுகாட்டில் பணியாற்றும் தந்தையுடன் வசிக்கிறான். அங்கு வரும் பலரும் அழுவதைப் பார்க்கும்போது சுடலைக்கு இன்பம் ஏற்படுகிறது. ஆகவே, சுடலை பல கொலைகளைச் செய்து இன்பமடைகிறான் என்று போகிறது கதை.

ஏற்கனவே சமூகத்திலிருந்து புறக்கணக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் குறித்து, மேலும் மோசமான பிம்பத்தை இந்தப் படம் உருவாக்கக்கூடும்.

மகேஷ் பாபு ஓர் ஆவேசமான நடிகரில்லை. இந்தப் படமும் அப்படி ஒரு நடிப்பைக் கோரவில்லையென்பதால், மனிதர் பெரிதாக வசீகரிக்கவில்லை.

நாயகியான ரகுல் ப்ரீத் சிங், மிகச் சில காட்சிகளிலும் பாடல்களிலுமே வருகிறார். அந்தக் காட்சிகளும் படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கின்றன.

பரத், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோருக்கு மிகச் சிறிய பாத்திரங்கள்.

சுடலையாக வரும் எஸ்.ஜே. சூர்யாவுக்குத்தான் இந்தப் படம் குறிப்பிடத்தக்க படம். கதையில் அறிமுகமானதிலிருந்து முடியும் வரை தன் பாணியில் தொடர்ந்து ரசிக்க வைக்கிறார். இவருக்குப் பதிலாக வேறொருவர் நடித்திருந்தால், படம் எந்தவிதத்திலும் ரசிக்க இடமின்றிப் போயிருக்கும்.

ஒரு மிகச் சிறந்த த்ரில்லராக உருவாகியிருக்க வேண்டிய திரைப்படம், சாதாரண ஆக்ஷன் படமாகியிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்