சினிமா விமர்சனம்: கருப்பன்

ரேணிகுண்டா படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தைத் திருப்பிய இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கிய படம். அந்தப் படத்தில் புதிய இடம், புதிய கதை, புதுமுகங்கள் என ஆச்சரியப்படுத்தியவர், இந்தப் படத்தின் மூலம் பல ஆண்டுகள் பின்னுக்குச் சென்றிருக்கிறார்.

கீரிப்பட்டியைச் சேர்ந்த கருப்பன் மாடு பிடிக்கும் வீரன். ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில், தன் மாட்டைப் பிடித்தால் தன் தங்கை அன்புவை திருமணம் செய்துவைப்பதாகச் சொல்கிறான் மாயி. அதன்படி மாட்டைப் பிடித்து, அன்புவைத் திருமணம் செய்கிறான் கருப்பன்.

அன்புவை கல்யாணம் செய்ய விரும்பிய கதிர் இதில் அதிர்ச்சியடைகிறான். கருப்பனையும் அன்புவையும் பிரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறான். அம்மாதிரி சூழ்ச்சியால் மாயியும் கருப்பனும் பகையாளியாகிறார்கள். உள்ளூர் கந்துவட்டிக்காரனின் பகையும் ஏற்படுகிறது. முடிவில் எல்லாம் சுபம்.

திரைப்படம் கருப்பன்
நடிகர்கள் விஜய் சேதுபதி , பாபி சிம்ஹா, தான்யா
இசை டி. இமான்
இயக்கம் பன்னீர்செல்வம்

இந்தப் படத்தின் பல காட்சிகளைப் பார்க்கும்போது கொம்பன், கிழக்குச் சீமையிலே படங்களில் பார்த்த பல காட்சிகள் நினைவுக்குவருகின்றன. ரொம்பவும் பழைய ஒரு கதையை ரொம்பவும் பழைய திரைக்கதையோடு அளித்திருக்கிறார் பன்னீர்செல்வம்.

ஜல்லிக்கட்டு பற்றி ஏற்கனவே பல கட்டுக்கதைகள் நிலவும் நிலையில், மாட்டைப் பிடித்தால் தன் வீட்டுப் பெண்ணைக் கட்டிக்கொடுப்பதுபோல கதை துவங்குகிறது.

இதற்குப் பிறகு, பல படங்களில் பார்த்துப் பழகிப் போன கணவன் - மனைவி அன்னியோன்ய காட்சிகள். இதற்குப் பிறகு, குடித்துவிட்டு கோவில் விழாவில் கலாட்டா செய்தார் என்ற காட்சியால் கருப்பனும் மாயியும் பிரிகிறார்கள் என்று போகிறது கதை.

துவங்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகே, பிரதானமான சிக்கலுக்குள் வருகிறது படம். இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் எல்லாமே ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை என்பதால், சலிப்பு ஏற்பட ஒரு வழியாக எதிர்பார்த்ததைப் போல படம் முடிகிறது.

நல்ல கதைகளைத் தேர்வுசெய்து நடித்துவந்ததால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார். வழக்கமான நடிப்பு, மேனரிசங்களோடு கடந்துசெல்கிறார் அவர்.

மிகவும் குயுக்தியான வில்லன் பாத்திரம் என்றாலும், பாபி சிம்ஹாவுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. பழங்கால வில்லனைப் போல நடித்து செத்துப் போகிறார் பாபி. பசுபதி, காவேரி, மற்றொரு வில்லனாக வரும் சரத் லோகிதஸ்வா ஆகியோருக்கும் பழகிப்போன பாத்திரங்கள்.

கதாநாயகியா வரும் தான்யா மட்டுமே படத்தில் கவனிக்க வைக்கிறார். ஏற்கனவே பலே வெள்ளையத்தேவா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு புதிய கவனத்தைப் பெற்றுத்தரக்கூடும். அதேபோல, விஜய் சேதுபதியுடனேயே வரும் சிங்கம் புலி சில காட்சிகளில் சிரிக்கவைக்கிறார்.

ஒளிப்பதிவு, இசை போன்றவை பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்தால், ஒரு வேளை ரசிக்கவைத்திருக்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்