சினிமா விமர்சனம்: அவள்

சினிமா விமர்சனம்: அவள்

சில மாதங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ஒரு பேய்ப் படம். தமிழில் வழக்கமாக வெளிவரும் பேய்ப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் என்பது இன்னும் இந்தப் படத்தைக் கவனிக்க வைக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசம். அங்கு வந்து குடியேறுகிறார்கள் மூளை அறுவைசிகிச்சை நிபுணரான கிரிஷும் (சித்தார்த்) அவருடைய மனைவி லக்ஷ்மியும் (ஆண்ட்ரியா). அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டில் பால் (அதுல் குல்கர்னி) என்பவரின் குடும்பம் குடியேறுகிறது.

சில நாட்களுக்குப் பிறகு பாலின் மூத்த மகள் ஜென்னிக்கு (அனிஷா) விபரீதமாக பல சம்பவங்கள் நடக்கின்றன. மனநோயாகக் கருதி சிகிச்சையளிக்க முயற்சிக்கிறார் கிரிஷ். ஆனால், அவளது உடலில் பேய் இருப்பது தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டிலிருந்தே பால் குடும்பத்தினர் வெளியேறிவிட நினைத்தாலும், முடியவில்லை. பேயோட்டவந்த பாதிரியார் அடிபட்டு கோமா நிலைக்குப் போகிறார். அந்த வீட்டில் இருப்பது யாருடைய பேய், ஏன் பாலின் குடும்பத்தைக் குறிவைக்கிறது என்பது மீதிக் கதை.

இந்தப் படத்தின் பல பகுதிகள் ஹாலிவுட் படமான தி கான்ஜூரிங் படத்தை நினைவுபடுத்துகின்றன என்றாலும் தமிழில் இப்படி ஒரு படத்தைப் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 1930களில் கறுப்பு - வெள்ளையில் தமிழுக்கு முற்றிலும் புதிய ஒரு பிரதேசத்தில் படம் துவங்கும்போதே, இது வழக்கமான படமில்லை என்பது புரிந்துவிடுகிறது.

கிரிஷிற்கும் லக்ஷ்மிக்கும் இடையிலான முத்தக் காட்சிகள் நீண்டுகொண்டே போக, பேய் வருமா வராதா என்று யோசிக்க ஆரம்பிக்கும்போது திடுமென படம் திசை மாறுகிறது. அப்போது துவங்கும் பேயின் ஆட்டம் படம் முடியும்வரை நீள்கிறது.

எதிர்பார்க்கக்கூடிய தருணங்களில், சத்தமிட்டு, விகார உருவங்களை திடீரென தோன்றவைத்து அச்சமூட்டும் காட்சிகள் இதிலும் இருக்கின்றன. ஆனால், பல எதிர்பாராத தருணங்களில் முதுகுத் தண்டை சில்லிடச் செய்யும் காட்சிகளும் உண்டு.

உதாரணமாக, வீட்டில் உள்ள ஒரு கருவியிலிருந்து நள்ளிரவில் இசை கேட்க ஆரம்பிக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் பால் எழுந்துவந்து அதை அணைக்கிறார். அவர் சென்ற பிறகு மீண்டும் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. சற்றே குழப்பமடையும் பால் மீண்டும் அதை அணைக்கிறார். பேட்டரிகளையும் அகற்றிவிடுகிறார். மீண்டும் சத்தம் வரும் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அதிலிருந்து சத்தம் வருவதில்லை. ஆனால், பாலின் மகளிடமிருந்து கேட்கும் 'அப்பா' என்றொரு குரலில் திடுக்கிட்டுப் போகிறார் பால். இப்படியான பல காட்சிகள் படத்தில் உண்டு.

அதேபோல படத்தில் வரும் பாத்திரங்களும் நிஜ மனிதர்களைப் போலவே பல பரிமாணங்களையும் சிக்கல்களையும் உடையவர்களாக இருக்கிறார்கள். இது படத்திற்கு ஒரு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. மேலும், படத்தில் வரும் ஒவ்வொருவரும் ஈடுபடும் விஷயங்கள் குறித்து, படத்தின் போக்கிலேயே விரிவாக விவரித்துச் செல்வதும் படத்திற்குள் ஒன்றவைக்கிறது. உதாரணமாக, கதாநாயகன் மூளையில் அறுவைசிகிச்சை செய்வபர் என்பதால், அதைக் காட்டும் காட்சிகள்.

படத்தின் பல காட்சிகள் அதன் அழகான தன்மைக்காக நிச்சயம் நினைவுகூரப்படும். குறிப்பாக, கிரிஷ் தனது கனவில், வீட்டிற்குள் பேய் வந்துவிட்டதாக நினைக்கிறார். அப்போது வீட்டிலிருக்கும் பொருட்கள் அலங்கோலமாக கிடைக்கின்றன. அந்த அலங்கோலம், ஒரு நவீன ஓவியத்தைப் போல இருக்கிறது!

இந்தப் படத்தில் கதாநாயகன் சித்தார்த் என்றாலும், நடிப்பில் உச்சத்தைத் தொட்டிருப்பவர் பால் ஆக நடித்திருக்கும் அதுல் குல்கர்னிதான். தன் மகளை காக்கப் போராடும் தந்தையாக, பேய்கள் மீது நம்பிக்கை இல்லாதவராக, நிராசையடைந்தவராக என சின்னச் சின்ன முகபாவங்களில் சிறந்த நடிகரென நிரூபிக்கிறார் அதுல்.

அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பாலின் மகளாக வரும் ஜென்னியின் பாத்திரத்தில் நடித்திருக்கும் அனிஷா. முதல் படம் என்ற சாயலே அவரிடம் இல்லை. சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோருக்கும் இது முக்கியமான படமாகவே இருக்கும்.

'ஒரு பெண் குழந்தை இறந்துதான் ஆண் குழந்தை பிறக்குமென்றால் அப்படி ஒரு ஆணே தேவையில்லை' என்பதுதான் படத்தின் இறுதியில் சொல்லவரும் விஷயம். ஒரு பேய்ப் படத்தில் இதை எப்படி வலியுறுத்த முடியுமோ, அப்படிச் செய்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனங்கள், ஒளிப்பதிவு என படத்தின் எல்லா அம்சங்களிலுமே கச்சிதமாக இருக்கும் ஒரு பேய்ப் படம் இது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :