தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடு

படத்தின் காப்புரிமை Padmavati

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவதி திரைப்படம் வட இந்தியாவில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்ததையடுத்து, படத்தின் வெளியீடு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படம் 'பத்மாவதி' டிசம்பர் 1 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கிய கர்னி சேனா அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கி அவரின் சட்டையைக் கிழித்தனர்.

கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று கடந்த வாரம் வியாழன்று கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Padmavati

சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு அத்திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.

தொடர் எதிர்ப்புகளின் விளைவாக பத்மாவதி திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வியகாம்18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்திருந்தது.

படத்தின் காப்புரிமை Twitter

இச்சூழலில், ஹரியானா மாநில பா.ஜ.கவின் மூத்த ஊடக ஒருங்கிணைப்பாளரான சுராஜ் பல் அமு, தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சுராஜ் பல் அமுவின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பெண்களுக்கான தேசிய ஆணையம், சுராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஹரியானா மாநில டி.ஜி.பிக்கு கடிதம் ஒன்றை எடுத்தியுள்ளது.

''உயிரோடு இருக்கும்போது எரிக்கப்படுவதின் உணர்வு எப்படியிருக்கும் என்பதை தீபிகா தெரிந்துகொள்ள வேண்டும். தீபிகாவை உயிரோடு எரிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்'' என்று அகில பாரதா சத்திரிய மகாசபையின் இளைஞர் அணியின் தலைவர் புவனேஷ்வர் சிங் அறிவித்துள்ளார்.

பத்மாவதி திரைப்படத்தை தயாரிக்க முதலீடு செய்யப்பட்ட பணம் மத்திய கிழக்கிலிருந்து தாவூத்தால் அனுப்பப்பட்ட பணம் என்று கூறி கர்னி சேனாவின் தலைவர் லோகேந்திர சிங் கல்வி புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்