"அசோக்குமாரின் அகால மரணம் போல் இனி நிகழவிடக்கூடாது" - கமல்

படத்தின் காப்புரிமை Getty Images

கந்துவட்டி கொடுமையால் ஏழை விவசாயிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை பாதிக்கப்படுவதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டுமென்றும், அசோக் குமாரின் அகால மரணம் போல் இனி நிகழவிடக்கூடாது என்றும் நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் உறவினரும், அவரது திரைப்பட நிறுவனத்தின் மேலாளர் மற்றும் இணைத் தயாரிப்பாளருமான அசோக் குமார் என்பவர் கடந்த 21ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கோவையை சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன் தான் கொடுத்த கடனை திரும்பப் பெறுவதற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அசோக் குமார் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கலைத்துறை மற்றும் அரசியலை சார்ந்த பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் நிகழும் விடயங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக கருத்துக்களை பதிவு செய்து வரும் கமல், அசோக் குமார் தற்கொலை விவகாரம் குறித்து நேற்றுவரை கருத்தேதும் தெரிவிக்காத நிலையில், "தன்துறை சார்ந்த துக்கம், தன்னை ஏற்றிவிட்ட துறையில் பெரும்துயரம் பகிர்ந்து கொள்ளா கொடூர அமைதி திடீர் டுவிட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான்வேண்டும்!" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல், "கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் கருத்து வேறுபாடு?

அசோக் குமாரின் உறவினரான சசிகுமார், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தத்துடன், மைத்துனர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஒரு காலில் அலைச்சறுக்கல்; அசத்தும் வீரர்

மேலும், இதுகுறித்து இயக்குனர்கள் அமீர், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பார்த்திபன், பிரகாஷ் ராஜ் போன்ற பலரும் தங்களது இரங்கலையும், சினிமாத்துறையில் நிலவும் கந்துவட்டி பிரச்சனை குறித்தும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், "அன்பு செழியனுக்கு சாதகமாக எம்.எல்.ஏ., வந்தாலும் அமைச்சர் வந்தாலும் விட மாட்டோம் என்றும் கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER

இவ்வாறு பல நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் ஃபைனான்சியர் அன்புச் செழியனுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி "அன்புச் செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே" என்று ஆதரவான கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்துவிட்டு பிறகு அதை நீக்கிவிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :