`என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி

படத்தின் காப்புரிமை Facebook

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் முதல் பாகம் இது.

கேள்வி - சில காலமாக மிகத் தீவிரமாக உங்கள் கருத்துகளை சமூகவலை தளங்களிலும், பேட்டிகளிலும் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். என்ன காரணம்?

பதில் - நான் நீண்ட காலமாகவே என் எண்ணங்களைத் தெரிவித்து வந்திருக்கிறேன். அப்போது பெரிதாக யாரும் கவனிக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல, இப்போது இவ்வளவு தீவிரமாக வெளிப்படுத்துவதற்குக் காரணம், ஒரு கொலை. ரொம்ப மோசமான ஒரு கொலை. கௌரி லங்கேஷின் கொலை.

எங்களைச் செதுக்கியவர் கௌரி லங்கேஷின் அப்பா. இப்போதும் நீ மௌனமாக இருந்தால் அது தவறாகிவிடும் என்று என் மனசாட்சி சொல்லியது. எங்காவது ஒரு இடத்தில் கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. கேட்க ஆரம்பித்தேன்.

`கொலையை கொண்டாடுகிறார்கள்'

கௌரி லங்கேஷின் கருத்துகள் சில பிடிக்கும், சில பிடிக்காது. எல்லோருடைய கருத்துக்களையும் முழுமையாக ஏற்க முடியாது. அவங்க கருத்தைத் தெரிவிக்கும் விதம் சில சமயம் பிடிக்காது. நானே அவங்ககிட்ட பேசியிருக்கேன். இந்த மொழிதான் அவர்களுக்குப் புரியுமென்று சொல்லுவார். ஆனால், அதற்காக அவரைக் கொன்றுவிடுவீர்களா? ஒரு குரலை அமுக்குவதற்கான தைரியம் எங்கிருந்து வருகிறது?

அப்பேற்பட்ட கொலையை கொண்டாடுபவர்களைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடுகிறார்கள்.

இம்மாதிரி கொலையைக் கொண்டாடும் மனப்பான்மை எங்கிருந்து வந்தது?

கேள்வி - இம்மாதிரியான மனப்பான்மை எங்கிருந்து வந்ததாக நினைக்கிறீர்கள்?

பதில் - யார் தூண்டுகிறார்கள்? எல்லோரும் ஒரு முகமூடிக்குப் பின்னாடி இருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வரமாட்டேன். எந்தக் கட்சியோடும் உடன்பாடு இல்லை. என்னுடைய குருநாதர்கள் கனவு கண்ட சமுதாயம் வேறு. அது இல்ல இப்போது இருப்பது. இது எல்லாம் ஒருங்கிணைந்து நடக்கிறது. பத்து பேர் சேர்ந்து குரல் எழுப்பும்போதுதான் இது புரிகிறது.

படத்தின் காப்புரிமை FACEBOOK

கேள்வி - இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி, பத்மாவதி பட விவகாரம் என பல விஷயங்கள் குறித்தும் கேள்வியெழுப்ப ஆரம்பித்திருக்கிறீர்கள்..

பதில் - அதற்கு வரும் பதில்களைப் பாருங்கள். இவர்கள் யாரும் என் கேள்விக்குப் பதில் கொடுக்கவில்லை. இப்படிக் கொண்டாடுபவர், என்னுடைய பிரதமர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு கட்சியைச் சேர்ந்தவரில்லை. ஓட்டுபோடாதவர்களுக்கும் அவர்தான் பிரதமர். ஒரு குடிமகனாக நான் அவரிடம் கேட்டேன்,

உங்களைப் பின்பற்றுபவர்கள் ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டேன். எனக்கு ஆதங்கமாக இருக்கிறது. பிரதமர் அவர்களைக் கண்டிக்க வேண்டும். இப்படிப் பேசாதீங்க. ஒரு பெரிய தவறு நடந்திருக்கிறது. நீங்க கொண்டாடுவது தவறில்லை என்று நீங்க ஏன் சொல்ல மாட்டேங்கிறீங்க? நீங்க யார் மோடியைக் கேட்பதற்கு என்கிறார்கள். என் பிரதமரைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இல்லையா?

அடுத்ததாக ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்படுகிறது. அது தவறென்று சொல்லவில்லை. என்னைப் போல லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் கட்ட முடியும். ஆனால், சாதாரண தொழிலாளர்கள், பானை செய்பவர்கள் போன்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை வரும் நவம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசும்போது நீக்குவீர்களா என்றுதான் கேட்டேன். உடனே, நான் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். இந்துத்துவாவிற்கு எதிரானவன் என்கிறார்கள். இந்துத்துவாவுக்கும் ஜி.எஸ்.டிக்கும் என்ன சம்பந்தம்?

ஆளுங்கட்சி மீது சந்தேகம்

அடுத்ததாக பத்மாவதி பட விவகாரம். இந்த நாடு பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும், கலாசாரத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. என்னுடைய தனித்துவத்தை புண்படுத்தியிருக்கிறீர்களா என்ற அச்சம் வருவதிலோ, கேள்வி கேட்பதிலோ தவறில்லை. ஆனால், அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

இன்றைக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அந்தப் படத்திற்கு தடை கோருகிறார்கள். தணிக்கை வாரியத்திடம் சென்று உங்கள் அச்சங்களைச் சொல்லுங்கள். அவர்கள் பார்த்து முடிவெடுத்த பிறகு இங்கு வாருங்கள் என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். அதெல்லாம் முடியாது, நான் தலையை வெட்டுறேன், கழுத்த வெட்டுறேன் அப்படிங்கிறீங்க.

இதெப்படி நீங்க சட்டத்தைக் கையில் எடுக்க முடியும். உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. ஆனால், கேள்வி கேட்கும் முறை தவறு. அந்த முறை தவறாக இருக்கும்போது, ஓர் ஆளும் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காம, கலைஞனான எனக்குப் பாதுகாப்பு கொடுக்காமல் பேசாம இருந்தா எனக்கு சந்தேகம் வரத்தானே செய்யும்.

உங்களால் முடியாது என்றால் கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள். இதைக் கேள்வி கேட்கக்கூடாது என்றால் எப்படி? நான் கேட்கும் கேள்விக்கும் பதில் கொடுப்பதில்லை. நான் இந்துக்களுக்கு எதிரி என்கிறீர்கள். என் அம்மா கிறிஸ்தவர் என்கிறீர்கள். இந்த விவகாரத்தில் மதம், ஜாதி எங்கிருந்து வந்தது. அதனால்தான் கேள்வி கேட்கிறாய் என்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

கேள்வி - ஆக, உங்கள் விமர்சனங்கள் எல்லாமே விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதானே தவிர, பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரானது அல்ல என்கிறீர்களா?

பதில் - ஆமாம். என் விமர்சனங்களை ஏன் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரானதாக எடுத்துக்கொள்கிறீர்கள்? நீங்க ஆட்சியில் இருக்கும்போது, நீங்கள் ஒரு கட்சியைச் சார்ந்தவர் இல்லை. எல்லோருக்குமான ஆட்சியைத்தான் நீங்க தரணும். ஒரு குடிமகனாக நான் உங்களைத்தான் கேள்வி கேட்பேன். இதுக்கு ஏன் கோபப்படுறீங்க?

நான் கேட்ட கேள்விகளில் உண்மை இல்லை என்று சொல்லுங்க, உனக்கு என்ன தெரியும் என்று கேளுங்க. பதில் சொல்றேன். இவங்க டெக்னிகலா பேசறாங்க. நான் தெளிவா பேசுறேன். உங்களிடம் பதில் இல்லை. அல்லது உங்கள் பதிலுக்குப் பின்னால் ஏதோ திட்டம் இருக்கிறது.

கேள்வி - உங்கள் கருத்துகள் மிகக் கடுமையாக எதிர்கொள்ளப்படுகின்றன. தற்போதைய சூழல்தான் அப்படியிருக்கிறதா?

பதில் - இல்லை. ஒரு சினிமாவைத் தடுப்பது, சிந்தனையை முடக்குவது போன்றவை காலகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. நெருக்கடி நிலையின் போது நாம் பார்க்காததா? இன்னைக்கு ஊடகங்கள் பெரிய அளவில் இருப்பதால் உடனே தெரிகிறது. நெருக்கடி நிலையின்போது எனக்கு 10 வயசு. நான் எப்படி கேட்பேன். நீ காங்கிரஸா என்கிறார்கள்.

`நான் ஏன் இந்தி கற்க வேண்டும்?'

இந்தியை ஏன் திணிக்கிறீர்கள் என்கிறேன். கேட்கக்கூடாதா? கர்நாடகாவில் கன்னடம் இருக்கனும். தமிழனுக்கு தமிழ் இருக்கனும். மலையாளிக்கு மலையாளம் இருக்கனும். இந்தியை நான் ஏன் கத்துக்கனும்? இதைக் கேட்டா இந்திய எதிரி, மோடியின் எதிரி என்கிறார்கள், என்று குறிப்பிட்டார் பிரகாஷ்ர ராஜ்.

மேலும், தமிழக அரசியல் களம், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் மற்றும் சினிமா உலகில் நிலவும் பிரச்சனைகள் போன்ற பல அம்சங்கள் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பாகங்களில் வெளிவரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :