கமல், ரஜினியின் கொள்கைகள் என்ன? நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை FACEBOOK

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் இரண்டாம் பாகம் இது.

கேள்வி - நீங்கள் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வதால், பிரதமர் தரப்பிலிருந்து உங்களை, குறிப்பாக பிரதமர் உங்களிடம் பேசினாரா?

பதில் - இல்லை. அவர்கள் எல்லாம் பெரியவர்கள். எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தால் போதும். அதைவிட்டுவிட்டு என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது எனக்குக் கோபம் வருகிறது. என் சந்தேகம் சரியாக இருக்கிறது என்ற எண்ணம் வருகிறது. தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சட்டத்தை கையில் எடுப்பது முறையல்ல: பத்மாவதி பற்றி பிரகாஷ்ராஜ்

நான் பேசுவதைத் திரிக்கிறார்கள். நடிகர்கள் சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னேன். உடனே, நடிகர்கள் சினிமாவுக்கு வரக்கூடாது என்று நான் சொன்னதாகத் திரிக்கிறார்கள். நான் எப்போது அப்படிச் சொன்னேன்?

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், அவர்கள் கொள்கைகளைப் பாருங்க. நீங்கள் விரும்பும் மாற்றத்தை அவர்கள் உருவாக்குவார்களா என்று பாருங்க. இதையெல்லாம் பார்த்து வாக்களியுங்கள்னு சொன்னேன். யாரும் வரக்கூடாதுன்னு சொல்லலை.

கமல், ரஜினி மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு, அவர்களை மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு ரசிகனாக அவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன். அவர்கள் தங்கள் கொள்கைகளை இன்னும் சொல்லவில்லை. அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பார்ப்பேன்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

கேள்வி - நீங்கள் வைக்கும் விமர்சனங்களை வைத்து, மோடிக்கு எதிரானவர் என்ற முத்திரை உங்கள் மீது இருக்கிறது. இதை ஏற்கிறீர்களா?

பதில் -அவர்கள் அப்படி நினைத்தால் அப்படியே இருக்கட்டும். இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களை நான் கேள்வி கேட்கிறேன். நேற்று இருந்தவர்களை நான் கேட்க முடியாது. நான் ஜி.எஸ்.டி. பற்றியோ, இந்தி திணிப்பு பற்றியோ கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். இதன் மூலம் நீங்கள் மோதியை கேள்வி கேட்கிறீர்கள் என்றால், ஆமாம் நான் மோதியைத்தான் கேட்கிறேன் என்று சொல்வேன்.

கேள்வி - கமல்ஹாசன் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அவர் ட்விட்டரில் மட்டும் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வர முடிவுசெய்துவிட்டார் என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.

பதில் -அவர் தன் கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு மேடை வேண்டுமல்லவா. நான் வருகிறேன் என்று அறிவித்துவிட்டார் அல்லவா. நான் தமிழ்நாட்டைத் தெரிந்துகொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே அறிவிக்க முடியாதல்லவா..

படத்தின் காப்புரிமை FACEBOOK

கேள்வி - தனது கருத்துகளைத் தெரிவிக்க சமூக வலைதளங்களை ஒரு மேடையாக கமல் பயன்படுத்துகிறார் என்கிறீர்கள். நீங்களும் இதைச் செய்கிறீர்கள். உங்களுக்கும் அப்படி ஒரு சிந்தனை இருக்கிறதா?

பதில் -எனக்கு ஆர்வமில்லை. நான் அவ்வளவு பெரிதாக சிந்திக்க முடியாது. எனக்கு முதலில் உண்மையான, நேர்மையான, அச்சமில்லாத குடிமகனாக வேண்டுமெனத்தான் ஆசை. எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. நிச்சயமாக இல்லை. இதைக் கேட்டுக்கொண்டே இருப்பது நல்லதுதான்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கமலுக்கு அவகாசம் வேண்டிய அவகாசத்தை தர வேண்டும்: பிரகாஷ்ராஜ்

கேள்வி -நீங்கள், கமல் போன்றவர்கள் சமூக வலைதளங்களில் தற்போதைய நிலை குறித்து வெளிப்படையாக பேசுகிறீர்கள். விஜய் போன்றவர்கள் சினிமாவில் சில கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனால், வட இந்தியாவில் அப்படிப் பார்க்க முடியவில்லை. அரசியல் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிப்பதில் வட இந்திய நடிகர்களைவிட தென்னிந்திய நடிகர்கள் சற்று வெளிப்படையாக, தைரியமாக இருக்கிறார்களா?

பதில் -உண்மைதான். ஆனால், இங்கு ஒரு நடிகன் பேசுவதால், அங்கிருக்கும் நடிகனும் பேச வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. அதை யாரிடமும் வற்புறுத்த முடியாது. அந்த எண்ணம் அவர்களிடமே இருக்கவேண்டும். அதை ஒரு விதியாக முன்வைக்க முடியாது. ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பவர், திடீரென மௌனமானால் கேட்கலாம். கேட்கவேயில்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.

படத்தின் காப்புரிமை FACEBOOK

கேள்வி - தற்போதைய அரசியல் களத்தை நீங்க எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் - எல்லோருக்கும் தெரிந்ததுதான். இன்றைக்கு நல்ல களம் இருக்கிறது. ரஜினி, கமல், சீமான், ஸ்டாலின் எனப் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தங்கள் கொள்கைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்க வேண்டும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரகாஷ்ராஜுக்கு பிடித்த தமிழக அரசியல் தலைவர்

கேள்வி -தமிழக அரசியல் களத்தில் தற்போது வெற்றிடம் இருப்பதாக பார்க்கிறீர்களா?

பதில் -இருக்கு. ஒரு மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது, மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் கொள்கைகளில் உண்மையாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார் பிரகாஷ் ராஜ்.

மேலும், தமிழ் சினிமா உலகில் நிலவும் பிரச்சனைகள் போன்ற அம்சங்கள் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பாகத்தில் வெளிவரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :