'சினிமாக்காரர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்': பிரகாஷ் ராஜ்

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை FACEBOOK

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் கடைசி பாகம் இது.

கேள்வி - நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவது தொடர்பாக உங்களுக்கு திரையுலகில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதா?

பதில் -இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் நடந்திருக்கு, உனக்கு எதுக்கு பிரச்சனைனு சொல்றாங்க. உண்மையில் இதற்கு முன்பே கேட்டிருக்க வேண்டும். உண்மையாக இருக்கும்போது இழக்கத் தயாராக இருக்க வேண்டும். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு தவறு செய்து, படத்திற்குப் பிரச்சனை வந்தால், நான் காரணம். பழிவாங்குவதற்காகச் செய்தால், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

கேள்வி -சினிமாத் துறை இன்னமும் அமைப்பு ரீதியான துறையாக இல்லை. பல பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுகொள்ளாமல், இவர்கள் நாட்டின் பிரச்சனைகள் குறித்து பேசுகிறார்கள் என்ற விமர்சனம் இருக்கிறது.

பதில் - அதற்கு தயாரிப்பாளர் சங்கம் இருக்கு. ஏன் தனி மனிதர்களை, நடிகர்களைக் கேள்வி கேட்கிறீர்கள். கமல்ஹாசனைப் பார்த்து, முதலில் உங்கள் துறையைச் சரி செய்யுங்கள், பிறகு அரசியலுக்கு வாங்கன்னு சொல்ல முடியாது. நாங்கள் உள்ளுக்குள்ளிருந்து போராடிக்கிட்டிருக்கோம்.

விஷாலும் நானும் வந்த பிறகு பல விஷயங்களுக்காக போராடிக்கிட்டிருக்கோம். வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை எதற்கு சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும்? அரசியல் உலகத்திற்கான விஷயம். வீட்டிற்குள் இருக்கும் விஷயத்தை நான் ஒழுங்குபடுத்திக்கொள்வேன். அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. நீங்கள் அதைப் பற்றிக் கேட்டால் பதில் சொல்வேன்.

படத்தின் காப்புரிமை TWITTER

கேள்வி -சில நாட்களுக்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார், கந்துவட்டி காரணமாக. இது துறைக்குள் இருக்கும் ஒழுங்கின்மையைக் காட்டவில்லையா?

பதில் -கந்து வட்டி ஒரு பெரிய பிரச்சனைதான். நடந்தது மிகத் தவறான சம்பவம். இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் கறுப்பு - வெள்ளையாக முடிவெடுக்க முடியாது. ஒரு விவசாயி சாவு மாதிரிதான் இது. சினிமாவிற்குள் கறுப்புப் பணம் எப்படி வருகிறது? சினிமாவுக்குள் இருப்பவர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதை நிறுத்தினால்தானே, தயாரிப்பாளர் வெளியில் சென்று கறுப்புப் பணம் வாங்கி வருவதை நிறுத்துவார்?

இரண்டாவதாக, எல்லா வரியையும் செலுத்தி செயல்படும் சினிமா துறையில் சட்ட ரீதியாக பணியாற்றும் சூழல் இல்லை. படத்தை வாங்கும் திரையரங்குகள் தயாரிப்பாளர்களுக்கு கணக்குக் கொடுப்பதில்லை. அரசு வரி வசூல்செய்வதை ஒழுங்குபடுத்தினால், அது திரைத்துறைக்கு பாதுகாப்பாக அமையும்.

அதேபோல மக்களும் திருட்டு வி.சி.டியில் படம் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த சூழலுக்கு பலரும் காரணம். எல்லோரும் அதை யோசிக்க வேண்டும். திரையரங்குகளில் டிக்கெட் விற்பதை முழுவதும் கணினி மயமாக்க வேண்டும். ஒழுங்காக கணக்குக் கொடுக்க வேண்டும். இதைக் கேட்டால் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

திரையரங்கக் கட்டணம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு சிரமம்தான். ஆனால், அவர்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு வருவதில்லை.

இதைக் கேட்டால் கெட்டவனாகிவிடுகிறோம். நீங்கள் சம்பளம் வாங்குவதைக் குறையுங்கள் என்கிறார்கள். அது அல்ல பதில். டிக்கெட்டை சரியான விலையில் விற்க வேண்டும். இணையத்தில் டிக்கெட் வாங்கினால் ஏன் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறீர்கள். ஐந்து டிக்கெட் வாங்கினால் 150 ரூபாய். இந்தக் காசு யாருக்கு போகிறது?

திரையரங்க உரிமையாளர்கள் விரைவில் டிக்கெட் கொடுப்பதை கணினிமயமாக்குவதாக சொல்லியிருக்கிறார்கள். நேரம் கேட்டிருக்கிறார்கள். கொடுத்திருக்கிறோம். அதற்கு மேல் போனால், அந்தத் தியேட்டருக்குப் படம் கொடுக்க மாட்டோம். திருட்டி விசிடி விவகாரத்தில், ஒரு தியேட்டர் பிடிபட்டால் அதன் நிர்வாகியை கைதுசெய்து விஷயத்தை முடித்துவிடுவார்கள். இப்போது திரையரங்க உரிமையாளர்களைப் பொறுப்பாக்குகிறோம். அவர்கள் இதை சரிசெய்யாவிட்டால், அவர்களைத் தடைசெய்வோம்.

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் திரையரங்குகளில் அதிக கட்டணம் என்கிறார்கள். அது சரியல்ல. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் திரையுலகில் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அவர்கள் மட்டுமே சினிமா அல்ல. 90 சதவீதம் பேர் சிறு தயாரிப்பாளர்கள். அவர்களைப் பற்றிப் பேசுவோம். பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு கட்டணமுமா திரையரங்குகளில் கொடுக்கிறீர்கள்?

திரையரங்குகள் ஒழுங்காகக் கணக்குக் கொடுத்தால், ஒரு நடிகருக்கான சந்தை என்னவென்று சரியாகத் தெரியும். அது தெரியவந்தால் அந்த நடிகருக்கு அதற்கேற்றபடி சம்பளம் அமையும். என் படம் எவ்வளவு ஓடுகிறதென்றே தெரியாது என்றால் எப்படி? என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

பிரகாஷ் ராஜுக்கு பிடித்தவை:

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்