சினிமா விமர்சனம்: மாயவன்

  • 18 டிசம்பர் 2017
நடிகர்கள் சந்தீப் கிஷன், பகவதி பெருமாள், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி
இசை ஜிப்ரான்
இயக்கம் சி.வி. குமார்
ஒளிப்பதிவு கோபி அமர்நாத்

கூடுவிட்டு கூடு பாயும் கலை மூலமாக சாகாவரம் பெறும் பாத்திரங்களைக் கொண்ட கதைகள் இதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் பலமுறை மாயாஜாலப் படங்களாக வெளிவந்திருக்கின்றன. இந்த முறை, அதை அறிவியலை அடிப்படையாக வைத்து, ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக சொல்லியிருக்கிறார் சி.வி. குமார்.

மூளையில் உள்ள நினைவுகளின் தொகுப்புதான் மனிதன். அந்த நினைவுகளின் தொகுப்பை ஒரு மனிதனிலிருந்து சேகரித்து, இன்னொரு மனிதனின் மூளைக்குக் கடத்துவதன் மூலம், ஒரு உடல் அழிந்தாலும் மற்றொரு உடலில் அதே நினைவுகளோடு வாழ முடிந்தால் ஏற்படும் விபரீதம்தான் இந்தக் கதையின் அடிப்படை.

நகரில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலைகாரன் கொல்லப்பட, அவனைப் பிடிக்க முயலும் காவல்துறை அதிகாரி குமரனும் (சந்தீப் கிஷன்) கிட்டத்தட்ட சாகும் நிலைக்குச் செல்கிறான். பிறகு, நடிகை ஒருவர் கொல்லப்படுகிறார். அந்தக் கொலை முந்தைய கொலையின் பாணியிலேயே இருக்கிறது. முந்தைய கொலையைச் செய்தவன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அதே பாணியில் எப்படி கொலை நடக்கிறது எனக் குழம்புகிறது காவல்துறை.

படத்தின் காப்புரிமை Thinkmusic

பிறகு, மீண்டும் ஒருவர் அதேபாணியில் கொல்லப்படுகிறார். இதற்கிடையில், சந்தேகமான நடவடிக்கைகளுடன் கூடிய சுயமுன்னேற்றப் பேச்சாளர் ருத்ரனை (டேனியல் பாலாஜி) நெருங்குகிறது காவல்துறை. சிறைப் பதிவேட்டில் ருத்ரன் இடும் கையெழுத்தில் உள்ள வித்தியாசத்தை வைத்து புலனாய்வைத் துவங்குகிறது காவல்துறை. அப்போதுதான் ஒரு மாபெரும் அறிவியல் பயங்கரம் வெளிச்சத்திற்கு வருகிறது.

அட்டக்கத்தி, பீஸா, இறுதிச் சுற்று, சூது கவ்வும் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் சமீபத்திய குறிப்பிடத்தகுந்த படங்களைத் தயாரித்த சி.வி. குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

படம் துவக்கத்திலிருந்தே பரபரப்பாகவே நகர்கிறது. ஒவ்வொரு கொலைக்குப் பிறகும், அந்தக் கொலையோடு தொடர்புடையவர்கள் இறந்துபோவது, மீண்டும் கொலை நடப்பது, காவல்துறையின் ஒவ்வொரு முயற்சியும் பலனளிக்காமல் போவது என படத்தின் முதல் பாதி நகர்வதே தெரியவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் புதிர் அவிழ்ந்த பிறகு, யார் பலசாலி என்பது போன்ற ஒரு முடிவை நோக்கி படம் நகர்வதால் சற்று சலிப்புத்தட்ட ஆரம்பிக்கிறது திரைக்கதை. நினைவுகளை மாற்றுவதன் மூலமாக மனிதன் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ முடியும் என்பதுதான் இந்தக் கதையின் அடிப்படை என்பதை சொல்லிவிட்ட பிறகு, மீண்டும் மீண்டும் படத்தில் விளக்கிக்கொண்டே இருப்பதும் போரடிக்கிறது.

யாருக்கும் தெரியாமல் பூமிக்கடியில் மிகப்பெரிய ஆய்வகம் இயங்குவது, அப்படி ஒரு ஆய்வகம் இருப்பது தெரிந்த பிறகும் நான்கைந்து காவல்துறையினர் மட்டுமே அங்கு விசாரணை செய்வது போன்றவை நம்பும்படி இல்லை.

இருந்தபோதும், தொடர் கொலைகள், சம்பந்தமில்லாத பாத்திரங்கள், நினைவுகளை மாற்றும் தொழில்நுட்பம் என ஒன்றுக்கொன்று தொடர்பிலாத அம்சங்களை தனது திரைக்கதை மூலம் நேர்த்தியாக இணைத்திருக்கிறார் நலன் குமாரசாமி. படத்தின் பின்னணி இசையும் கலை இயக்கமும் படத்தின் கூடுதல் பலங்கள்.

சந்தீப் கிஷன் நடிப்பில் முன்னேறியிருக்கிறார். ஆனால், பல காட்சிகளில் அவரது உடல் மொழி ஆசிஷ் வித்யார்த்தியை நினைவூட்டுகிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்திற்குப் பிறகு பகவதி பெருமாளுக்கு இது ஒரு முக்கியமான படம்.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் சற்று கவனம் செலுத்தியிருந்தால், மிக முக்கியமான சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இருந்திருக்கும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்