திரைவிமர்சனம்: உள்குத்து

திரைவிமர்சனம்: உள்குத்து
நடிகர்கள் தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன், சரத் லோகிதஸ்வா, ஜான் விஜய், சாயா சிங், திலிப் சுப்பராயன்
ஒளிப்பதிவு பி.கே. வர்மா
இசை ஜஸ்டின் பிரபாகரன்
இயக்கம் கார்த்திக் ராஜு

திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜுவின் இரண்டாது படம் இது. திருடன் போலீஸ் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த தினேஷ்தான் இந்தப் படத்திற்கும் கதாநாயகன். தினேஷ் நடித்த அட்டகத்தி படத்தில் நாயகியாக நடித்த நந்திதா இந்தப் படத்தின் நாயகி.

முட்டம் மீனவக் கிராமம். கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் ராஜாவை (தினேஷ்) தன் வீட்டிற்கு அழைத்துவந்து வைத்துக்கொள்கிறார் சுறா சங்கர் (பால சரவணன்). அவரது தங்கை கடலரசி (நந்திதா). அந்தப் பகுதியைச் சேர்ந்த காக்காமணியும் (சரத்) அவரது மகன் சரவணனும் (திலீப் சுப்பராயன்) கந்துவட்டி கொடுத்து, அதைக் கடுமையாக வசூல் செய்பவர்கள். எதிர்ப்பவர்களைக் கொலைசெய்பவர்கள். எதிர்பாராமல் அவர்களது ஆள் ஒருவரை அடித்துத் துவைக்கிறார் ராஜா. அதற்குப் பிறகு சரவணனையும் அடிக்கிறார். பிறகு தந்திரமாக காக்கா மணியுடன் நெருங்கி, சரவணனுடன் நண்பனாகிறார். பிறகு அவரைக் கொல்கிறார். பார்க்க சாதாரணமாக இருக்கும் ராஜாவின் பின்னணி என்ன, அவர் ஏன் இதுபோலவெல்லாம் செய்கிறார் என்பது மீதிக் கதை.

இந்தப் படத்தின் பாராட்டத்தக்க அம்சம் படம் துவங்கியவுடனேயே பாடல், தேவையில்லாத காட்சிகள் எதையும் வைக்காமல் நேரடியாக கதைக்கு வந்துவிடுவதுதான். துவக்கத்தில் மட்டுமல்ல, படம் முழுவதிலுமே தேவையில்லாத காட்சிகள் மிகக் குறைவு.

பாடல்களும் சில வரிகளோடு முடிந்துவிடுகின்றன என்பது பெரிய ஆறுதல். படம் தொடர்ந்து மையக் கதையையே தொடர்ந்து செல்கிறது. சாதாரணமாகத் தோற்றமளிக்கும் ராஜா ஏன் இப்படிச் செய்கிறார் என்ற கேள்வியை மெல்ல மெல்ல எழுப்பி, இடைவேளையில் அதை உச்சகட்டத்திற்கும் கொண்டுவருகிறார் இயக்குனர்.

ஆனால், படத்தின் பிற்பாதியில் சில சொதப்பல்கள் இருக்கின்றன. சரவணனை போலீஸ் சுட்டுக்கொன்றுவிட்டதாக அவரது தந்தை காக்காமணி நினைக்கும் நிலையில், தானாகப் போய் அவர் போலீஸால் சாகவில்லையென ராஜா சொல்லும்போது, அதற்கு ஏதாவது காரணம் இருக்குமெனத் தோன்றுகிறது. ஆனால், அப்படி எந்தக் காரணமும் முடிவில் இல்லை.

படத்தின் துவக்கத்தில் சுறா சங்கராக வரும் பால சரவணனின் நகைச்சுவை பெரிதாக எடுபடாதது படத்தின் பலவீனங்களில் ஒன்று. ஆனால், பிற்பாதியில் அதைச் சற்றுச் சரிசெய்கிறார் அவர். அதேபோல அவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் காட்சிகளில் சிறிதும் நகைச்சுவையில்லை. அது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.

கதாநாயகனாக நடித்திருக்கும் தினேஷ் படம் நெடுக, மிகச் சுமாராகவே நடிக்கிறார். பல இடங்களில் எந்தவித பாவங்களையும் காட்டாமல் நிற்கிறார். முதல் படத்தில் அவர் தத்தித்தத்தி நடந்தது, அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது. ஆனால், இத்தனை படங்களுக்குப் பிறகும் அவர் அதேபோல நடப்பது, குறிப்பாக இந்தக் கதைக்கு சற்றும் பொருந்தவில்லை.

இந்தப் படத்தின் நாயகியாக வரும் நந்திதாவுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை என்றாலும் தோன்றும் இடங்களில் சிறப்பாக நடிக்கிறார். அதேபோலத்தான் படத்தில் வரும் ஜான் விஜய், சரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஸ்ரீமன் ஆகியோரும் பொருத்தமான பாத்திரத்தில் வந்துசெல்கின்றனர்.

ஒரு த்ரில்லர் - ஆக்ஷன் படத்திற்கு உரிய கதையை கொண்ட இந்தப் படம் மிக விறுவிறுப்பாக நகர்ந்திருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் ஒரு தொலைக்காட்சி தொடர் பாணியிலான காட்சியமைப்புகள் உறுத்துகின்றன. இதுதான் இந்தப் படத்தின் முக்கியமான பிரச்சனை.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்