தென் ஆஃ ப்ரிக்காவில் இந்தியா வியக்கத்தக்க வகையில் தோல்வி #INDvsSA

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா கேப்டவுன் டெஸ்ட் 2018 படத்தின் காப்புரிமை GIANLUIGI GUERCIA

இந்திய அணி தென் ஆஃ ப்ரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி ஐந்தாம் தேதி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆஃப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் ஷிகர் தவான், முரளி விஜய், சதீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரோஹித் ஷர்மா, விரிதிமான் சாஹா, ஹர்டிக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹம்மத் ஷமி, புவ்னேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அஜின்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், பார்திவ் படேல், லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

படத்தின் காப்புரிமை MARCO LONGARI

தென் ஆஃப்ரிக்க அணியில் டீன் எல்கர், ஐடென் மர்க்ரம், ஹாஷிம் ஆம்லா, ஏபி டி வில்லியர்ஸ், ஃபாப் டு ப்ளசிஸ், குயின்டன் டீகாக் , வெர்னோன் பிலாந்தர், கேஷவ் மஹராஜ், டேல் ஸ்டெயின், ககிஸோ ரபடா, மோர்னே மோர்கல் ஆகியோர் 11 பேர் கொண்ட அணிப்பட்டியலில் இடம்பெற்றனர்.

தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் முதல் ஓவரிலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. புவ்னேஷ்வர் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் டீன் எல்கர் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

தனது அடுத்தடுத்த ஓவர்களில் மர்க்ரம் மற்றும் ஹாஷிம் ஆம்லா விக்கெட்டுகளையும் புவ்னேஷ்வர் வீழ்த்தினார். 12 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை தென் ஆஃப்ரிக்கா இழந்த நிலையில் அணித் தலைவர் ஃபாப் டு பிளஸிஸுடன் இணைந்து ஏ பி டி வில்லியர்ஸ் ரன் குவிப்பில் ஈடுபட்டார் இருவரும் அரை சதம் எடுத்து அவுட் ஆயினர்.

படத்தின் காப்புரிமை MARCO LONGARI

முதல் இன்னிங்ஸில் 73.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது தென் ஆஃப்ரிக்கா. ஏ பி டி வில்லியர்ஸ் 11 பௌண்டரிகள் உதவியுடன் 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணியின் தரப்பில் புவ்னேஷ்வர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. 92 ரன்களுக்கு ஏழு விக்கெட்களை பறிகொடுத்த நிலையில், ஹர்டிக் பாண்ட்யாவின் சிறப்பான ஆட்டத்தால் 200 ரன்களை தாண்டியது. மூத்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆன நிலையில் தென் ஆஃப்ரிக்க மண்ணில் முதன்முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் ஹர்டிக் பாண்ட்யா 95 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

படத்தின் காப்புரிமை Gallo Images

தென் ஆஃப்ரிக்கா தரப்பில் பிலாந்தர், ரபடா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி 73.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 209 ரன்கள் சேர்த்தது.

75 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆஃப்ரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆஃப்ரிக்கா இரண்டு விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் குவித்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

நான்காவது நாள் ஆட்டம் இன்று துவங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமான பந்துகளில் தென் ஆஃப்ரிக்க பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க திணறினர். ரபடா, ஆம்லா, ஃபாப் டு பிளசிஸ், குயின்டன் டீ காக், வெர்னோன் பிலாந்தர், மோர்னே மோர்கல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆயினர். ஏ பி டி வில்லியர்ஸ் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 50 பந்துகளில் 2 பௌண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி 35 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

ஜஸ்பிரிட் பும்ரா, மொஹம்மத் ஷமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.ஹர்டிக் பாண்ட்யா, புவ்னேஷ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 41.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது தென் ஆஃப்ரிக்கா.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. முதல் 30 ரன்களில் விக்கெட் இழக்கவில்லை. ஆனால் அடுத்த 52 ரன்களுக்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்தது. அணித்தலைவர் விராட் கோலி 40 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

82/7 என்ற நிலையில் இந்திய இருந்தபோது அஷ்வின் மற்றும் புவ்னேஷ்வர் இருவரும் இணைந்து ரன்கள் குவித்தனர். இந்த இணை 49 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்ரிக்காவின் வெற்றி தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில் 43-வது ஓவரை பிலாந்தர் வீசினார்.அந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் பிலாந்தர். அத்துடன் இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென் ஆஃப்ரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

படத்தின் காப்புரிமை MARCO LONGARI

இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வெர்னோன் பிலாந்தர் வீழ்த்தினார். மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய பிலாந்தருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மொத்தம் 230.1 ஓவர்களில் இந்த டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது. தென் ஆப்ரிக்க அணியைச் சேர்ந்த ஏ பி டி வில்லியர்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 100 ரன்களை குவித்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாகா பத்து கேட்ச்களை பிடித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சம அளவிலேயே இருந்துவந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. இன்னும் நூறுக்கும் அதிகமான ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் நான்காம் நாளிலேயே போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆஃப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் சனி கிழமை (13/12/17) சென்சூரியனில் தொடங்கவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :