சினிமா விமர்சனம் - குலேபகாவலி

  • 12 ஜனவரி 2018
படத்தின் காப்புரிமை GULOBAKAVALI
நடிகர்கள் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, முனீஸ்காந்த், சத்யன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு
இசை விவேக் - மெர்வின்
ஒளிப்பதிவு ஆர்.எஸ். அனந்தகுமார்
இயக்கம் கல்யாண்

1955ல் எம்.ஜி.ஆர். நடிக்க டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த குலேபகாவலி படத்தில் தந்தைக்குப் பார்வை கிடைப்பதற்காக பகாவலி நாட்டில் உள்ள ஒரு மலரைத் தேடி பயணம் செய்வான் கதாநாயகன். தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் குலேபாவலி என்ற ஊரில் உள்ள புதையலைத் தேடிச் செல்கிறான் கதாநாயகன்.

1945ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறும் ஒரு பிரிட்டிஷ்காரரிடமிருந்து ஏமாற்றிப்பறித்த வைரங்களை குலேபகாவலி என்ற ஊரில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் புதைத்துவைக்கிறார் ஒருவர். அவரது பேரன், அந்த வைரத்தை தற்போது கைப்பற்ற விரும்பி, ஆட்களை அனுப்புகிறான். சிலை கடத்தலில் ஈடுபடும் நம்பியின் (மன்சூர் அலிகான்) அடியாளான பத்ரியும் (பிரபுதேவா) அதே நேரத்தில், அதே ஊரில் உள்ள சிலையைக் கடத்துகிறான்.

படத்தின் காப்புரிமை GULOBAKAVALI

ஆனால், ஊரார் சுதாரித்துவிட எல்லோரும் அங்கிருந்து தப்பிவிடுகிறார்கள். மீண்டும் புதையலை எடுக்க முயற்சிக்கிறது பேரனின் குழு. பத்ரி தவிர, சிறு சிறு திருட்டில் ஈடுபடும் விஜி (ஹன்சிகா மோத்வானி), கார் திருட்டில் ஈடுபடும் மாஷா (ரேவதி) ஆகியோர் வெவ்வேறு கட்டாயங்களால் ஒன்றாக இணைந்து இந்த புதையலைக் கைப்பற்றச் செல்கிறார்கள்.

இதற்கு நடுவில் அண்ணாச்சியின் (மொட்டை ராஜேந்திரன்) குழு, நம்பியின் குழு, குலேபகாவலி ஊர்க்காரர்கள் என பலரும் புதையலை எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து தடை ஏற்படுத்த, புதையல் கைப்பற்றப்பட்டதா என்பது மீதிக் கதை.

புதையலைத் தேடும் சாகஸக் கதை என்பதால் செண்டிமென்ட், காதல் போன்றவற்றுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் படத்தை நகர்த்தியிருப்பது ஆறுதலான விஷயம். துவக்கத்திலேயே சிலை கடத்தல், தொடர்ந்து ஏமாற்றுக்காரர்களின் அறிமுகம் என விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது படம்.

ஆனால், திடீர் திடீரென உள்ளே நுழையும் பாடல்கள், மனதில் ஒட்டாத சில காட்சிகள், கதாபாத்திரங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டேயிருப்பது என பல வேகத் தடைகளை படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர். பல சமயங்களில் திரையைப் பார்க்காமலேயே காட்சிகளை யூகிக்க முடிகிறது. அந்த அளவுக்கு எல்லோரும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சில தேவையில்லாத காட்சிகளின் நீளமும் படத்தின் பலவீனங்களில் ஒன்று.

படத்தின் காப்புரிமை GULOBAKAVALI

ஆனால், படம் நெடுக வரும் நகைச்சுவை காட்சிகளும் சின்னச் சின்னத் திருப்பங்களும் இந்த வேகத் தடைகளை கடந்துசெல்ல உதவுகின்றன. ஹீரோ பாபுவாக வரும் யோகிபாபு பல காட்சிகளில் சிரிக்க வைத்துவிடுகிறார். மொட்டை ராஜேந்திரனின் துவக்க காட்சிகள் சற்று நாடகத்தனமானவை என்றாலும் பிற்பாதியில் அதை ஈடுகட்டிவிடுகிறார்.

கமல்ஹாசனைப் போல ஒருவரை மொட்டை ராஜேந்திரன் குழுவில் வைத்து, அவர் கமல் மாதிரியே நடந்துகொள்வது ஏக ரகளை.

இந்தப் படத்தில் கதை - திரைக்கதையே முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்பதால், பிரபுதேவாவுக்கும் ஹன்சிகாவுக்கும் சொல்லத்தக்க படமென்று கூறமுடியாது. ஆனால், முடிந்தவரை சிறப்பாகவே தங்கள் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கார் திருடியாக வரும் ரேவதிக்கு இது முக்கியமான படம்.

தமிழ்த் திரையுலகில் அவருக்கு உள்ள சோக பிம்பத்தைப் பயன்படுத்தி, ஒரு பில்ட்-அப் கொடுத்துவிட்டு பிறகு அதை நகைச்சுவையாக்கிவிடும் உத்தி நன்றாகவே எடுபடுகிறது. முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கும் வழக்கமான ஒரு படம் இது.

இன்னும் கச்சிதமான திரைக்கதையோடு, தேவையில்லாத காட்சிகளையும் பாடல்களையும் நீக்கியிருந்தால் ஒரு சிறந்த காமெடி - சாகஸமாகியிருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்