ஆஸ்கர் விருதுகள் - சுவாரஸ்யமான 9 தகவல்கள்

A R RAHMAN

ஆஸ்கர் விருது உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஆஸ்கர் பற்றிய ஒன்பது தகவல்கள் இங்கே

1. அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 89வது அகாடெமி விருதுகள் கடந்த 2017 ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 90-வது அகாடெமி விருதுகள் வழங்கப்பட உள்ளன. வரும் மார்ச் நான்காம் தேதி ஞாயிற்று கிழமையன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படும்.

2. ஆஸ்கர் விழாவை அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1927 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது 36 பேர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

3. அகாடெமி விருதில் வழங்கப்படும் பிரத்தேக தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது.

4. நடிப்புக்காக அதிக ஆஸ்கர் விருதை வென்றவர் கத்தரின் ஹெப்பர்ன். சிறந்த நடிகைக்கான விருதை இவர் நான்கு முறை வென்றுள்ளார். அமெரிக்க நடிகையான கத்தரின் 1934 ஆம் ஆண்டு நடந்த ஆறாவது அகாடெமி விருதுகளில் மார்னிங் க்ளோரி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அதன் பின்னர் எட்டு படங்களுக்காக வெவ்வேறு காலகட்டத்தில் சிறந்த நடிகைக்கான விருதுப் போட்டிக்கான பிரிவில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும் அவர் வெல்ல வில்லை. இதைத்தொடர்ந்து 1968, 1969 மற்றும் 1982 ஆண்டுகளில் நடந்த அகாடெமி விருதுகளில் சிறந்த நடிகை விருதை வென்றார்.

5. மூன்று திரைப்படங்கள் அதிகபட்சமாக 11 பிரிவுகளில் அகாடெமி விருது வென்றுள்ளன. பென் ஹர் திரைப்படம் 1959 ஆம் ஆண்டு 12 பிரிவுகளில் போட்டியில் இருந்தது, அதில் 11-இல் வென்றது. டைட்டானிக் திரைப்படம் 1997-ஆம் ஆண்டு 14 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு 11-இல் ஜெயித்தது. கடைசியாக லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் - தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் திரைப்படம் 11 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு பதினோரு பிரிவிலும் விருதை வென்றது.

6. அதிகமுறை அகாடெமி விருது வென்ற பெண் எடித் ஹெட். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த எடித் எட்டு முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இந்த எட்டு முறையும் சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான பிரிவில் வென்றுள்ளார்.

7. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த நடிகர் விருதை ஜெயித்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர் தான். 1937 மற்றும் 1938 அகாடெமி விருதுகளில் ஸ்பென்சர் ட்ரேசி வென்றார். 1993-இல் ஃபிலடெல்பியா மற்றும் 1994-இல் ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் பிரிவில் டாம் ஹாங்க்ஸ் அகாடெமி விருதை வென்றார்.

8. அகாடெமி விருது ஜெயிப்பவர்களுக்கு 45 நொடிகள் மட்டுமே மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். நேர எல்லையை கடந்தால் மைக்ரோ ஃபோனிக்கு ஒலி இணைப்பு துண்டிக்கப்படும். அகாடெமி விருது வரலாற்றில் மேடையில் அதிக நேரம் பேசியவர் கிரீர் கார்சன். 1942 ஆம் ஆண்டு சிறந்த நடிகை விருது வென்ற இவர் ஆறு நிமிடங்கள் உரையாற்றினார். அதன் பின்னரே விருதை ஏற்றுக்கொள்ளும் உரைக்கான நேர அளவு குறைக்கப்பட்டது.

9. ஆஸ்கர் வரலாற்றில் இரண்டு விருதுகள் வாங்கிய ஒரே இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே. ஏ ஆர் ரஹ்மான் விருது வென்ற போது தமிழில் சில வார்த்தைகள் உதிர்த்தார். ஆஸ்கர் மேடையில் தமிழ் மொழி முதல்முறையாக ஒலித்தது அப்போதுதான். ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2009 ஆம் ஆண்டு இரண்டு பிரிவுகளில் ரஹ்மான் விருது வென்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :