திரைப்பட விமர்சனம்: பத்மாவத்

திரைப்பட விமர்சனம்: பத்மாவத்

அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய 'பத்மாவதி' என்ற காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

படம் பத்மாவத்
நடிகர்கள் தீபிகா படுகோன், ஷாஹித் கபூர், ரண்வீர் சிங், அதிதி ராவ், ஜிம் ஷர்ப்
ஒளிப்பதிவு சுதீப் சாட்டர்ஜி
இசை சஞ்சித் பலரா, சஞ்சய் லீலா பன்சாலி
இயக்கம் சஞ்சய் லீலா பன்சாலி

13ஆம் நூற்றாண்டில் சிங்கள தேசத்திற்குச் செல்லும் மேவாடின் அரசன் ரத்தன் சிங், அந்நாட்டு இளவரசியான பத்மாவதியைக் காதலித்து, திருமணம் செய்து நாடு திரும்புகிறான். அதே நேரம், தில்லியில் சுல்தான் வம்சத்தை நிறுவிய ஜலாலுதீன் கில்ஜியை கொலைசெய்துவிட்டு, தானே சுல்தானாகிறான் அலாவுதீன் கில்ஜி. அப்போது ரத்தன் சிங்கால் ஒரு தவறுக்காக நாடுகடத்தப்பட்ட ராஜகுரு ராகவ் சேத்தன், பழிவாங்கும் எண்ணத்தில் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்து பத்மாவதியின் அழகைப் பற்றிச் சொல்கிறான்.

இதனால், மேவாட் மீது படையெடுக்கும் அலாவுதீன் கில்ஜி, ரத்தன் சிங்கைச் சிறைப்பிடித்துச் செல்கிறான். தில்லி சென்று சூழ்ச்சியால் அவனை மீட்டுவருகிறாள் பத்மாவதி.

ரத்தன் சிங் மேவாடில் இல்லாத நேரத்தில் பத்மாவதியை மணக்க விரும்புகிறான் கும்பனேரின் அரசனான தேவ்பால். தில்லியிலிருந்து திரும்பும்போது இதனைக் கேள்விப்படும் ரத்தன் சிங், தேவ்பாலுடன் துவந்த யுத்தத்தில் ஈடுபடுகிறான். இதில் இருவருமே மடிகிறார்கள். ரத்தன் சிங்கின் சிதையில் விழுந்து உயிரிழக்கிறாள் பத்மாவதி. இதற்கிடையில் பத்மாவதியை அடையும் நோக்கத்தோடு மீண்டும் மேவாடின் மீது படையெடுக்கிறான் அலாவுதீன்.

அவனுடன் ரஜபுத்திரப் படைகள் போரிட்டுக்கொண்டிருக்கும்போது, கூட்டம் கூட்டமாக தீயில் இறங்கி மடிகிறார்கள் ராஜபுத்திரப் பெண்கள். போரில் வென்றாலும் அலாவுதீன் நினைத்தது நடக்காமல் போகிறது என்பதுதான் பத்மாவதி காவியத்தின் கதை.

ஆனால், இந்தப் படத்தின் முடிவில் ரத்தன் சிங், கும்பனேரின் அரசனுடன் சண்டையிட்டு மடிவதற்குப் பதிலாக அலாவுதீன் கில்ஜியுடன் சண்டையிட்டு மடிவதாகவும் அலாவுதீன் கில்ஜியின் கையில் கிடைக்காமல் போவதற்காக பெண்கள் அனைவரும் தீயில் விழுந்து உயிரிழப்பதாகவும் படத்தை முடித்திருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.

சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களுக்கே உரிய பிரம்மாண்டம், துல்லியமான காட்சிப்படுத்தல்கள், சிறப்பான ஒளிப்பதிவு, இசை ஆகிய அம்சங்கள் இந்தப் படத்திலும் உண்டு.

மேவாடின் கோட்டை, அரண்மனைகள், கில்ஜியின் அரண்மனை, போர்க்களக் காட்சிகள் என்று நம்மை காலம்கடத்தி 13ஆம் நூற்றாண்டில் உலவச் செய்கிறார் பன்சாலி. இதற்காக கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதே தெரியாமல் இருப்பது, படத்தை வெகுவாக ரசிக்கவைக்கிறது.

படத்தின் காப்புரிமை PADMAVATI

நாயகியாக வரும் தீபிகா படுகோன், ரத்தன் சிங்காக வரும் ஷாகித் கபூர், அலாவுதீன் கில்ஜியாக வரும் ரண்வீர் சிங் ஆகியோர் பாத்திரங்களுக்குச் சரியான தேர்வாகப் பொருந்துகிறார்கள். குறிப்பாக ரண்வீர் சிங் வெகுவாக ரசிக்கவைக்கிறார்.

சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம், சலிப்புத்தட்டவில்லை என்றாலும் படத்தின் பல காட்சிகள் பிரதான கதையோடு ஒட்டாதவை. அதேபோல ஒரு சில பாடல்களும் படத்தின் வேகத்தைத் தடைசெய்கின்றன.

பன்சாலியின் முந்தைய படமான பாஜிராவ் மஸ்தானி படத்தை ஒரு கிளாசிக் என்று சிலர் குறிப்பிடக்கூடும். ஆனால், பத்மாவத் படத்தைப் பொறுத்தவரை, பல பிற்போக்கான கருத்துக்களை விதந்தோதும் ஒரு சாகஸம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

இந்தப் படத்தைப் பார்க்கும் ஒருவர், ஏன் இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன என்று ஆச்சரியமடையக்கூடும். இந்தியக் கலாசாரம் என்று எந்த அம்சங்களையெல்லாம் இந்து அமைப்புகள் முன்வைக்கின்றனவோ அவற்றில் பலவற்றை இந்தப் படமும் முன்னிறுத்துகிறது.

படத்தின் காப்புரிமை PADMAVATI

கணவர் இறந்த பிறகு அவரது சிதையிலேயே மனைவியும் குதித்து உயிரிழக்கும் 'சதி' வழக்கத்தை ஆதரிக்கும் நோக்கம் இந்தப் படத்திற்கு இல்லை என படம் துவங்கும் முன்பாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், படத்தின் உச்சகட்ட காட்சியாக, அலாவுதீன் கில்ஜி பத்மாவதியை அடையும் முன்பு அவள் தீயில் இறங்கி உயிர்துறக்கிறாளா என்பதுதான் மனம் பதைபதைக்க காட்டப்படுகிறது.

வெகு நீளமாக, நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்தக் காட்சி, படத்தின் துவக்கத்தில் சொல்லப்படும் அறிவிப்புக்கு மாறாக அமைகிறது.

முப்பரிமாணத்தில் திகைக்க வைக்கும் தொழில்நுட்பத்துடன் வெளியாகியிருக்கும் பத்மாவத் படத்தை, ஒரு வரலாற்று சாகசமாக மட்டும் பார்த்தால், குறிப்பிடத்தக்க படம்தான். ஆனால், அப்படி மட்டும் பார்க்க முடியுமா என்பதுதான் கேள்விக்குறி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்