இப்போது சினிமாவில் அரசியல் பேசுவது ஒரு வியாபாரம்: இயக்குநர் ராம்

இயக்குநர் ராமின் அடுத்த படமான பேரன்பு முடிவடைந்துவிட்ட நிலையில், அந்தத் திரைப்படம் குறித்தும், அவர் நடித்திருக்கும் 'சவரக்கத்தி' குறித்தும் பிபிசியிடம் பேசினார் ராம். அந்தப் பேட்டியிலிருந்து:

படத்தின் காப்புரிமை Savarakathi

கே. உங்களுடைய அடுத்த படமான பேரன்பு, எப்போது வெளியாகிறது?

ப. அந்தப் படத்தை முதலில் ராட்டர்டாம், சான்ஃப்ரான்சிஸ்கோ திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவிருக்கிறோம். அதற்குப் பிறகு மே மாதவாக்கில் படத்தை வெளியிட உத்தேசித்திருக்கிறோம். மம்மூட்டி, சாதனா, அஞ்சலி நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படத்தை நான் இயக்க மட்டுமே செய்திருக்கிறேன். ஒரு சுயநலமிக்க மனிதன் பேரன்புமிக்கவனாக மாறுவதுதான் கதை.

கே. சவரக்கத்தி படத்தில் எப்படி இணைந்தீர்கள்?

ப. நடிப்பு என்பது என் தொழில் அல்ல என்பதால் ஆரம்பத்தில் எனக்கு பெரும் சந்தேகம் இருந்தது. நான் எழுதியதில் நானே நடிப்பது வேறு. ஆனால் பிறரது இயக்கத்தில் நடிப்பது வேறு. தங்க மீன்கள் படத்தில் வேறு வழியில்லாமல்தான் நடித்தேன். இல்லாவிட்டால் அந்த ப்ராஜெக்ட் நடந்திருக்காது. இந்தப் படத்திற்கு மிஷ்கின்தான் வலியுறுத்தினார்.

ஆனால், செட்டுக்குப் போன பிறகு, நான் சௌகர்யமாக உணர்ந்தேன். இயக்குநர் ஜி.ஆர். ஆதித்யா நல்ல நடிகர். அவர் நடித்துக்காட்டுவார். அதைத் திரும்பச் செய்தாலே போதும். ஒரு இயக்குநராக அவரும் திரைக்கதையாசிரியராக மிஷ்கினும் என்ன சொன்னார்களோ அதைச் செய்தேன் அவ்வளவுதான். பொய் சொல்லாமலும் கோபப்படாமலும் எளிமையாக வாழ்ந்துவிட முடியும் என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது.

கே. உங்களுடைய படங்களில் வரும் மையப் பாத்திரம் ஒரு சாதாரண மனிதனாக இருப்பதில்லை. சவரக்கத்தியிலும் உங்களுடைய பாத்திரம் அப்படிப்பட்டதுதானா?

ப. இந்தப் படம் ஒரு நிஜ வாழ்க்கையைச் சொல்லும் படம் அல்ல. ஒரு கருத்தாக்கத்தை, சில பாத்திரங்கள் மூலமாக இயக்குநர் சொல்வதுதான் இந்தப் படம். ஒரு நாயகனை, ஒரு பாத்திரத்தை மையமாக படம் செய்வது ஒரு வகை. மற்றொரு வகை, ஒரு கருத்தாக்கத்தை மையமாக வைத்து படம் செய்வது. சவரக் கத்தி இரண்டாவது வகை. ஒரே நாளில், ஒரு மோதல் உருவாகி, முடிகிறது. படம் பார்ப்பவர்கள் சிரித்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் இந்தப் படம். சிலருக்கு இது ரொம்பவும் அசாதாரணமாகத் தோன்றலாம். சிலருக்கு இதுதான் வாழ்க்கை என்று தோன்றலாம். அது அவர்கள் என்ன மாதிரி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.

கே. நீங்கள் இதுவரை இயக்கிய படங்கள் எல்லாவற்றிலும் ஒரு அரசியல் இருந்தது. அதை வெளிப்படையாகப் பேசினீர்கள். இப்போதும் உங்கள் படங்களில் அந்த அரசியல் வெளிப்படுமா?

ப. சவரக் கத்தியைப் பொறுத்தவரை நான் வெறும் நடிகர். இயக்குனர் சொல்வதைச் செய்துவிட்டுப் போயிருக்கிறேன். வாழ்க்கையை எளிமையாக வாழ வேண்டும் என்பதுதான் எல்லாக் கலைகளின் நோக்கமும். கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள் ஆகிய எல்லாப் படங்களின் நோக்கமும் அதுதான்.

படத்தின் காப்புரிமை Savarakathi

கே. இன்னொரு இயக்குனரும் இந்தப் படத்தில் இருக்கிறார். இரு இயக்குநர்கள் ஒரு படத்தில் நடிப்பது எப்படி இருந்தது?

ப. மிஷ்கன் எல்லோரிடமும் நண்பரைப் போல பழகக்கூடியவர். அவருடன் பணிபுரிவது இன்னொரு இயக்குநருடன் பணிபுரிவதைப் போல அல்ல. ஒரு நண்பருடன் பணியாற்றுவதைப்போலத்தான்.

கே. தமிழ் சினிமா சூழலில் ஒரு இயக்குநரையோ, நடிகரையோ பேட்டி காணும்போது அவர்களிடம் சினிமா குறித்து கேள்வி எழுப்பப்படுவதைவிட, அவர்களுடைய அரசியல் குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், துவக்கத்தில் அரசியல்ரீதியாக தீவிரமாக கருத்துகளை வெளியிட்டுவந்த நீங்கள் இப்போது அமைதியாக இருக்கிறீர்கள்..

ப. இப்போது அரசியல் பேசுவதென்பது ஒரு வியாபாரம். இப்போது அரசியல் பேசாமல் படங்களை வெளியிட முடியாது என்று ஆகிவிட்டது. இப்போது திரையில் அரசியல் பேசினால் கைதட்டல் எழுகிறது. மையநீரோட்ட சினிமாவின் முக்கியமான அம்சமாக அரசியல் ஆகிவிட்டது. முன்பு பேய்ப் படங்கள், காமெடி படங்கள் இருந்தததைப் போல, இப்போது அரசியல் பேசுவது ட்ரெண்டாகிவிட்டது. இப்போது அரசியல் பேசாமல் படங்கள் இருப்பதுதான் என் அரசியல் என்று நினைக்கிறேன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்