சினிமா விமர்சனம்: கலகலப்பு - 2

சினிமா விமர்சனம்: கலகலப்பு - 2

பட மூலாதாரம், AVNI CINEMAS

2012ல் வெளிவந்த விமல், மிர்ச்சி சிவா நடித்த கலகலப்பு மிகப் பெரிய ஹிட் ஆன நிலையில், அதே மாதிரி கதையோடு இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் சுந்தர் சி.

முதல் பாகத்தில் மசாலா கஃபேவை கைப்பற்றப் போராட்டம் என்றால், இந்தப் படத்தில் காசியில் உள்ள ஒரு மேன்ஷனைக் கைப்பற்ற போராட்டம். அதேபோல, காமெடி போலீஸ்கள், வைரம் ஆகியவை இந்தப் படத்திலும் உண்டு.

காசி நகரில் 100 வருடங்களுக்கு முன்பாக குத்தகைக்கு விடப்பட்ட தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு மேன்ஷனை மீட்பதற்காக காசிக்கு வருகிறார் ஜெய். அந்த மேன்ஷனை வைத்து பிழைத்துக்கொண்டிருக்கிறார் ஜீவா. இருவரும் நண்பராகிறார்கள்.

ஜீவா வைத்திருக்கும் மேன்ஷன்தான், தன்னுடையது என்று தெரிந்த பிறகு, தங்களை ஏமாற்றிய மிர்ச்சி சிவாவைத் தேடி காரைக்குடிக்கு வருகிறார்கள். அங்கே, ஒரு பெரிய பணக்காரனுக்குத் தத்துப்பிள்ளையாகி அந்தச் சொத்துகளைக் கைப்பற்றும் முயற்சியில் இருக்கிறார் மிர்ச்சி சிவா.

இதற்கு நடுவில் மந்திரியின் ரகசியங்கள் அடங்கிய லாப்டாப்பைக் கைப்பற்ற காசிக்கு வரும் ராதாரவி, அதில் சொதப்பிவிட, மந்திரி கும்பலும் காசிக்கு வருகிறது. போலிச் சாமியாரான யோகிபாபுவும் ஜெய்யின் மேன்ஷனைக் கைப்பற்ற முயல்கிறார்.

பட மூலாதாரம், AVNI CINEMAS

படம் துவங்கி சிறிது நேரத்திற்கு, எந்த காமெடியும் ஒர்க் - அவுட் ஆகாமல் படம் வெறுமையாக நகர்கிறது. மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் படம் க்ளைமாக்சில் உச்சகட்டத்தை எட்டுகிறது. அதுவும் கடைசி 45 நிமிடங்கள் பெரும் ரகளையாக நகர்கிறது.

சுந்தர் சி. படங்களுக்கே உரிய வகையில் இந்தப் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். அதனால், பலர் துண்டு துண்டாக வந்துவிட்டுப் போகிறார்கள். சம்பந்தமில்லாமல் எல்லோரிடமும் மாட்டி அடி வாங்கும் விடிவி கணேஷ், அமாவாசையன்று மட்டும் மனநிலை பிறழும் ஜார்ஜ் மர்யான், சிறிது நேரத்திற்கு மட்டுமே நல்ல மனநிலைக்கு வரும் முனீஸ்காந்த், கண்ணாடியில்லாவிட்டால் பார்வை மங்கிவிடும் ரோபா சங்கர் என ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக யோகி பாபு - சிங்கமுத்து கூட்டணி. படத்தில் இவர்கள் வரும் காட்சியில் திரையரங்கே குலுங்குகிறது. கதாநாயகர்களைவிட, கதாநாயகிகளாக வரும் நிக்கி கல்ராணியும் கேத்தரீன் தெரசாவும் உற்சாகத்துடன் தென்படுகின்றனர். சிவாவைத் தவிர்த்த மீத இரண்டு நாயகர்களிடமும் துள்ளல் ரொம்பவே குறைவு.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருப்பதும் சுமார் இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு படம் ஓடுவதும் படத்தின் பலவீனங்கள். ஆனால், எந்த லாஜிக்கையும் யோசிக்காமல் சிரிப்பதற்கு ரெடி என்றால், சரியான படம் கலகலப்பு - 2.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :