அரசியலில் இறங்கும் ரஜினி - கமல்: '80' நடிகைகள் ஆதரவு யாருக்கு?

இன்று (புதன்கிழமை) நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் நிலையில், பொதுவாக ஒரு எதிர்பார்ப்பு நிலவும் சூழ்நிலையில், தமிழ் திரைப்படத் துறையிலும் கூடுதல் ஆர்வம் காணப்படுகிறது.

கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று, தான் தனிக் கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இருவரும் தாங்கள் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ரஜினி மற்றும் கமலுடனான தங்களின் திரையுலக நாட்கள் மற்றும் அவர்களின் அரசியல் பயணம் குறித்த அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை அவர்களுடன் நடித்த முன்னணி நடிகைகள், பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர்.

'கமலின் அறிவிப்பு வியப்பளிக்கவில்லை'

ராஜாதி ராஜா, பாயும் புலி, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல திரைப்படங்களில் ரஜினிகாந்துடனும், ஜப்பானில் கல்யாண ராமன், காதல் பரிசு போன்ற திரைப்படங்களில் கமல் ஹாசனுடனும் நடித்த நடிகை ராதா, பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இனி நான் நடிக்க மாட்டேன் என்று கமல் கூறியதாக ஒரு கட்டுரையை அண்மையில் படித்தேன். இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது'' என்று கூறினார்.

''அண்மையில் வெளியான பேட் மேன் போன்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படங்களில் கமல் இன்னமும் நடிக்கலாம். .பிறகு அவர் அரசியலில் ஈடுபடலாம் என்பதே என் கருத்து'' என்று நடிகை ராதா குறிப்பிட்டார்.

Image caption நடிகை ராதா

''வணிக ரீதியாக பிரபலம் அடைந்த கதாநாயகர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அரசியலில் இறங்க தீர்மானிப்பது தவறான முடிவு அல்ல'' என்று ராதா தெரிவித்தார்.

''பொதுவாக கமல் அனைத்து விஷயங்களையும் அறிந்தவர். அனைத்து விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். இதனால் கமலின் அரசியல் அறிவிப்பு எனக்கு வியப்பு அளிக்கவில்லை'' என்று ராதா தெரிவித்தார்.

இமயமலைக்கு செல்ல போகிறேன் என்றார் ரஜினி

''ரஜினியுடன் சில திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளேன். அவரை பொறுத்தவரை ஆன்மிகமும், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உள்ளவர். ஆனால் நன்றாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர் ரஜினி'' என்று அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''ராஜாதி ராஜா திரைப்பட படப்பிடிப்பின்போது நான் 10, 20 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சென்று அங்கு இருக்க போகிறேன் என்று ரஜினி கூறினார். இது எனக்கு அப்போது வியப்பை ஏற்படுத்தியது'' என்று ராதா குறிப்பிட்டார்.

திரைப்படத்தில் பார்க்கும் ரஜினி வேறு. நிஜத்தில் பார்க்கும் ரஜினி வேறு. ஒரு வெளிப்படையான மனிதர் ரஜினிகாந்த் என்றும் அவர் கூறினார்.

''அதே வேளையில் கமல் மிகவும் தைரியமானவர். இந்தளவு தைரியமாக அவர் ஒரு முடிவு எடுத்துள்ளார் என்ற முறையில் பார்த்தால் அவர் நிச்சயம் வெல்வார் என்று நினைக்கிறேன்'' என்று ராதா தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைARUN SANKAR/GETTY IMAGES

ரஜினி - கமல்: இருவரில் யாருக்கு ஆதரவு?

ரஜினி, கமல் ஆகிய இருவரும் இணைந்து பணியாற்ற முடியுமா என்று கேட்டதற்கு, இது அரிதான விஷயமாக தோன்றுகிறது. ஆனால், நடக்காது என்று நினைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ரஜினி, கமல் ஆகிய இருவரில் ராதா யாருக்கு ஆதரவளிப்பார் என்று கேட்டதற்கு ''அவர்களின் கொள்கைகளை நன்கு பார்த்து அறிந்த பிறகே யாரை ஆதரிப்பது , யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை நான் எடுப்பேன்'' என்று ராதா கூறினார்.

90களில் தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகையாக இருந்த குஷ்பு, ரஜினி, கமல் ஆகிய இருவருடனும் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.

ரஜினி, கமல் குறித்து பிபிசி தமிழிடம் நினைவுகூர்ந்த குஷ்பு ''ரஜினி , கமல் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் இருந்தே தங்கள் ரசிகர் மன்றம் மூலம் நற்பணிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், திரையுலக காலகட்டத்தில் நாங்கள் யாரும் அரசியல் குறித்து பேசியதில்லை'' என்று கூறினார்.

'சினிமாவை மட்டுமே சுவாசிப்பவர் கமல்'

''ரஜினி குறித்து எனக்கு அதிகமாக தெரியாது. கமல் பொதுவாக சினிமாவை மட்டுமே பார்த்து, படித்து, நேசித்து, சுவாசித்து வாழ்பவர். இருவருக்கும் அரசியல் நிச்சயம் புதிய களமாக இருக்கும். இதில் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று இப்போதே கூறமுடியாது'' என்று குஷ்பு குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Instagram
Image caption குஷ்பு

தமிழகத்தில் தொடர்ந்து திரையுலகினர் அரசியலுக்கு வருவது பற்றிக் கேட்டபோது ''திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் மட்டும் ஏன் விமர்சிக்கப்படுகின்றார் என்று தெரியவில்லை. ஆந்திராவிலும் இதுபோன்ற உதாரணங்கள் உண்டு. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதுதான் வித்தியாசம்'' என்று கூறினார் குஷ்பு.

தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அக்கட்சி அரசியலுக்கு வரும் அனைவரையும் வரவேற்கும் என்று தெரிவித்தார். யாரின் வருகையும் தங்கள் கட்சியை பாதிக்காது என்றும் குஷ்பு குறிப்பிட்டார்.

மக்களின் ஆதரவு வாக்குகளாக மாறுமா?

திரையுலகில் குஷ்புவை விட ரஜினி, கமல் ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்த போதிலும், அரசியலில் அவர்களுக்கு மூத்தவரான குஷ்பு இருவருக்கும் எவ்விதமான ஆலோசனைகளை கூறுவார்?

''இருவரும் அதிக காலம் சினிமா துறையில் இருந்துள்ளனர். அதிக காலம் இந்த உலகை கவனித்துள்ளனர். அவர்களுக்கு யாரும் பெரிதாக ஆலோசனை கூறத் தேவையில்லை'' என்பதுதான் குஷ்புவின் கருத்து.

Image caption மக்களின் ஆதரவு வாக்குகளாக மாறுமா?

''தனது ஸ்டைல் மூலமாக ரஜினியும், நடிப்பின் மூலம் கமல் ஹாசனும் மக்களின் மனதை வென்றுள்ளனர். ஆனால், இது அனைத்தும் வாக்குகளாக மாறும் என்று கூற முடியாது. தேர்தல் காலத்தில்தான் இதுகுறித்து தெரிய வரும்'' என்று குஷ்பு தெரிவித்தார்.

தனிப்பட்ட அளவில், ரஜினி,கமல் ஆகிய இருவரில் யாருக்கு உங்கள் ஆதரவு என்று கேட்டதற்கு, இதற்கு தான் பதில்கூற இயலாது என்றும் தனது ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே என்றும் குஷ்பு கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :