சினிமா விமர்சனம்: ஆறு அத்தியாயம்

வெவ்வேறு கதைகளைச் சொல்லும் படங்களை ஒன்றாக இணைத்து வெளியாகும் 'ஆந்தாலஜி' வகைத் திரைப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு.

சினிமா விமர்சனம்: ஆறு அத்தியாயம்

ஒரு வீடு இரு வாசல், மூன்று பேர் மூன்று காதல் போன்ற படங்கள் வந்திருந்தாலும் அவை ஒரே இயக்குனரால் இயக்கித் தொகுக்கப்பட்டவை.

இந்த ஆறு அத்தியாயம் திரைப்படத்தைப் பொறுத்தவரை, ஆறு தனித் தனிக் கதைகளை ஆறு இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

இந்த ஆறு கதைகளுமே பேய் அல்லது அமானுஷ்ய கதைகள் என்பது படத்தை மேலும் கவர்ச்சிகரமாக்குகிறது.

முதல் படமான சூப்பர் ஹீரோவில் மனநல மருத்துவரை சந்திக்க வருகிறான் சுப்பிரமணி. சுப்பிரமணி தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாகக் கருதிக்கொள்கிறான் என்பது, வீட்டாரின் புகார்.

மனநல மருத்துவரிடம், தான் விபத்திலிருந்து விமானம், ரயில் ஆகியவற்றைக் காப்பாற்றியிருப்பதாகச் சொல்கிறான்.

மனநல மருத்துவர் நம்ப மறுக்கவே, அவர் கண் முன்பாகவே வெடிவிபத்து ஒன்றை நிறுத்திக்காட்டுகிறான்.

ஆனால், இந்த விபத்துகளில் தெரிந்தவர்கள் இருந்தால் மட்டுமே, தனக்கு விபத்து குறித்து தெரியவந்து, அதை தடுக்க முடியும் என்கிறான் அவன்.

இதை சோதித்துப்பார்க்க நினைக்கும் மனநல மருத்துவர், வேண்டுமென்றே ஒரு விபத்தில் சிக்குகிறார். இந்தப் படத்தை இயக்கியிருப்பது கேபிள் சங்கர்.

இரு நபர்களுக்கு இடையிலான உரையாடலாகவே நகரும் இந்தப் படம், முடியும்வரை சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கிறது. படத்தின் முடிவும், பார்வையாளர்களே யூகிக்கும் வகையில் அமைந்திருப்பது இன்னும் அட்டகாசம்.

இரண்டாவது படமான 'இது தொடரும்'-ல் குழந்தை ஒன்றை பாலியல் துன்புறுத்தலில் கொன்றுவிடும் இளைஞனை இரு பேய்கள் அச்சுறுத்துகின்றன.

பிறகு மாடியில் இருந்து தள்ளிவிடவும் செய்கின்றன. ஆனால், இளைஞன் சாவதில்லை. ஏன் என்பது மீதிக் கதை. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஷங்கர் தியாகராஜன்.

சற்று குழப்பமாக துவங்கும் இந்தப் படத்தின் பிற்பகுதியில் சிறிது சுவாரஸ்யம் இருக்கிறது. ஆனால், படத்தில் நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் படமாக்கத்திலும் அமெச்சூர்தன்மை தென்படுவது இந்தப் படத்தின் பலவீனம்.

மூன்றாவது படம் எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா இயக்கியுள்ள மிசை. மூன்று இளைஞர்கள் ஒன்றாகத் தங்கியிருக்கிறார்கள்.

அதில் ஒரு இளைஞன் தன் காதலியிடம் காதலைச் சொல்லச் செல்கிறான். பிறகு அறைக்குத் திரும்பி அழுது புலம்புகிறான்.

வெளியில் சென்றிருந்த மற்ற இரண்டு இளைஞர்களும் திரும்பி வருவதைப் பார்த்து, ஒளிந்துகொள்கிறான்.

அவர்கள், இந்தக் காதலைப் பற்றி பேச ஆரம்பிப்பதோடு, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து முத்தமிடுகிறார்கள்.

இதை ஒளிந்திருந்து பார்க்கும் காதலன், பெரும் கோபமடைகிறான். ஆனால், முடிவு எதிர்பார்க்காத விதமாக இருக்கிறது.

இந்தப் படத்தின் முடிவில்தான் திருப்பம் இருக்கிறது. ஆகவே முதல் பாதி சற்று சுவாரஸ்யமில்லாதது போலத் தோன்றலாம். ஆனால், இந்தப் படம் முடியும்போது, ஒரு முழுமை ஏற்படுகிறது.

நான்காவது படம், அனாமிகா. தன் மாமாவின் வீட்டிற்குச் செல்லும் இளைஞன் ஒருவன், தன் மாமாவின் வீட்டில் ஒரு பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கேள்விப்படுகிறான்.

அந்த அச்சத்திலேயே இருக்கும் அவன், பக்கத்திலிருக்கும் ஒரு குடிசை வீட்டில் ஒரு பேயைச் சந்திக்கிறான். பிறகு என்ன ஆகிறது என்பதுதான் மீதிக் கதை.

துவக்கத்திலிருந்தே திகிலுடன் நகரும் இந்தப் படத்திலும் முடிவில்தான் திருப்பம். படத்தை இயக்கியிருப்பவர் ஈவிஏ சுரேஷ்.

ஐந்தாவது படம், சூப் பாய் சுப்பிரமணி. படத்தை இயக்கியிருப்பது லோகேஷ். சுப்பிரமணி என்ற இளைஞன் எந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தாலும் யாரோ வந்து அதை தடுத்துவிடுகிறார்கள்.

இந்த பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு மலையாள மாந்திரீகரை அணுகுகிறான் சுப்பிரமணி. அவர் இந்தப் பிரச்சனைக்கான விசித்திரமான காரணத்தைக் கண்டுபிடித்து, அதை விசித்திரமாகத் தீர்த்துவைக்கிறார்.

இந்த ஆறு படத்திலும் நகைச்சுவையுடன் நகரும் படம் இதுதான். முழுக்கவே சுவாரஸ்யமாக நகரும் இந்தப் படத்தில், மிருகங்களின் பேயை அறிமுகப்படுத்தி கலகலக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆறாவது படம், சித்திரமும் கொல்லுதடி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோகிலா என்ற பெண்ணின் ஆவி, தன் உருவத்தை வரைய நினைக்கும் மனிதர்களை யுகம் யுகமாக பழிவாங்குவதுதான் கதை.

சரித்திரத்தையும் தற்காலத்தையும் கலந்து ஒரு முழு நீள படத்திற்கான கதையை சில நிமிடங்களில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பெரும்பகுதி சித்திரக் கதையைப்போல நகர்வது படத்தின் மற்றொரு சுவாரஸ்யம். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

ஆங்கிலம், இந்தி, வங்க மொழியில் இம்மாதிரி பல்வேறு பேய்ப் படங்கள் இதுபோல ஆந்தாலஜி வகையில் உருவாகியிருக்கின்றன.

ஆனால், அந்த தொகுப்புப் படங்கள் எல்லாமே, யாரோ ஒருவரால் சொல்லப்படுவதைப் போல துவங்கி, ஒவ்வொரு கதையாக நிகழ்ந்து முடியும் அல்லது எல்லாக் கதைகளையும் இணைக்கும் ஒரு மையப் புள்ளி இருக்கும்.

ஆங்கிலத்தில் ஹவுஸ் ஆஃப் டெரர் ட்ராக், இந்தியில் டர்னா மனா ஹை, வங்க மொழியில் ஜெகானே பூத்தேர் போய் ஆகியவை இதற்கு நல்ல உதாரணங்கள்.

ஆனால், இந்தப் படத்தில் இந்த ஆறு கதைகளையும் இணைக்கும் எந்த கண்ணியும் கிடையாது. தனித் தனிக் கதைகள்தான்.

அதனால், ஒவ்வொரு கதையும் துவங்கி, அப்போதே முடித்துவிட்டால் மீதமிருக்கும் கதையில் சுவாரஸ்யமிருக்காது என்பதால் ஒவ்வொரு படத்தின் முற்பாதியை இடைவேளைக்கு முன்பும் பிற்பாதியை இடைவேளைக்குப் பின்பும் வைத்து தொகுத்திருப்பது புத்திசாலித்தனமான முயற்சி.

இந்தப் படத்தில் பலவீனம் என்று பார்த்தால், படமாக்கல்தான். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு மிகவும் குறைவு என்பதை மனதில் வைத்துப் பார்த்தால், திகில்பட ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடிய படம்தான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :