”அந்த செய்தி பொய்யாக இருந்திருக்கலாம்” - ஸ்ரீதேவி மரணம் குறித்து திரை உலகினர்

பாலிவுட் திரையுலகில் நீண்ட காலம் நம்பர் 1 நடிகையாகவும், இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையையும் பெற்ற ஸ்ரீதேவியின் எதிர்பாரா மரணம் தமிழ் திரையுலகினர் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீதேவி

பட மூலாதாரம், Getty Images

மரணமடைந்த ஸ்ரீதேவி குறித்து அவருடன் பணியாற்றிய தங்கள் அனுபவங்களை பல திரைப்பட பிரபலங்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

''ஸ்ரீதேவி மரணமடைந்துவிட்டார் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. அவர் இறந்ததாக வந்த செய்தி பொய்யாக இருக்கக்கூடாதோ என்று தோன்றுகிறது'' என்று ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த ஜானி திரைப்படத்தை இயக்கிய மகேந்திரன் தெரிவித்தார்.

அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல நல்ல மனிதரும்கூட என்று குறிப்பிட்ட மகேந்திரன், ஸ்ரீதேவியை இயக்குநர்களின் அபிமான நடிகை என்று சொல்லலாம் என்று கூறினார்.

'அர்ச்சனாவாகவே வாழ்ந்தார் ஸ்ரீதேவி'

''நான் இயக்கிய ஜானி திரைப்படத்தில் அவர் அர்ச்சனா என்ற பாடகி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதைவிட, அந்த கதாப்பாத்திரமாகவே ஸ்ரீதேவி வாழ்ந்தார் என்று கூறலாம்'' என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், E.GNANAM

படக்குறிப்பு,

ஜானி திரைப்படத்தில் ஸ்ரீதேவி

தனது திரைப்பட வரலாற்றில் மிக சிறந்த படம் ஜானி என ஸ்ரீதேவி கூறுவார் என்று மகேந்திரன் குறிப்பிட்டார்.

''ஜானி திரைப்படத்தில் இரவு படப்பிடிப்பு நடக்கும்போதும் அவர் மிக ஆர்வமாக இருப்பார். மற்ற படங்களைவிட இந்த திரைப்பட படப்பிடிப்பு தனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது என்று ஸ்ரீதேவி குறிப்பிடுவார்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

'நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்'

ஸ்ரீதேவி இந்தி திரையுலகம் சென்றபிறகு அவருடனான தொடர்புகள் சற்று குறைந்துவிட்டது . மீண்டும் கோகிலா திரைப்படத்தை நான் இயக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், சில காரணங்களால் நான் அந்த திரைப்படத்தை இயக்கமுடியவில்லை என்று மகேந்திரன் நினைவுகூர்ந்தார்.

பட மூலாதாரம், E.GNANAM

மிக சிறந்த நடிகையாக இருந்த போதிலும், நட்புக்கு எப்போதுமே முக்கியத்துவம் தருவார் என்று கூறிய மகேந்திரன், காட்சிக்கு ஸ்ரீதேவி எவ்வாறு தயார் ஆகிறார் என்பதே வியப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

உடற்பயிற்சிக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது மரணம் நிகழ்ந்தது பற்றி கூறுகையில், '' ஒருவேளை அவர் அதிகப்படியாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு விட்டாரோ என்று தெரியவில்லை. மரணம் என்பதை எப்போதுமே கணிக்க இயலாது. ஆனால், தமிழகத்தில் இருந்து பாலிவுட் சென்ற ஒரு மிக சிறந்த ஜாம்பவான் ஸ்ரீதேவி என்பதை யாராலும் மறக்க இயலாது'' என்று மகேந்திரன் தெரிவித்தார்.

'திறமை வாய்ந்த நடிகையை திரையுலகம் இழந்துவிட்டது'

நடிகை ஸ்ரீதேவி குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

பட மூலாதாரம், CHANDNI MOVIE/YASHRAJ FILMS

நடிகை ஸ்ரீதேவி மிகவும் திறமை வாய்ந்தவர் என்று குறிப்பிட்ட இளையராஜா, அவரின் குழந்தை பருவத்தில் இருந்தே ஸ்ரீதேவி தமக்கு நல்ல பழக்கம் என்று தெரிவித்தார்.

ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களுக்கு தாம் இசையமைத்திருப்பதாக கூறிய இளையராஜா, அவருடனான பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

நல்ல திறமை வாய்ந்த நடிகரை திரையுலகம் இழந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், ஸ்ரீதேவியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

'அழகும், நடிப்பும் ஒருசேர அமைந்த ஆபூர்வம் ஸ்ரீதேவி'

ஸ்ரீதேவியுடன் மூன்றாம் பிறை, குரு, போக்கிரி ராஜா உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் தனது நினைவுகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

பட மூலாதாரம், E.GNANAM

''எனக்கு ஸ்ரீதேவியுடன் இருந்த நினைவுகள் மிகவும் பசுமையானவை. பொதுவாக நடிகைகளில் சிலர் அழகாக இருப்பார்கள். சிலர் சிறப்பாக நடிப்பார்கள். இந்த இரண்டும் ஒருசேர வாய்த்த அபூர்வமான நடிகை ஸ்ரீதேவி'' என்று ஒய். ஜி. மகேந்திரன் கூறினார்.

''எந்த நடிகருக்கும் சவால்விடும் வகையில் அவரது நடிப்பு இருக்கும்'' என்று குறிப்பிட்ட ஒய். ஜி. மகேந்திரன், ''அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு தெரியும். பாபு என்ற திரைப்படத்தில் அவர் சிவாஜிக்கே சவால்விடும் வகையில் நடித்தார்'' என்றார்.

'அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்து விட்டாரோ?'

''ஒருவேளை அவர் அதிகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. அது அவரது உடலை எந்தளவு பாதித்துவிட்டதோ என்று தெரியவில்லை'' ஸ்ரீதேவியின் எதிர்பாராத மரணம் குறித்து ஒய். ஜி. மகேந்திரன் தெரிவித்தார்.

''தன்னை நம்பர் 1 நடிகை என்று அவர் அப்போதும் நினைத்ததில்லை. அவர் பழைய மாதிரியே அனைவரிடமும் பழகினார். நான் பலமுறை அவரிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளேன். அப்போதெல்லாம் அவர் மிக இயல்பாகவும், நட்பாகவும் பேசுவார்'' என்று ஒய். ஜி. மகேந்திரன் நினைவுகூர்ந்தார்.

நான்கு வயது முதல் நடித்துவரும் ஸ்ரீதேவி, தனது குடும்பத்துக்காகவும், நடிப்புக்காகவும் தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :