சினிமா செய்திகள்: கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” முதல் தனுஷின் “வட சென்னை” வரை

விவசாயத்தை மையமாக வைத்து கார்த்தி நடிக்கும் படம்

Image caption விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்'

“தீரன்: அதிகாரம் ஒன்று” திரைப்படத்திற்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படம் “கடைக்குட்டி சிங்கம்”.

இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் டைரக்ட் செய்கிறார். முதல் முறையாக தம்பி நடிக்கும் திரைப்படத்தை தன்னுடைய 2டி நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார் சூர்யா.

விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம் பலரை விவசாயத்தின் பக்கமாக ஈர்க்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

இந்தப் படத்தில் கார்த்தியின் அப்பாவாக சத்யராஜும் கதாநாயகிகளாக சாய்ஷா, பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அதேபோல் கார்த்தியின் சகோதரிகளாக மெளனிகா, யுவராணி, ஜீவிதா, தீபா, இந்துமதி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

பேய் ஒன்று கலக்கும் கவுதம் கார்த்தியின் “இருட்டு அறையில் முரட்டு குத்து

கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ஹர ஹர மஹாதேவகி.

அடல்ட் (வயது வந்தோர்) காமெடி வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை சந்தோஷ் ஜெயகுமார் என்ற புதுமுக இயக்குநர் டைரக்ட் செய்திருந்தார்.

அதே நிறுவனத்திற்கு மேலும் இரண்டு திரைப்படங்களை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் சந்தோஷ்.

அதில் ஒரு படத்தில் கவுதம் கார்த்தியும் இன்னொரு படத்தில் ஆர்யாவும் ஹீரோவாக ஒப்பந்தமானார்கள்.

அதில் “இருட்டு அறையில் முரட்டு குத்து“ என்ற பெயரில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள படத்தில் கவுதம் கார்த்தி நடித்துள்ளார்.

இதுவும் அடல்ட் காமெடி படம்தான். ஆனால் பேயும் படத்தில் உண்டு.

கஜினிகாந்த்” திரைப்படத்தில் ஞாபக மறதிமிக்க நபராக நடிக்கும் ஆர்யா

ஆர்யா நடிக்கும் “கஜினிகாந்த்” படம் வேறு மாதிரியான படமாம். இதில் ஆர்யா ஞாபக மறதிமிக்க நபராக நடித்திருக்கிறார்.

தனக்கு உள்ள பிரச்சனையால் என்னென்ன விளைவுகளை ஆர்யா சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த இரண்டு படங்களையும் மிகக் குறைந்த நாட்களில் படமாக்கியுள்ளார் இயக்குநர். வெறும் 70 நாட்களில் இரண்டு படங்களின் ஷூட்டிங்கையும் முடித்துவிட்டாராம்.

தற்போது போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இந்த இரண்டு படங்களையும் 14 நாட்கள் இடைவெளியில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

முதல் போஸ்டர் தயாராகும் தனுஷின் “வட சென்னை”

படத்தின் காப்புரிமை Getty Images

ஆடுகளம் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம் “வட சென்னை”.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் வேலைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

இதில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் போஸ்டரை (First look) வரும் வியாழன் அன்று வெளியிட உள்ளனர்.

அடுத்தடுத்து வெளியாக இருக்கும் ஜி.வி. பிரகாஷின் 5 படங்கள்

Image caption ஒரே நேரத்தில் 10க்கு மேற்பட்ட படங்களில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் குமார்

தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

இவர் நடித்து வெளியான நாச்சியார் படம் நல்ல வசூலைப் பெற்றிருக்கிறது.

இப்போது, பாண்டிராஜ் தயாரித்திருக்கும் “செம“, புதுமுக இயக்குநரின் “அடங்காதே“, “4ஜி“, “அய்ங்கரன்“, நடன இயக்குநர் பாபா பஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “குப்பத்துராஜா” ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

அதேபோல் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் “சர்வம் தாள மயம்” மற்றும் “100% காதல்” போன்ற படங்களின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

நாச்சியார் வெற்றியால் இந்த படங்கள் நன்றாக விற்பனையாகுமென இந்தப் படங்களைத் தயாரிப்பவர்கள் நம்புகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :