சினிமா செய்திகள்: கருப்புப் பணம் குறித்து பேசிய சிம்பு; விஷாலுக்கு ரஜினி ஆலோசனை

படத்தின் காப்புரிமை Kaala

தயாரிப்பாளர் சங்க விஷால் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், கவுரவ செயலாளர் கதிரேசன் மற்றும் பொருளாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அவர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்துள்ளார்.

மேலும், நல்ல நோக்கத்திற்காக இந்த வேலை நிறுத்தத்தை செய்துள்ளீர்கள். நீங்கள் செய்யும் செயல் நல்லதுதான். ஆனால் தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.ரஹ்மான்

‘சீமராஜா‘ படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை‘ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கும் புது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தை பற்றி அதிகாராப்பூர்வ அறிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் கதாநாயகி யார் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பதை பற்றி எந்த அறிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார் என்பதை அறிவித்துள்ளனர்.

அதேபோல் பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் சிவகார்த்திகேயனுடைய படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கிறார்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் இந்தப் படம் உருவாகவுள்ளதால் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.

அதிலும் ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என்று கருதுகின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை ஆர்.டி. ராஜா தயாரிக்கிறார்.

முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், பிரமாண்ட் பட்ஜெட் என தயாராகவுள்ள சிவகார்த்திகேயனின் புதிய படம் அவருக்கு மேலும் ஏறுமுகத்தை கொடுக்கும் என்று கூறுகின்றனர். விரைவில் சூட்டிங்கை தொடங்கவிருக்கும் படக்குழுவினர் 2019ம் ஆண்டு புது படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்ற சிம்பு

தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர் சங்கத்தோடு மார்ச் 21ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் சிம்பு கலந்து கொண்டார்.

இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் என்பதால், அதன் உறுப்பினராக இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

'AAA' படப்பிரச்சினை நிலவி வரும் சமயத்தில், தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் சிம்பு கலந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது.

ஆனால், இக்கூட்டத்தில் தமிழ் திரையுலகினரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தனது தரப்பு ஆலோசனைகளை எடுத்துரைத்திருக்கிறார்.

இது தொடர்பாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்ட போது, "சிம்பு கலந்து கொண்டது ஆச்சரியமானதாக இருந்தாலும், அவர் தரப்பு ஆலோசனைகளை அழகாக எடுத்துரைத்தார்.

'தமிழ் திரையுலகில் இருப்பதே 10 பெரிய நாயகர்கள் தான். அவர்களுடைய சம்பளத்தைக் குறைப்பதால் தமிழ் சினிமாவில் ஒன்றுமே ஆகிவிடாது. கடவுள் புண்ணியத்தில் நானும் அதில் ஒருத்தன். ஆனால், நீங்கள் எதற்கு தமிழ் சினிமாவில் கருப்பு பணத்தில் இயக்குகிறீர்கள். அனைத்தையும் வெள்ளைப் பணமாகக் கொடுத்து, ஒழுங்காக வரிக்கட்டி கணக்கு காட்டுங்கள். எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது நாயகர்களுக்கு தெரியவேண்டும். கருப்புப் பணம் என்பதால் தான் வெளியே தெரியவில்லை. இதே வெள்ளை பணமாக இருந்தால் அனைத்துமே வெளியே தெரிந்துவிடும். தமிழ் சினிமாவில் முதலில் கருப்பு பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும். கருப்பு பணமே இருக்கக்கூடாது என சட்டம் கொண்டு வாருங்கள். திரையரங்குகள் எவ்வளவு பேர் படம் பார்க்கிறார்கள் என்பது நடிகர்களுக்கு தெரியவேண்டும். டிக்கெட் விலை எவ்வளவு, ஒரு காட்சிக்கு எத்தனை பார், தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் வருகிறது உள்ளிட்ட விவரங்கள் நடிகர் மற்றும் இயக்குநர் என அனைவருக்குமே தெரியவேண்டும்' என்று சிம்பு பேசினார்.

இதற்கு அனைத்து தரப்பினருமே ஆதரவு தெரிவித்தோம்.

மேலும், "நாயகர்கள் தாமதமாக வருவதால் படம் தாமதமாக வருகிறது என்கிறீர்கள். 9 - 6 கால்ஷீட் என்றால் 11:30 மணிக்கு வருகிறேன்.

ஆனால், அன்றைய தினம் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே 4 மணிக்குள் முடித்துக் கொடுக்கிறேனே அதை ஏன் யாரும் பேசுவதில்லை.

எத்தனை மணிக்கு வந்தால் என்ன, அன்றைய வேலையை முடித்தேனா இல்லையா" என்று ஆக்ரோஷமும் காட்டினார். இதற்கு அவரை இயக்கிய இயக்குநர்களும் தங்கள் தரப்பு ஆதரவையும் தெரிவித்தார்கள்.

திரையரங்குகள் தரப்பையும் 2 வகையாக பிரிக்க வேண்டும். ஏ வகை என்றால் 150 ரூபாய் கூட டிக்கெட் விலையை வைத்துக் கொள்ளட்டும். பி வகை என்றால் 50 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யுங்கள்.

எத்தனை சிறு தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். ஷங்கர் சார் படத்துக்கு 150 ரூபாய், சிறு இயக்குநரின் படத்துக்கும் 150 ரூபாய் என்றால் எப்படி என்று திரையரங்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சிம்பு பேசினார்.

தற்போது ஏப்ரல் மாத வெளியீட்டை முன்வைத்து பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'காலா' உள்ளிட்ட பல படங்களில் அனைத்து நடிகர்களுடைய உழைப்பு அடங்கியிருக்கிறது. அதையும் கருத்தில் கொண்டு வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும்.

அதை விடுத்து பொதுவாக சிறுபடங்கள் வெளியீட்டுக்குப் பிறகே பெரிய படங்கள் என்று கூறுவது தவறானது என்றும் சிம்பு பேசினார்.

இது அனைவருக்குமே ஆச்சர்யம். ஏனென்றால் அவருடைய படங்கள் எதுவும் வெளியாகாத சூழலில், மற்ற நடிகர்களின் படத்துக்காக பேசுவது இதர நடிகர்களிடம் இல்லாத குணம்" என்று சிம்பு பேசியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்