சினிமா செய்திகள்: அட்லீயின் அடுத்த படம், அனிருத்தின் புதிய திட்டம்

ஜூனியர் என்.டி.ஆர் வைத்து தான் படம் எடுப்பது உறுதி:அட்லீ

‘ராஜா ராணி‘ திரைப்படம் மூலமாக இயக்குநரானவர் அட்லீ. முதல் படம் பெரிய வெற்றியடைய நடிகர் விஜயை வைத்து ‘தெறி‘, ‘மெர்சல்‘ ஆகிய இரண்டு படங்களை  இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

படத்தின் காப்புரிமை twitter/Atlee_dir

கடந்த தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்‘ படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ‘மெர்சல்‘ வெளியாகி ஐந்து மாதங்களுக்கு மேலானாலும் அட்லீ தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது.

இதையடுத்து அட்லீ தன்னுடைய அடுத்தப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து தான் படம் எடுப்பது உறுதி என்றும், ஆனால் அந்தப் படம் உருவாக இன்னும் காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய அடுத்தப் படம் தமிழில்தான் என்றும், தன்னுடைய அடுத்த ஹீரோ குறித்த செய்தி வெளியாகும்போது அனைவருக்கும் சர்ப்ரைசாக இருக்கும் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார்.

வருடத்திற்கு மூன்று படங்கள்:அனிருத்

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் அனிருத். ‘3‘ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை facebook/AnirudhOfficial

தொடக்கத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்து வந்த அவர், தற்போது வருடத்திற்கு மூன்று படங்கள் என்ற பார்முலாவில் பயணிக்க தொடங்கியுள்ளார்.

ஒரு புறம் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.

இதுவரை கோலாலம்பூர், துபாய், டொரோண்டோ ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ள அனிருத், வரும் ஜூன் 16ம் தேதி லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

லண்டன் நிகழ்ச்சியை தொடர்ந்து ஜூன் 17-ஆம் தேதி பாரீஸ் நகரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். முதல் முறையாக லண்டன் மற்றும் பாரீஸில், தான் நடத்தவிருக்கும் நிகழ்ச்சிக்காக அனிருத் தயாராகிறார்.

அந்த நிகழ்ச்சிகளில் அவர் இசையமைத்த படங்களில் இருந்த பாடல்களை லைவாக பாடுகிறார் அனிருத்.

சூர்யா - இயக்குர் ஹரி கூட்டணி

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி ஆகியோரின் கூட்டணி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இவர்கள் கூட்டணியில் இதுவரை ‘ஆறு‘, ‘வேல்‘, ‘சிங்கம்‘ படத்தின் மூன்று பாகங்கள் என மொத்தம் ஐந்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை twitter/Suriya_offl

இந்த நிலையில் சூர்யாவோடு மீண்டும் தான் கூட்டணி அமைக்க உள்ளதாக இயக்குநர் ஹரி கூறியுள்ளார்.

ஹரி தற்போது விக்ரம் நடிக்கும் ‘சாமி‘ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். அந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது.

அதேபோல் சூர்யா, செல்வராகவன் இயக்கும் ‘என்ஜிகே‘ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கே.வி ஆனந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை twitter/suriya_Offl

இந்த இரண்டு படங்களை முடித்ததும் சூர்யா - ஹரி கூட்டணி மீண்டும் அமையவுள்ளது. ஆனால் அந்த படம் ‘சிங்கம்‘ படத்தின் நான்காவது பாகமா அல்லது புதிய திரைபப்டமா என்ற தகவல் வெளியாகவில்லை.

மெர்குரி: பேசா படம்

படத்தின் காப்புரிமை GULOBAKAVAL

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மெர்குரி‘. வசனம் இல்லாத பேசா படம்வகையில் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

வசனம் இல்லாமல் உருவாகியிருக்கும் ‘மெர்குரி‘ படத்தை ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் தொடர்ந்து வருவதால் படத்தை வெளியிட கூடாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் இயக்குநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிக் டிக் டிக்‘ படத்துடைய தயாரிப்பாளர்  நிமிசந்த் ஜபாக் கடுமையான தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் ‘மெர்குரி‘ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் வெளியிடுவது குறித்தும் தயாரிப்பாளர் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாளை அல்லது நாளை மறுதினத்திற்குள் அதற்கான முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளபடத்தின்தமிழ் ரீமேக்கில் நடிகர்ஜீவா

படத்தின் காப்புரிமை AVNI CINEMAS

தமிழ் சினிமாவுடைய முன்னணி இளம் நடிகர்களில் முக்கியமானவர் ஜீவா. தரமான கதைகளை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

ஆனால் சமீபத்தில் இவர் தேர்வு செய்த அனைத்துப் படங்களும் தோல்வியை சந்தித்தன. மேலும் ஜீவாவின் கதை தேர்வு சரியான முறையில் இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்த நிலையில அவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ‘கலகலப்பு 2‘ படம் ஜீவாவிற்கு வெற்றியை கொடுத்துள்ளது.

அதேபோல் தான் நடித்திருக்கும் ‘கீ‘ படத்தையும் அதிகம் எதிர்பார்த்திருக்கிறார் ஜீவா.

இதை தவிர தற்போது புதுமுக இயக்குநரின் ‘கொரில்லா‘ படத்திலும், தேசிய விருது வென்ற ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜிப்சி‘ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மலையாளத்தில் கடந்த வாரம் வெளியாகி வெற்றியடைந்திருக்கும் ‘சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்‘ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

VPF கட்டணத்தை நீக்க வேண்டும்

படத்தின் காப்புரிமை Getty Images

டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கும் VPF கட்டணத்தை நீக்க வேண்டும், வெளிப்படத்தன்மையோடு திரையரங்க பயணச்சீட்டுகள் விற்கப்பட வேண்டும். அதற்கு கணினி முறையில் டிக்கெட் விற்பனை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் விநியோகஸ்தர்களோடு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகளை திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது மிகப்பெரிய விவாதத்துக்கு உள்ளானது. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்த விளக்கமும் கொடுத்திருந்தார். இந்த நிலையில செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு, கோவை பகுதிகளை சேர்ந்த பல திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதேபோல் இன்னும் பல திரையரங்க உரிமையாளர்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ரஜினியை இயக்கும் இளம் இயக்குநர்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ், ராஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரஜினிகாந்தின் அரசியல் நுழைவை தொடர்ந்து உருவாகவிருக்கும் படம் என்பதால், அதில் அரசியல் சாயம் இருக்கும் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த செய்தியை கார்த்தி சுப்பராஜ் மறுத்துள்ளார். அதேபோல் தான் இயக்கும் புதிய படம், தன்னுடைய சாயலில் ரஜினிகாந்துடைய கமர்ஷியல் விஷயங்களையும் கலந்து உருவாகவுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரஜினி ரசிகர் அவரை வைத்து படம் இயக்கினால் எப்படி இருக்குமோ அந்த வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கதையை மெறுக்கேற்றும் வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும், ரஜினிகாந்த் படம் என்பதால், மகிழ்ச்சி கலந்த பதட்டமான சூழலில் தான் இருப்பதாகவும் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

அஜித் படத்தில் குணச்சித்திர நடிகர்போஸ் வெங்கட்

தலைநகரம், சிவாஜி, சிங்கம் போன்ற படங்களில் நடித்தவர் போஸ் வெங்கட். குணசித்திர நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் இவருக்கு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவண், கார்த்தியுடைய தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் பெரும் பெயரை பெற்று தந்துள்ளது.

நடிப்பை தவிர டப்பிங் கலைஞராகவும் வலம் வருகிறார் போஸ் வெங்கட். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் போஸ் வெங்கட் தற்போது அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார்.

2003யில் இருந்து சினிமாவில் நடித்துவந்தாலும், இவர் இதுவரை அஜித்துடன் இணைந்து நடிக்காமல் இருந்தார்.

அது தற்போது விசுவாசம் படம் மூலமாக நிறைவேறியுள்ளது. மேலும், விசுவாசம் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் விசுவாசமான அடியாலாக போஸ் வெங்கட் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மகன் விஸ்வநாத்தை இயக்கும் வல்லரசு பட இயக்குநர் மகாராஜன்

விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் வல்லரசு. இந்த படத்தை மகாராஜன் என்பவர் இயக்கியிருந்தார்.

வல்லரசு படத்தை தொடர்ந்து அஜித் நடித்த ‘ஆஞ்சநேயா‘, அர்ஜூனின் ‘அரசாட்சி‘ ஆகிய படங்களை இயக்கினார்.

ஆனால் முதல் படம் போல மற்ற இரண்டு படங்கள் வெற்றியடையவில்லை. இந்த நிலையில் இந்தியில் வெளியான ஜோர், சாம்பியன், கிராந்தி போன்ற படங்களுக்கு கதை எழுதினார்.

இதற்கு பின் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2‘ படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளார்.

அந்த படத்தை முடித்ததும் தன்னுடைய மகன் விஸ்வநாத்தை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் மகாராஜன்.

தந்தை இயக்கவுள்ள படத்திற்காக சண்டைபயிற்ச்சி, நடனம் ஆகியவற்றை முறையாக கற்றுள்ளாராம் விஸ்வநாத். கமர்ஷியல் வகையில் உருவாகவிருக்கும் அந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

மேலாண்மை வாரியத்திற்கு போராடுவதால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பிரசாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். இவர் நடிப்பில் ‘வைகாசி பிறந்தாச்சு‘, ‘ஜீன்ஸ்‘, ‘வின்னர்‘ உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளன.

ஆனால் தற்போது சினிமாவில் நடிப்பதை குறைத்துவிட்டு தன்னுடைய மற்ற வியாபாரங்களை கவனித்து வருகிறார்.

ஒவ்வொரு வருடமும் தன்னுடைய பிறந்த நாளை (ஏப்ரல் 6) தன்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் கொண்டாடும் பிரசாந்த் இந்த முறை தவிர்த்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழகமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டம் அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: