சினிமா விமர்சனம்: ரேம்பேஜ் (Rampage)

  • 14 ஏப்ரல் 2018
சினிமா விமர்சனம்

இதே பெயரில் வெளிவந்த ஒரு 'வீடியோ கேம்'ன் லேசான தழுவல்தான் இந்தப் படம். San Andreas படத்தை எடுத்த ப்ராட் பேடோன், அந்தப் படத்தின் நாயகனான ட்வைன் ஜான்சனோடு மீண்டும் கைகோர்த்திருக்கிறார்.

ஒரு மிருகக்காட்சி சாலையில் மனிதக் குரங்குகள் ஆய்வாளராகவும் மிருகவேட்டை தடுப்பாளராகவும் உள்ள டேவிஸ், அங்கிருக்கும் மனிதக் குரங்கான ஜார்ஜுடன் சைகை மொழியில் பேசக்கூடியவர். இந்த நிலையில், விண்வெளியில் நடக்கும் ஒரு மரபணு மாற்ற ஆராய்ச்சி விபரீதமாக முடிய, அங்கிருந்து மரபணு மாற்ற மருந்துக் குடுவைகள் மூன்று பூமியில் வந்து விழுகின்றன. அவற்றில் ஒன்று ஜார்ஜை பாதித்து, மிகப் பெரிய ராட்சத குரங்காக மாற்றிவிடுகிறது.

திரைப்படம் ரேம்பேஜ் (Rampage)
நடிகர்கள் ட்வைன் ஜான்சன், நவோமி ஹாரிஸ், மலின் ஏகர்மேன், ஜெஃப்ரி டீன் மோர்கன்
இயக்கம் ப்ராட் பேடோன்

அதேபோல ஓநாய் ஒன்றும் முதலை ஒன்றும் இதே மரபணு மாற்ற மருந்தால் தாக்கப்பட்டு ராட்சத உருவங்களாக வளர்ந்துவிடுகின்றன.

அவை அமெரிக்காவிற்குள் புகுந்து பெரும் நாசத்தை ஏற்படுத்த, அவற்றை குண்டுவீசி அழிக்க முயற்சிக்கிறது அரசு. அதற்குள் மாற்று மருந்து அளித்து, ஜார்ஜ் என்ற குரங்கையாவது பாதுகாக்க முயல்கிறார் டேவிஸ். அதற்கு உதவுகிறார் விஞ்ஞானியான கேட் கால்ட்வெல்.

ஒரு படுசுமாரான சயின்ஸ் ஃபிக்ஷன் சம்பவங்களுடன் துவங்கும் படம் சீக்கிரமே, உலகத்தை அழிக்க வரும் மிருகங்களுடன் ஹீரோ சண்டையிடும் ஒரு சாகஸமாக மாறுகிறது. இந்தப் படத்தில் வரும் மரபணு மாற்ற ஆராய்ச்சி எப்படி நடக்கிறது, அது எப்படி மிருகங்களையும் மனிதர்களையும் பாதிக்கும் என்பதிலெல்லாம் நேரத்தை வீணாக்காமல் ஆக்ஷனில் இறங்கியிருப்பதுதான் இந்தப் படத்தின் ஒரே சாதகமான அம்சம்.

வளர்ந்து கொண்டேபோகும் ஒரு ராட்சத குரங்கு, ஒரு ராட்ச ஓநாய், ஒரு ராட்சத முதலை ஆகியவை நகருக்குள் நுழைந்த பிறகு, கண்ணில் எதிர்ப்படுவதையெல்லாம் துவம்சம் செய்யும் காட்சிகள்தான் படத்தின் பெரும்பகுதி. இடையிடையே நாயகனும் நாயகியும் உலகத்தைக் காப்பாற்றுவதைப் பற்றித் திட்டமிடுகிறார்கள்.

இதெல்லாம் பல படங்களில் பார்த்து, பார்த்து சலித்துப்போன காட்சிகள்தான். இந்தப் படத்தின் பல காட்சிகள், பல கொரிய திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றன.

படத்தின் நாயகனான ட்வைன் ஜான்சன், இம்மாதிரி உலகத்தைக் காப்பாற்றும் கதைக்கெனவே படைக்கப்பட்டதைப்போல ஆகிவிட்டார்.

நாயகி நவோமி ஹாரிசிற்கு ஹீரோவுடனேயே சுற்றும் வேலையைத் தவிர, பெரிதாக வேறு எதுவும் இல்லை.

ராட்சத மிருகங்கள் நகரை துவம்சம் காட்சிகளை ரசிக்கும் குழந்தைகளுக்கான படம். மற்றவர்கள் ரசிப்பது கடினம்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்