"தரமான படங்களுக்கு இங்கு இடமில்லை" - தேசிய விருது பெற்ற ’டூ லெட்’ பட இயக்குநர் செழியன்

டூ லெட் படத்தின் காப்புரிமை TO LET

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் கடந்தாண்டு உருவான டூ லெட் (TOLET) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெற்றுள்ளது. இந்நிலையில், அதன் கதைகளத்தை பற்றி பிபிசி தமிழிடம் மனம் திறந்தார் இயக்குநர் செழியன்.

தேசிய விருது பெற்றது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், விருது என்பது ஒரு வெளிச்சம், ஓர் அங்கீகாரம் மற்றும் ஒரு கவனத்தை கொடுப்பதாக குறிப்பிட்டார்.

எந்த வாழ்வியலை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த செழியன், டூ லெட் என்ற தலைப்பிலேயே இந்த கதையின் தன்மை என்ன என்பதை வைத்திருப்பதாக கூறினார்.

"டூ லெட் - வீடு தேடுவது, ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறுவது அல்லது உங்களுக்கு தகுந்த வீடு இங்கு காலியாக உள்ளது என்பதற்கான அறிவிப்புதான் அந்த வார்த்தை. இதற்கு பின் நிறைய அரசியலும் நோக்கமும் உள்ளது. ஓரிடத்தில் டூ லெட் போர்ட் இருந்து, நீங்கள் வீடு வாடகைக்கு கேட்டால் அது உடனடியாக கிடைத்து விடாது" என்கிறார் அவர்.

இந்த வார்த்தைக்கு பின்னால், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் மறைந்துள்ளதாக குறிப்பிடுகிறார் செழியன்.

"சக மனிதர்களாக இருந்தாலும், நமக்கு வீடு கொடுக்க ஒரு தகுதியை எதிர்பார்க்கிறார்கள். அதற்குள் ஜாதி, மத, பொருளாதார வித்தியாசங்களும் உள்ளன. இது எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்து எடுத்த படம்தான் டூ லெட்"

இந்த கதை உங்களுடைய வாழ்க்கையில் நடந்த அல்லது சந்தித்த நிகழ்வுகளில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 2007ஆம் ஆண்டில் தானே வீடு தேடி அலைந்ததாகவும் இந்த பிரச்சனையில் தாமும் ஒரு சாட்சியாக நிற்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

தானும் தன் நண்பர்களும் ஒவ்வொரு பக்கமாக வீடு தேடி அலைந்ததாக கூறுகிறார். அப்போது தோன்றியதுதான் இந்த கதை. இந்த பிரச்சனையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்ததாக செழியன் கூறினார்.

ஒருவருடைய தோற்றத்தையும் நிறத்தையும் பெயரையும் வைத்து, அவர்கள் என்ன மதம், என்ன ஜாதி என்று விசாரித்த பின்புதான் இங்கு வீடு வாடகைக்கு விடப்படுகிறது. இதை தன் படத்தில் விவரமாக பதிவிட்டிருப்பதாக அவர் கூறினார்.

"சென்னை போன்ற நகரத்தில், ஜாதி இல்லை தீண்டாமை இல்லை என்று சொல்லக்கூடிய இந்த நகரத்தில் டூ லெட் என்கின்ற வார்த்தைக்கு பின்னால் இதெல்லாம் இருக்கிறது. சிலர் டூ லெட் விளம்பரம் போடும்போதே சைவம் மட்டும் என்று குறிப்பிடுகிறார்கள். இதையெல்லாம் முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான படம்தான் இது"

சென்னைக்கு வரும்போது இயக்குனர் ஆகவேண்டும் என்று ஆசையில் வந்ததாக குறிப்பிடும் செழியன், வந்த புதிதில் சீமானுடன் தங்கியிருந்ததாக கூறுகிறார்.

ஆனால், தன்னை ஒளிப்பதிவு செய்ய கத்துக் கொள்ளும்படி இயக்குனர் ருத்ரையா கூறியதால், ஒளிப்பதிவாளரானதாக தெரிவித்தார். இதில் சேர்ந்து இந்த துறையை நன்றாக கற்றுக் கொண்டபின் டைரக்டராகலாம் என்று முடிவெடுத்த பின் ஒரு கட்டத்தில் படம் இயக்க முடிவு செய்ததாக கூறினார்.

தரமான படத்தை இயக்கிவிட்டு ஏன் இன்னும் திரைக்கு கொண்டுவரவில்லை என்று கேட்டதற்கு, இந்த கேள்வியை சினிமா தொழில் செய்பவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்கிறார். உலகம் முழுவதும் இருப்பவர்கள் இந்த படத்தை பார்த்துள்ளனர், ஆனால் இங்கு இருப்பவர்கள் இன்னும் இதை பார்க்கவில்லை. இதற்கு இங்குள்ள சிஸ்டம்தான் காரணம் என்கிறார் செழியன்.

"ஒரு நல்ல படம், தரமான படம் எடுத்தவுடன் ரிலீஸ் செய்யக் கூடிய சூழல் இங்கு இல்லை. யார் நடித்திருக்கிறார்கள்? எத்தனை பாட்டு? எவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது? எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இதையெல்லாம் முன்வைத்து, இப்படிப்பட்ட படங்களை பார்க்க யார் வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது."

இங்குள்ள சிஸ்டம் என்பது, பிரபலமானவர்களுக்கும் பெரியவங்களுக்குமான சினிமாவாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறார் செழியன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தேசிய விருது மனம் திறக்கிறார் ரஹ்மான்

"30 நாடுகளில் 17 சர்வதேச விருதுகளை டூ லெட் படம் பெற்ற போது கவனம் வரவில்லை. இத்தாலியில் இந்த படத்தை பார்த்து பிடித்து போய், அவர்கள் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து திரையிட்டார்கள். அதற்கு பரிசு கொடுத்ததை சமூக ஊடகங்களில் பகிர்ந்த போதும் யாரும் கவனிக்கவில்லை. ஆனால் தேசிய விருது பெற்றவுடன் இந்த படம் கவனம் பெற்றது"

இங்கு ரிலீஸ் செய்ய கூடாது என்பது தன் நோக்கமல்ல என்று கூறும் செழியன், இது நம் மக்களுக்கான கதை, மக்கள் பார்க்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட கதை என்கிறார்.

ஆனால், இங்கு சரியான சூழல் இல்லாததால் விருது கிடைத்த பின்னரே, டூ லெட் படத்தை திரையிட முன்வந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

ஒரு படைப்பானது விருது பெற்று அங்கீகரிக்கப்படும் போது, அதன் தரம் உயர்கிறது என்றும் அவர் கூறினார்.

டூ லெட் படத்தை எப்போது திரையில் பார்க்கலாம்? ஓரிரு மாதங்களில் இப்படம் ரிலீஸாகும் என்று கூறிய செழியன், பெரிய நிறுவனங்கள் இதனை வாங்கி வெளியிட முன் வந்துள்ளதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: