சினிமா செய்திகள்: பிரமாண்டமாக வெளியாக உள்ள 'காலா' பாடல்கள்

  • 29 ஏப்ரல் 2018

இந்த வார தமிழ் சினிமா உலகம் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் 'காலா'. ஆக்‌ஷன் பார்முலாவில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காலா படத்தை ஜூன் 7ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதற்கு முன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். காலா படத்தில் 7 பாடல்கள் உள்ளதாகவும், அதில் 4 பாடல்கள் முழு பாடல்கள் முறையிலும் 3 பாடல்கள் சண்டை காட்சி மற்றும் சில காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பது போலவும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியாகளாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஹர ஹர மகாதேவகி. இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியிருந்தார்.

ஹர ஹர மகாதேவகி இரட்டை அர்த்தை வசங்களோடு எடுக்கப்பட்டிருந்தாலும் தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. இதை தொடர்ந்து கவுதம் கார்த்தியும் சந்தோஷ் ஜெயகுமாரும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்காக இணைந்துள்ளனர்.

பேய்க் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 'ஹர ஹர மகாதேவகி' படம் போலவே இந்த படத்திலும் இரட்டை அர்த்த வசனங்களை வைத்துள்ளார் இயக்குனர். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தாலும் நடிகர் ஆர்யா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்தப் பாடல் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தம் முடிந்த பின்னர் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் வரும் மே 11ம் தேதி 4 படங்கள் வெளியாகவுள்ளன. அதில் விஷால் நடித்துள்ள 'இரும்புத்திரை', அரவிந்த் சாமியுடைய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இந்தப் படங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குக் குழுவின் ஒப்புதலோடு வெளியாகின்றன. இதில் 'நடிகையர் திலகம்' மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு மே 9ம் தேதியே வெளியாகிறது. இதில் எந்தப் படம் வசூல் ரீதியில் வெற்றியடையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆனார் அரவிந்த் சாமி. அந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து போகன் படத்தில் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையைக் கற்ற வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றார். ஆனால் அந்தப் படம் வெற்றியடையவில்லை. இதைத் தொடர்ந்து 'சதுரங்க வேட்டை-2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'நரகாசூரன்' உள்ளிட்டப் படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் "தனி ஒருவன் படம் போல வில்லன் ரோலில் நடிக்கச் சொல்லி பல படக்குழுவினர் என்னை அனுகினர். ஆனால் அதுமாதிரியான கதாபத்திரத்தில் தொடர்ந்து நடிக்க எனக்கு விருப்பமில்லை," என்று அரவிந்த் சாமி கூறினார். அதேபோல் திகில் படங்கள் தனக்கு பிடிக்காது என்றும், அதுபோல படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் அரவிந்த் சாமி தெரிவித்தார். மேலும் அரசியல் ஆர்வம் உள்ளதா என்ற கேள்விக்கு அரசியலில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் அது குறித்த கருத்துக்களைப் பதிவிட விரும்புவதாகவும் கூறினார் அரவிந்த் சாமி.

வெயில், அங்காடி தெரு போன்ற படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்த இயக்குனர் வசந்தபாலன். யதார்த்தமான கதைகளுக்கு உயிரோட்டத்துடன் திரைக்கதை அமைத்து தன்னுடைய படங்களின் மூலம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'காவியத் தலைவன்' படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை.

இதனால் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்ட வசந்தபாலன் தற்போது ஒரு கதையை தயார் செய்துள்ளார். அந்த கதையில் ஜி.வி பிரகாஷ்குமாரை ஹீரோவாக நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் வசந்தபாலன். இதற்கான பேச்சுவாத்தை அனைத்தும் நடந்து முடிந்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரை முதன் முதலில் வெயில் படத்தில் இசையமைப்பாளராக வசந்த பாலன்தான் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்