தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மய்யம் தொடங்கப்பட்டது ஏன்?

  • 3 மே 2018
வைஷாலி சுப்ரமணியம்

தமிழ் சினிமா துறையில் பெண் தொழில்நுட்ப கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மய்யம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் வைஷாலி சுப்ரமணியம் பி.பி.சி தமிழிடம், புதிய அமைப்பின் நோக்கத்தை பகிர்ந்துக்கொண்டார்.

''100 ஆண்டுகளை கடந்திருக்கும் இந்திய சினிமாவில் பெண்களுக்கு என்று தனி சங்கமோ அல்லது அமைப்போ இல்லாமல் உள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண் தொழில்நுட்ப கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அமைப்பை தொடங்கியுள்ளோம். மேலும் இந்த அமைப்பின் மூலம் பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்யை ஏற்படுத்தி கொடுக்கவும் உள்ளோம் என்று கூறுகிறார் வைஷாலி.

சினிமா துறையில் இருக்கும் ஆண்களுக்கே இன்று மரியாதை இல்லாத சூழல் உள்ளது. ஆண்களுக்கே அந்த நிலை என்றால் பெண்களுக்கான மரியாதை எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.

படத்தின் காப்புரிமை STRDEL

படிப்பை முடித்துவிட்டு சினிமா கனவோடு இங்கு வரும் ஏராளமான பெண்கள் பாலியல் சுரண்டல்கள் மூலம் ஏமாற்றப்படுகின்றனர். அதில் பலர் வாழ்க்கையையும் இழந்து, கனவையும் தொலைத்துள்ளனர். அதில் `அட்ஜெஸ்ட்' செய்துகொள்ள விருப்பம் இல்லாதவர்கள் சினிமாவே வேண்டாம் என்று திரும்பி சென்றுள்ளனர். இன்னும் சிலர் கனவுக்காக விருப்பப்பட்டு அட்ஜெஸ்ட் செய்துகொள்கின்றனர். அதில் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அப்படி ஏமாற்றப்பட்ட சிலர் எங்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்றார்.

இதுபோல பெண்கள் வருங்காலங்களில் பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் எண்ணினோம், இந்த விஷயங்களை அகற்ற வேண்டும் என்றும் திட்டமிட்டோம். அதனால்தான் இன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மய்யத்தை தொடங்கியுள்ளோம். எங்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தால் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம். இதற்காக பிரபலமான ஒரு வழக்கறிஞர் சங்கர சுப்பு எங்களுக்கு உதவி செய்கிறார்.

ஆனால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக முன் வந்து புகார் கொடுக்க வேண்டும். அப்படி புகார் கொடுத்து அதற்காக போராடும் போது சிலர் நம்மை ஏளனமாக பார்ப்பார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் போராடவேண்டும். அவ்வாறு செய்யும்போதே தவறுகளும், பாலியல் சுரண்டல்களும் தவிர்க்கப்படும் சூழல் எட்டப்படும். அந்த நிலையை ஏற்படுத்துவதே எங்கள் அமைப்பின் நோக்கம் என்று கூறுகிறார் வைஷாலி சுப்ரமணியம்.

இந்த அமைப்பு தொடங்குவது குறித்த செய்தி வெளியான சமயத்திலேயே எங்களை நிறையபேர் தொடர்பு கொள்கின்றனர். இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தெரிவிக்கிறார்.

திரைத்துறையில் பெண்களுக்கான இடம்

மேலும் திரைத்துறையில் பெண்களுக்கான இடம் குறைவாகவே உள்ளது. இதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்திய சினிமா துறையில் அந்த காலத்தில்  T.P.  ராஜலட்சுமி, பானுமதி ராம கிருஷ்ணன், சாவித்திாி விஜய நிா்மலா, ஷீலா, மற்றும் தற்போது சுதா கொங்கரா, ரேவதி, மதுமிதா, பிரியா.வி, அஞ்சலி மேனன், சுஹாசினி போன்ற சில பெண் இயக்குநர்களும், பி.ஆர். விஜயலட்சுமி, பெளசியா, பீாித்தா போன்ற வெகு சில ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே சாதித்துள்ளனர். பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதே அதற்கு காரணம். ஒரு இயக்குநரிடமோ, ஒளிப்பதிவாளரிடமோ வாய்ப்புக் கேட்டுச் சென்றால் பெண்களை அதிக அளவில் உதவி இயக்குநர்களாக சேர்த்துக் கொள்ளத் தயங்குகின்றனர்.

அதில் ஒருசிலர் மட்டும் ஒரு பெண் உதவி  இயக்குநரை வைத்துக்கொள்கிறனர். அவர்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பை ஏற்படுத்துவது. குறிப்பாக ஒரு இடத்திற்கு சூட்டிங் சென்றால் பெண்களுக்கான கழிவறை வசதி போதிய அளவில் இருப்பதில்லை, தங்கும் இடத்திற்கு தனி அறை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் தனி ஒருத்தருக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே எங்கள் அமைப்பின் மூலம் சில முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

அவருக்கு பத்து உதவி இயக்குநர்கள் தேவை என்றால் 5 பெண் உதவி இயக்குநர்களை சேர்த்துக்கொள்ள வேண்டுகோள் வைத்துள்ளோம். அப்படி செய்யும் போது ஐந்து பெண் இயக்குநர்களுக்கு ஓர் அறை எடுத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என்று வைஷாலி கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Paula Bronstein

இதைத் தவிர 20 ஆண்டுகளாக உதவி இயக்குநராக இருக்கும் பெண்கள் உள்ளனர். எனவே பெண்கள் அதிக படங்களை இயக்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வருங்காலத்தில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மய்யம் நல்ல கதைகளை தேர்வு செய்து Crowd Funding முறையில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று வைஷாலி சுப்ரமணியம் கூறுகிறார். அதேபோல் படிப்பை முடித்துவிட்டு வாய்ப்பு தேடுபவர்கள் எங்கள் அமைப்பில் பதிவு செய்து வைத்தால், அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அதில் முதல்கட்டமாக இயக்குநர் ராஜூ முருகன், வசந்தபாலன் போன்றவர்கள் எங்கள் அமைப்பிடம் பெண் உதவி இயக்குநர்களை கேட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறார். மேலும் "தங்களுடைய சங்கத்தில் உறுப்பினராக இல்லாத பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் புகார் கொடுத்தாலும், நடிகைகள் புகார் கொடுத்தாலும் அவர்களுக்காக தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மய்யம் போராடத் தயாராக உள்ளது'' என்று கூறுகின்றார் வைஷாலி சுப்ரமணியம்.

பிற சினிமா செய்திகள்:

  • இயக்குனர் ஏ.எல் விஜய் தலைவா 2 படத்திற்கான கதையை தயார் செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த கதை முழுவதும் நடிகர் விஜய்க்கு தெரியும். அவர் ஓகே சொன்னால் உடனடியாக சூட்டிங்கை தொடங்கவும் இயக்குனர் விஜய் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலைவா 2 படத்தில் விஜய் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
  • காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படம் செக்கச் சிவந்த வானம். நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி மற்றும் அருண் விஜய் ஆகியோரின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிகளில் ஒற்றுமையாக நடிப்பதை போல நேரிலும் அனைவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர்.
  • பொது நல வழக்குகள் தொடர்ந்ததன் மூலம் பிரபலமானவர் டிராஃபிக் ராமசாமி. இவரின் வாழ்கையை மையமாக வைத்து டிராஃபிக் ராமசாமி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அதில் டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திர சேகர் ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • கோலிசோடா, விக்ரம் நடிப்பில் வெளியான பத்து எண்றதுக்குள்ள, கடுகு போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது கோலி சோடா படத்தின் 2வது பாகத்தை இயக்கியுள்ளார். இதில் பிரபல இல்லாத பல நடிகர்களை வைத்து படமாக்கியுள்ளார்.
  • சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படன்களை இயக்கியவர் எம். ராஜேஷ். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். காமெடி வகையில் எடுக்கப்படவிருக்கும் அந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். அதற்கான முதல்கட்ட வேலைகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்