கீர்த்தி சுரேஷ்: நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்த நான் பிறகு ஏன் ஒப்புக் கொண்டேன்?

''இந்த படத்தை தவறவிட்டிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன்''

சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு உருவாகியிருக்கும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படம் தமிழில் வெளியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து பல விஷயங்களை படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

'நடிகையர் திலகம்' திரைப்படம் குறித்து பல கேள்விகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார்.

கே: நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். நீங்கள் சினிமாவுக்கு வந்து குறுகிய காலம் ஆகும் நிலையில் சாவித்ரியின் கதாபாத்திரத்தை ஏற்க உங்களுக்கு பயம் இருந்ததா?

இந்த வாய்ப்பு முதலில் எனக்கு வந்தபோது பயமாக இருந்தது. நான் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஏனென்றால் சாவித்ரி சாதாராண நடிகை கிடையாது. அவங்க ஒரு பழம்பெரும் நடிகை. மனிதாபிமானமிக்க ஒரு நடிகையின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது எனக்கு பயம் வந்துவிட்டது. சாவித்ரி கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கட்டாயப்படுத்தினார். அதற்கு பிறகுதான் முழு கதையை கேட்டு நடிக்க சம்மதித்தேன். ஆனால், இப்போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தை தவறவிட்டிருந்தால் நான் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன்.

கே:இந்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்றவுடன் உங்கள் மீது சொல்லப்பட்ட விமர்சனங்கள் என்ன?

நல்லதை விட நெகட்டிவ் விமர்சனங்களே நிறைய இருந்தன. சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தியானு எல்லாரும் பேசுனாங்க. எனக்கும் அதே சந்தேகம்தான் முதலில் இருந்தது. எனக்கே அந்த சந்தேகம் இருக்கும்போது மற்றவர்களுக்கு அது வராதா என்று நினைத்து கொண்டேன். அதேசமயம், பலரும் சூப்பர்னு என்னை பாராட்டுனாங்க. அந்த நேரத்தில்தான் சின்ன பதட்டமும், பொறுப்பும் எனக்கு அதிகரித்தது.

கே: நீங்கள் சாவித்ரி நடித்த படங்களை பார்த்திருக்கிறீர்களா? சாவித்ரி கதாபாத்திரத்திற்காக உங்களை நீங்களே தயார்படுத்தி கொண்டது எப்படி?

இதற்கு என்னுடைய பாட்டி மற்றும் அம்மாவிற்குதான் நான் நன்றி சொல்லவேண்டும். எங்கள் வீட்டில் பழைய படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். மாயாபஜார், பாசமலர் படங்கள் பார்த்திருக்கேன். அதன் மூலம் சாவித்ரி ஒரு நடிகையாக எப்படி இருப்பாங்க என்பதை உள்வாங்கிகொண்டேன். அதோடு இயக்குநர் சில காட்சிகளை கொடுத்து பார்க்க சொன்னார். அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துகொண்டேன். மேலும், தெலுங்கில் அவர்களுடைய ஆடியோ நேர்காணலை கேட்டேன். அதிலிருந்து சாவித்ரி எப்படி இருந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்துகொண்டு நடித்தேன்.

படத்தின் காப்புரிமை Sai Dharam Tej
Image caption சாவித்ரி மற்றும் கீர்த்தி சுரேஷ்

கே: சாவித்ரி கதாபாத்திரத்திற்கு நீங்களே டப்பிங் பேசியுள்ள அனுபவம் எப்படி இருந்தது?

நான் இந்த படத்தில் நடிக்கும்போதே நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நானே சொந்தமாக டப்பிங் பேசியுள்ளேன். தமிழில் பேசும்போது எளிமையாக இருந்தது. ஒரே நாளில் டப்பிங் முடித்துவிட்டோம். ஆனால், தெலுங்கு டப்பிங்கிற்கு 11 நாட்கள் எடுத்துக்கொண்டேன். அர்த்தம் புரியாததால் ஒவ்வொரு காட்சிக்கும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு டப்பிங் பேசினேன். இருந்தாலும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது.

கே: சமந்தா இந்த படத்தில் நடித்துள்ளாரே?

சமந்தா மதுரவானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்தான் இந்த படத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர். நடிகையர் திலகம் படத்தில் நான் டைட்டில் ரோலில் நடிப்பது தெரிந்தும் எந்த ஒரு தயக்கமும் இல்லாம் நடித்துக்கொடுத்தார். அதற்கு காரணம் சாவித்ரி அவர்கள் மீது இருந்த மரியாதை. சமந்தாவால் நடிகையர் திலகம் படம் பெரிதானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்