சினிமா செய்திகள்: பாடலாசிரியராக சிவகார்த்திகேயன், கிரிக்கெட் ஆடும் ஐஸ்வர்யா

தமிழ் திரை உலகில் நடந்து வரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி உள்ளோம்.

தமிழ் சினிமாவில் கிரிக்கெட் படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஒரு படத்தை இயக்கிவருகிறார்.

படத்தின் காப்புரிமை twitter/Siva_Kartikeyan

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்தின் சூட்டிங் திருச்சி, செங்கல்பட்டு பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக சேலத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் சூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கிராமத்தில் வாழும் ஒரு பெண் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கிறாள். அவளின் கனவு நினைவானதா இல்லையா என்பதை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. பெயரை அறிவிக்காமல் சூட்டிங்கை நடத்திவந்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தற்போது தலைப்பை அறிவித்துள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்திற்கு "கனா" என்று தலைப்பு வைத்துள்ளனர். இது ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்று கூறப்படுகிறது.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு

தரமணி படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் பேரன்பு. இதில் மலையாள நடிகர் மம்மூட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அன்பை மையமாக எடுக்கப்பட்டிருக்கும் பேரன்பு படம் கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக 47வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 187 திரைப்படங்கள் பார்வையாளர்கள் விருதிற்காக போட்டியிட்டன. அதில் முதல் 20 இடங்களில் பேரன்பு திரைப்படம் இடம்பிடித்தது.

படத்தின் காப்புரிமை facebook/DirectorRamOfficial

தற்போது பேரன்பு திரைப்படம் ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஆக சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக (Asian Premiere) பேரன்பு திரையிடப்பட இருக்கிறது.

மேலும் பேரன்பு திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கூடிய விரைவில் வெளி வர இருக்கிறது.

நர்மதாவின் கதை

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறுமுகமானவர் நந்திதா ஸ்வேதா. இதை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். இறுதியாக நந்திதா ஸ்வேதா நடிப்பில் உள்குத்து திரைப்படம் வெளியானது. ஒவ்வொரு படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும் கதை நேர்த்தியாக இல்லாத காரணத்தால் சில திரைப்படங்கள் தோல்வியடைந்தன.

படத்தின் காப்புரிமை instagram/nanditaswethaa

இதனால் நந்திதா ஸ்வேதாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து நர்மதா என்ற படத்தை எடுக்கவுள்ளனர். அதில் 7வயது மாணவனுக்கு தாயாக நடிக்கிறார் நந்திதா.

தாய் - மகன் இடையேயான பாசத்தை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாக படமாக்குகின்றனர். இதற்கான படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதியில் நடைப்பெற்று வருகிறது. இது அழுத்தமான கதை என்பதால் நர்மதா திரைப்படம் தனக்கு கைகொடுக்கும் என்று நந்திதா உறுதியாகவுள்ளார்.

தாய் மகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றிய கீதா ராஜ்புத் என்பவர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் வசந்த், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கோலமாவு கோகிலாவில் சிவகார்த்திகேயன்

நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கும் படம் கோலமாவு கோகிலா. நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் காப்புரிமை twitter/Siva_Kartikeyan

கோலமாவு கோகிலா படத்தின் வேலைகள் விறு விறுப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். அதில் எதுவரையோ பாடலை மார்ச் மாதம் வெளியிட்டனர். அந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது "எனக்கு இப்போ கல்யாண வயசுதான்" என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார்.

சிவகார்த்திகேயன் வரியில் அனிருத் இசையமைத்து பாடியுள்ள கல்யாண வயசு பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது கோலமாவு கோகிலா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் முதன் முறையாக பாடல் எழுதியுள்ளதால் அவரின் ரசிகர்களும் இந்த பாடலை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

விஷாலின் குற்றச்சாட்டு

தமிழ் சினிமாதுறையில் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் கூட்டமைப்பு என்ற அமைப்பு நிறைய திரைப்படங்களை வெளியிடமால் தடுக்கின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்கத்தின் பொது செயலாளருமான விஷால், தன்னுடைய இரும்புத்திரை படத்தின் ரிலீஸை தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் கூட்டமைப்பு தடுத்தது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

விஷால் நடிப்பில் கடந்த வெள்ளி கிழமை வெளியான படம் இரும்புத்திரை. அறிமுக இயக்குனர் பி.எஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். சைபர் கிரைமை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இரும்புத்திரை படம் இதுவரை 12 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படத்தை தடுக்க தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் கூட்டமைப்பு முயற்சி செய்ததாகவும், அதனால் படத்தை ரிலீஸ் மிகவும் சிரமப்பட்டதாகவும் விஷால் கூறியிள்ளார். ஆனால் அதுக்கான காரணம் என்ன என்று தனக்கு தெரியவில்லை என விஷால் கூறியுள்ளார். இருந்தாலும் தன்னுடைய நண்பர்கள் உதவியோடு இரும்புத்திரை படத்தை திரைக்கு கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்