சினிமா செய்திகள்: திகில் படத்தில் அஞ்சலி, போஸ்டர் ஒட்டிய சிம்பு

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

அஞ்சலி

பட மூலாதாரம், facebook/AnjaliOfficial

திகில் படத்தில் அஞ்சலி

த்ரிஷா, நயன்தாரா போல முன்னணி நடிகைகள் பட்டியலில் இருந்தவர் அஞ்சலி. ஹோம்லி லுக், சிறப்பான நடிப்பு என்று சுழன்று வந்தார். அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த அஞ்சலி ஒரு பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து வெளியேறினார். ஒரு வருடத்திற்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அஞ்சலி, ஒருவழியாக பிரச்சனைகள் அனைத்தையும் முடித்து மீண்டும் நடிப்புக்கு திரும்பினார். ஆனால் அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இருந்தாலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹீரோயினுக்கு முக்கியதுவம் கொடுக்கும் ஒரு படத்தில் அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "லிசா" என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தை அறிமுக இயக்கனர் ராஜூ விஸ்வநாத் என்பவர் இயக்குகிறார். Stereoscopic horror வகையில் இந்த படம் உருவாகவிருக்கிறது. மேலும் லிசா இந்தியாவில் உருவாகும் முதல் stereoscopic திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், facebook/AnjaliOfficial

கொரில்லாவுடன் ஜீவா

பட மூலாதாரம், twitter/Actorjiiva

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் முன்னணி நடிகர்களில் ஜீவாவும் ஒருவர். தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரியின் இரண்டாவது மகனான இவர், ராம், கற்றது தமிழ், ஈ போன்ற தரமான கதைகளை தேர்வு செய்து நடித்துவந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான படங்கள் ஜீவாவிற்கு தோல்வியை கொடுத்தன. இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு 2 படம் அவரை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துவந்துள்ளது. இந்த நிலையில் தற்போது கீ, கொரில்லா, ஜிப்சி ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் கீ படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது.

பட மூலாதாரம், twitter/Actorjiiva

இதனால் கொரில்லா படத்தின் சூட்டிங்கில் ஜீவா பிஸியாகவுள்ளார். இந்த படத்தில் சிம்பன்சி குரங்குடன் ஜீவா நடிக்கிறார். இதற்காக தாய்லாந்து சென்று அங்கு வளர்க்கப்பட்டும் சிம்பன்சி குரங்குடன் சில நாட்கள் பழகி பிறகு சூட்டிங்கை நடத்தியுள்ளனர். தாய்லாந்தில் நடைப்பெற்ற முதற்கட்ட சூட்டிங்கில் படத்திற்கு தேவையான முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைத்து கொரில்லாவின் இறுதிக்கட்ட சூட்டிங்கை நடத்திவருகின்றனர். வெயிலை கூடபொருட்படுத்தாமல் பரபரப்பாக நடந்து வரும் கொரில்லா சூட்டிங் விரைவில் முடிவடையவுள்ளது.

தேவராட்டம்

பட மூலாதாரம், twitter/Gautham_Karthik

தமிழில் குட்டிபுலி, கொம்பன், மருது, கொடி வீரன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. தென் மாவட்ட கதைகளை தொடர்ந்து படமாக்கிவரும் இவர் தேவராட்டம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். அந்த படத்தில் கவுதம் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திலும் தென் மாவட்டத்தின் கதையை படமாக்கவுள்ளார். முத்தையா தன்னுடைய படத்தில் குடும்ப சென்டிமென்டிற்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில் குட்டிபுலி படத்தில் அம்மா - மகன், கொம்பனில் மாமனார் - மருமகன், மருது படத்தில் பாட்டி - பேரன், கொடிவீரனில் அண்ணன் - தங்கச்சி பாசத்தை சொல்லியிருந்தார். இந்த வரிசையில் தேவராட்டம் படத்தில் அப்பா - மகன் சென்டிமென்டை படமாக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது படத்திற்கான பூஜை நடந்துமுடிந்துள்ளது. அதேபோல் சூட்டிங்கையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். தேவராட்டம் படத்தை பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

போஸ்டர் ஒட்டிய சிம்பு

சினிமாவில் நடிகர்களுக்கு ரசிகர்கள் இன்றும் கட் அவுட் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் தங்களின் பணத்தை செலவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய படங்களுக்கு இனி யாரும் கட் அவுட் வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். கடந்த 10ஆம் தேதி சிம்புவின் ரசிகர் மதன் என்பவர் கட் அவுட் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் கட் அவுட் வைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று உருக்கத்துடன் வேண்டுகோள் வைத்துள்ளார். விவேக் நடித்துள்ள எழுமின் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட சிம்பு இவ்வாறு பேசினார். கொலை செய்யப்பட்ட மதனுக்கு சமீபத்தில் போஸ்டர் ஒட்டி சிம்பு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: