கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ஜோடி யார்?

விரைவில் வெளியாகவுள்ள திரைப்படங்கள், முன்னணி நடிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பற்றிய சில சுவாரசிய சினிமா செய்திகள்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ஜோடி யார்?

படத்தின் காப்புரிமை Getty Images

ரஜினிகாந்த் நடிப்பில் காலா, 2.0 படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படம் வெளியாகிறது. அந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக கார்த்திக் சுப்புராஜின் நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த நிலையில் கார்த்திக் சுப்ராஜின் மற்றொரு நண்பரான பாபி சிம்ஹாவையும் நடிக்கவைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதேபோல் ஹீரோயின் ரோலில் நடிகை சிம்ரனை நடிக்க வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். சிம்ரன் அஜித், விஜய், கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடு நடித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்துடன் நடித்ததில்லை. இதனால் நிச்சயம் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும் இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ்

வெயில் படத்தில் ஜி.வி பிரகாஷ்குமாரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் வசந்தபாலன். 50 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி பிரகாஷ்குமார் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருக்கிறார். அவரின் நடிப்பில் இந்த வாரம் ’செம’ படம் வெளியாகியுள்ள நிலையில், அடங்காதே, 4ஜி, குப்பத்து ராஜா உள்ளிட்டபடங்கள் வெளியாக தயாராக உள்ளன.

இந்த நிலையில் வசந்தபாலன் இயக்கும் புது படத்தில் ஜி.வி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார் தற்போது அதற்கான சூட்டிங் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி மூலம் பிரபலமான அபர்ணதி ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது தொடங்கியுள்ள சூட்டிங்கை குறைந்த நாட்களில் முடிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

சாமி ஸ்கொயர் ட்ரைலர் தள்ளிவைப்பு

படத்தின் காப்புரிமை facebook

விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகிவரும் படம் சாமி ஸ்கொயர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன. இதனால் போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கும் ஹரி, சமீபத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டார். இதை தொடர்ந்து இந்த வாரம் (26ம் தேதி) படத்தின் ட்ரைலரை வெளிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரால் 13 பேர் சூட்டுக்கொல்லப்பட்டுள்ளதால், சாமி ஸ்கொயர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். மேலும் இந்த சமயத்தில் எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்பதால்தான் ட்ரைலர் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் ஷிபு தமீம் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது உள்ள நிலை மாறிய பிறகு வேறு ஒரு தேதியில் சாமி ஸ்கொயர் ட்ரைலரை வெளியிடவுள்ளனர்.

சூர்யாவுடன் இணையும் மோகன்லால்

படத்தின் காப்புரிமை facebook

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இந்த படத்தின் சூட்டிங் வேலைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் சூட்டிங்கை முடித்த கையோடு கே.வி. ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை கே.வி. ஆனந்த் தொடங்கிவிட்டார். அயன், மாற்றான் படத்திற்கு பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகவிருக்கும் புது படத்தின் கதை லண்டனில் நடப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது.

இதனால் லண்டனில் படமாக்கும் இடங்களை தேர்வு செய்யும் வேலையில் இயக்குனர் குழு தீவிரமாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவோடு மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் வனமகன், கஜினிகாந்த் படத்தில் நடித்துள்ள சாயிஷா ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட்: அஞ்சலி செலுத்திய தனுஷ்

படத்தின் காப்புரிமை Getty Images

தனுஷ் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள படம் The Extraordinary Journey of the Fakir. இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் இளைஞரின் வாழ்கையில் நடக்கும் சம்வங்களின் தொகுப்பாக Fakir படம் உருவாகியுள்ளது. ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தைன் வாழ்க்கையை தேடி நானும் போனேன் என்ற தலைப்பில் தமிழிலும் வெளியிடவுள்ளனர். இந்த படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படத்தை ப்ரமோட் செய்யும் வேலைகள் வேகமாக நடைப்பெற்று வருகின்றன.

பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள பாரிஸ் சென்றிருக்கும் தனுஷ், அங்கு நடந்த விழாவில் தூத்துக்குடி சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கி சூட்டில் உயிர்யிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலியும் செய்துள்ளார். தனுஷின் இந்த செயலை அவருடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும் பாராட்டியுள்ளனர்.

'சுவாதி கொலை வழக்கு'

சென்னை நுங்கம்பாக்காத்தில் மென்பொருள் பொறியாளர் சுவாதி சம்பவத்தை மையமாக வைத்து 'சுவாதி கொலை வழக்கு' என்ற படத்தை உளவுத்துறை படத்தின் இயக்குனர் எஸ்.டி. ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தை வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவித்துவந்தனர்.

அதற்கு காரணம் படத்தின் பெயரும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கதை களமும்தான் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கு படத்தின் பெயரை " நுங்கம்பாக்கம்" என்று மாற்றியுள்ளனர். பெயர் மாற்றியுள்ள நிலையில் படத்தை திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: