"நான் ஏன் பெரியாரை புறக்கணிக்க வேண்டும்?": காலா இயக்குனர் ரஞ்சித் பிரத்யேகப் பேட்டி

Image caption இயக்குனர் ரஞ்சித்

ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், அந்தத் திரைப்படம் குறித்தும் திரையுலகில் தன்னுடைய அனுபவங்கள் குறித்தும், தன்னுடைய அரசியல் குறித்தும் பிபிசியின் கே. முரளிதரனுடன் ஃபேஸ்புக் நேரலையில் உரையாடினார் இயக்குநர் பா. ரஞ்சித். அவருடைய பேட்டியிலிருந்து:

கே. உங்களுடைய பின்னணி குறித்து சொல்லுங்கள்.

ப. ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நான் பார்த்த உலகத் திரைப்படங்கள், குறிப்பாக அரசியல் திரைப்படங்கள்தான் நான் சினிமாவுக்குள் வர வேண்டுமெனத் தூண்டின. ஆவடி இருகில் உள்ள கர்லப்பாக்கம் என்ற கிராமத்தில்தான் நான் பள்ளிக் கல்வியை முடித்தேன். பிறகு, ஆவடி, வெங்கல் போன்ற இடங்களில் படித்தேன்.

பிறகு நான் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது நான் சந்தித்த ஆளுமைகள், குறிப்பாக ஓவியர் சந்துரு போன்றவர்களோடு நடத்திய பேச்சுகள், நான் வாசித்த புத்தகங்கள், குறிப்பாக அம்பேத்கரின் புத்தகங்கள்தான் என்னை யாரென்று உணரவைத்தன. என் அரசியல் என்னவென்று உணரவைத்தன. இந்த அரசியலை எங்கு பேசுவதென கல்லூரி நாட்களில் முடிவெடுத்தேன். அப்போது முருகபூபதியின் நாடகங்களைப் பார்த்து, அதன் பாதிப்பிலிருந்து சில நாடங்கள் செய்தேன். பிறகு, ஓவியத் துறையில் அனிமேட்டராக போகலாமா என்று யோசித்தேன். ஆனால், சினிமாதான் என் வழி என்பதை கல்லூரி நாட்களின் இரண்டாவது ஆண்டில் முடிவுசெய்தேன். அங்கு எம்மாதிரி படங்களை எடுக்க வேண்டுமென்றும் முடிவுசெய்தேன்.

உலக அளவில் எனக்கு பிடித்த படங்கள் பல இருந்தாலும் தமிழில் என்னை மிகவும் பாதித்த படம் பராசக்தி. பராசக்தியை நான் பள்ளி நாட்களில் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகும் தொடர்ந்து அந்தப் படத்தை பார்த்து வந்திருக்கிறேன்.

கே. பராசக்தி எந்த வகையில் உங்களைப் பாதித்தது?

ப. எல்லா வகையிலும் பாதித்தது. குறிப்பாக, "கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக" என்ற வசனம். அந்தத் திரைப்படத்தை எல்லா காலகட்டத்திலும் தொடர்ச்சியாக பார்த்துவந்திருக்கிறேன். குறிப்பாக என் அம்மாவைப் பெற்ற தாத்தாவோடுஅந்தப் படத்தைப் பார்த்தேன். அவர் பெயர் வி.சி. பஞ்சாட்சரம். அவர் ஒரு பெரியாரியவாதி. கடவுள் மறுப்பாளர். இந்தப் பின்னணிதான் என் பார்வையை வடிவமைத்தது. அதிலிருந்துதான் அட்டக்கத்தியை நான் வடிவமைத்தேன். அந்தப் படம் ஒரு முழு நீள அரசியல் திரைப்படம்தான்.

கே. சினிமாவில் நுழைந்தது எப்படி, யாரிடமெல்லாம் பணியாற்றினீர்கள்?

ப. முதலில் வேலு பிரபாகரனிடம் அவருடைய காதல் கதை படத்தில் பணியாற்றினேன். இரண்டு மாதங்கள்தான் அவரோடு பணியாற்றினேன். முழுமையாக பணியாற்றிய படம் என்று பார்த்தால், தகப்பன் சாமிதான் முதல் படம். அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் கதிர் வெங்கலைச் சேர்ந்தவர். அதன் மூலம் அந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு வெங்கட் பிரபுவிடம் சென்னை -28, சரோஜா, கோவா என மூன்று படங்கள் அவருடன் பணியாற்றினேன். அதற்குப் பிறகு அட்டக்கத்தியை இயக்கினேன்.

கே. ஒரு அறிமுக இயக்குனரைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர் கிடைப்பதில் துவங்கி, பல பிரச்சனைகள் இருக்கும். அந்தத் தடைகளைத் தாண்டி, அதற்குள் உங்கள் அரசியலைப் பேசுவது எளிதாக இருந்ததா?

ப. தயாரிப்பாளர்களிடம் இதை ஒப்புக்கொள்ளச் செய்வது கடினம்தான். அதனால், படத்தின் கதையை முதலில் தயாரிப்பாளரிடம் விவரித்தேன். ஆனால், அதற்குள் இருக்கும் அரசியல், பேசு பொருள் ஆகியவற்றை முதல் சந்திப்பில் சொல்லவில்லை. ஒரு நல்ல கதையை, சுவாரஸ்யமான சினிமாவாக எடுத்துத் தருவேன் என்பதைச் சொன்னேன். ஆனால், அதற்குள் இருக்கும் sub - textஐ நான் சொல்லவில்லை.

படத்தின் காப்புரிமை kala

அட்டக் கத்தி திரைக்கதையின் முதல் பக்கத்திலேயே அம்பேத்கர் பற்றி ஒரு ஸ்டேட்மெண்ட் இருக்கும். என்னை தயாரிப்பாளர் சி.வி. குமாரிடம் அறிமுகப்படுத்திய மணி என்பவர் அதைப் பார்த்துவிட்டு, "அந்தப் பக்கத்தை எடுத்துவிடுங்கள். அதைப் பார்த்தால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்" என்றார். எனக்கு அது பெரிய கஷ்டமான விஷயமாகத்தான் இருந்தது. ஆனால், சினிமாத் துறைக்குள் நுழைந்தால்தான் நாம் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்ல முடியும் என்பதற்காக அந்தப் பக்கத்தை எடுத்துவிட்டுத்தான் கொடுத்தேன்.

ஆனால், மெட்ராஸ் படத்தில் அம்மாதிரி செய்யவில்லை. முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையைத்தான் பேசுகிறேன். அவர்களது வாழ்க்கையைத்தான் சொல்லப் போகிறேன் என்று அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே தெரியும். கார்த்தி, தயாரிப்பாளர் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தேதான் ஆதரித்தார்கள்.

கே. அட்டக்கத்தி படத்தைப் பற்றி பேசும்போது, வேறு ஒரு விமர்சனம் அந்தப் படம் பற்றி வைக்கப்படுகிறது. அதாவது, தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு நாடகக் காதல் செய்கிறார்கள் என சில அரசியல் தலைவர்கள் தலித் இளைஞர்கள் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகளை அந்தப் படம் உறுதிப்படுத்துகிறது என்ற விமர்சனங்கள் இருந்தன.

ப. ஆமாம். அப்படி விமர்சனங்கள் இருந்தன. இங்கிருக்கும் இலக்கியமாக இருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும் - தலித் என்றாலே, சக்தியற்றவர்களாக, கலாச்சாரமற்றவர்களாக, கொண்டாட்டமற்றவர்களாக, படிக்காதவர்களாக, வறுமையாக, சோகமாக இருப்பார்கள் என்பதாகவே இருக்கின்றன. ஆனால், என் வாழ்க்கை அப்படி இல்லையே.

இந்த சமூகம் ஜாதி ரீதியாக தலித்துகளை ஒடுக்குகிறது, அடக்குகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்த அடக்குமுறைக்குள்ளும் ஒடுக்குமுறைக்குள்ளும் இருக்கும் கொண்டாட்டத்தைப் பேச வேண்டுமென நினைத்தேன். சினிமாவில் காதலை மிகவும் புனிதப்படுத்துகிறார்கள். ஆனால், உண்மையில் இளைஞர்கள் காதலை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக் காட்ட விரும்பினேன். அதுவும் ஒருதலைக் காதல்.

இந்தக் கதையை படத்தில் சொன்ன பிறகுதான், சமூகத்தில் இம்மாதிரி ஒரு பார்வை இருக்கும்போது நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பது புரிந்தது.

நமக்கு எதிர் பார்வை கொண்டவர்களும் உண்டு, அவர்களும் நாம் சொல்வதை ஏற்றுகொள்ளும் வகையில் சொல்ல வேண்டும் என்றும் புரிந்தது. பள்ளிக்கூட மாணவர்கள் ஈடுபடுவதுபோல ஒரு காதல் கதை எழுதி வைத்திருந்தேன். ஆனால், இனிமேல் இப்படி படங்களை எடுக்கக்கூடாது என்பதால் அந்தக் கதையை விட்டுவிட்டேன்.

கே. மெட்ராஸ் திரைப்படம் மிகப் பெரிதாக கவனிக்கப்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்தவர்கள் உங்களை எப்படி பார்த்தார்கள்?

ப. இது சிக்கலான விஷயம்தான். அந்தப் படம் வெற்றிபெற்றது. சமூகத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அந்தப் படம் தலித் சினிமாவா, தலித் அல்லாத சினிமாவா என்ற விவாதம் நடந்துகொண்டே இருந்தது. எல்லோரும் என்னைப் பார்த்தால் கேட்கும் கேள்வியே அதைப் பற்றித்தான் இருந்தது. அப்போதுதான், நாம் இனிமேல் இதைப் பற்றித்தான் பேச வேண்டும் என்பதை முடிவுசெய்தேன். சினிமாவில் நான் நுழைந்ததிலிருந்தே, இதைப் பற்றியெல்லாம் பேசாதே என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அட்டக்கத்தி எடுத்து முடித்த பிறகு, "இந்தப் படத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டாய், அடுத்த படத்தில் ஜாக்கிரதையாக இரு" என்று அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

படத்தின் காப்புரிமை LYCA

கே. திரையுலகிலும் நிலைமை அப்படித்தான் இருந்ததா?

ப. அப்படி ஒரு பயம் திரையுலகில் இருந்தது. யாரும் அதை உடைக்கவில்லை. தலித்களின் வாழ்வை இயல்பாக பதிவுசெய்யும் முயற்சியே நடக்கவில்லை.

கே. தலித்களின் வாழ்வை இதற்கு முன்பாக தமிழ் படங்களில் சொல்லவில்லையா? வீ. சேகரின் படங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப. அவை மேடை நாடக பாணியில் அமைந்திருந்தன. அவை தலித்துகளின் வாழ்வை தத்ரூபமாக சொல்லியதாகச் சொல்ல முடியாது. ஆனால், நிறைய படங்களில் அவர் தலித்களின் வாழ்வைச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக ஒன்னா இருக்கக் கத்துக்கனும் போன்ற படங்கள்.

கே. அவர் சினிமா எல்லாவற்றிலும் அம்பேத்கர் புகைப்படம் வந்துகொண்டேயிருக்கும்.

ப. ஆமாம். ஆனால், அவையெல்லாம் யாருக்கும் பிரச்சனையாகவே இருக்கவில்லையே?

கே. ஏன் உங்கள் சினிமா மட்டும் பிரச்சனையாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?

ப. அதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். நான் காட்டும் அம்பேத்கர் படத்திற்கும் அவர் சினிமாவில் வரும் அம்பேத்கருக்கும் வித்தியாசம் உண்டு.

கே. என்ன வித்தியாசம்?

ப. வீ. சேகர் தன்னை இடதுசாரியாக அறிவித்துக்கொண்டவர். அவர் அம்பேத்கரைப் பேசும்போது எல்லோருக்கும் பொதுவான அம்பேத்கராக தெரிகிறார். ஆனால், நான் பேசும்போது அவர் குறிப்பிட்ட சிலருக்கான அம்பேத்கராகத் தெரிகிறார். அதுதான் பிரச்சனையாகத் தெரிகிறது.

கே. மெட்ராஸில் ஒரு அடையாளம் உறுதிப்பட்ட பிறகு, கபாலியை இயக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

ப. மெட்ராஸ் படம் முடிந்த உடனே அப்படி ஒரு அடையாளம் கிடைத்துவிட்டதாக சொல்ல முடியாது. புத்திஜீவிகள் பேசினார்கள். என் அரசியல் பிடிக்காதவர்கள் உணர்ந்திருந்தார்கள். மற்றபடி வெளியில் அப்படி ஒரு எண்ணமில்லை. கபாலிதான் அந்த அடையாளத்தை உறுதிப்படுத்தியது.

கே. அந்தத் தருணத்தில் - நவீன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி - என பல இளைஞர்கள் நம்பிக்கை தரும் படங்களைத் தந்திருந்தார்கள். உங்களுக்கு எப்படி கபாலியை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது?

ப. மெட்ராஸ் படத்தைப் பார்த்துவிட்டு சௌந்தர்யா என்னை அழைத்தார். "அப்பா உங்களைப் பற்றிப் பேசினார். ஏதாவது ஸ்க்ரிப்ட் இருக்கிறதா?" என்று கேட்டார். ரஜினியைப் போய்ப் பார்த்தபோது, ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார். அதன் பிறகுதான் நான் எழுதி வைத்திருந்த குறிப்புகளை எடுத்துப் பார்த்தேன். அதில் மலேசியத் தமிழர்களைப் பற்றி எழுதிவைத்திருந்தேன். அதோடு சேர்த்து ஒரு அறிவியல் புனை கதையும் எழுதிவைத்திருந்தேன். இரண்டு கதைகளையும் சொன்னபோது, மலேசிய கேங்ஸ்டர் கதையை அவர்கள் தேர்வுசெய்தார்கள். தவிர, மெட்ராஸ் படம் ரஜினிக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

கே. கபாலியில் பணியாற்றும்போது, படத்தில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து ரஜினி ஏதாவது வலியுறுத்தியிருக்கிறாரா?

ப, அவருக்கு என்னுடைய அரசியல் குறித்து முன்பே சொல்லிவிட்டேன். தவிர, "அம்பேத்கரின் ஜாதி ஒழிக்க வழி என்ன?" புத்தகத்தை அவரிடம் கொடுத்திருக்கிறேன். மை ஃபாதர் பாலைய்யா புத்தகத்தைப் பற்றிச் சொல்லி, அவர் எப்படி கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தார் என்பதையும் சொன்னேன். பிறகு, இரண்டு அத்தியாங்கள் படித்துப் பார்த்து, அதை படத்தில் வைக்கலாம் என்றார். அதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சினிமா விமர்சனம்: காலா

கே. கபாலி படத்திற்குப் பிறகு, அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

ப. கபாலி படம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது முக்கியமான காரணம். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் கருத்துகள் வந்தன. அந்தப் படத்தில் நான் சொன்ன அரசியல் சரியா என்று விவாதிக்கப்பட்டது. நான் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஸ்டுடியோ க்ரீனுக்கு அடுத்த படம் செய்வது குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சௌந்தர்யா மீண்டும் அழைத்தார். அப்பா கூப்பிடுகிறார் என்றார். ரஜினியைப் போய்ப் பார்த்து கபாலி குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு, அவரே "என்ன அடுத்து படம் பண்ணுவோமா?" என்று கேட்டார். எனக்கு பெரிய சர்ப்ரைஸ். மீண்டும் ரஜினியுடன் படம் செய்வது, என்னுடைய திரைவாழ்க்கைக்கு சரியாக இருக்குமென நினைத்தேன். கபாலியில் நான் பேசிய விஷயங்கள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் ரஜினி படத்தை இயக்கினால், என் அரசியலுக்கு இன்னும் உதவியாக இருக்குமென நினைத்தேன்.

கே. ரஜினியுடன் தொடர்ந்து படம் எடுப்பது உங்களுடைய அரசியலுக்கு எப்படி உதவியாக இருக்குமென நினைத்தீர்கள்?

ப. நமக்குள் இருக்கும் முரண்பாடுகள், சமத்துவமற்ற நிலையை விவாதிப்பதற்கான ஒரு ஊடகமாகத்தான் சினிமாவைப் பார்க்கிறேன். அதைச் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். அப்படியான சூழலில், இம்மாதிரியான பெரிய வாய்ப்புகள் நல்லது என கருதினேன். அந்த நேரத்தில் ரஜினி 2.0வில் பிஸியாக இருந்தார். ஆகவே, " நீங்க வேறு படம் ஏதாவது முடித்துவிட்டு வாங்க" என்றார். எனக்கு திரைக்கதை எழுத நிறைய நாள் பிடிக்கும். ஆகவே, நான் காத்திருப்பதாகச் சொன்னேன். பிறகு படம் துவங்க, கிட்டத்தட்ட ஆறு - ஏழு மாதங்களாயின.

கே. உங்களுடைய அரசியலும் ரஜினியின் அரசியலும் முரண்பாடானவை. எப்படி தொடர்ந்து இணைந்து இயங்க முடிகிறது?

படத்தின் காப்புரிமை FACEBOOK/DRAVIDARKAZHAGAM

ப. ரஜினியைப் பொறுத்தவரை அவர் சினிமாவை வெறும் சினிமாவாக, வர்த்தகமாகத்தான் பார்ப்பார். என்னுடன் பேசும்போதுகூட, நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நிறைய படம் இயக்குங்கள்; அதற்குப் பிறகு சொல்வதைச் சொல்லுங்கள் என்று சொல்வார். "நீங்கள் பேசுவது, சொல்வதெல்லாம் எனக்கே பயமாக இருக்கிறது. இந்தத் துறையில் இப்படியெல்லாம் இயங்குவது கடினம்" என்பார். வர்த்தக ரீதியாக, சுவாரஸ்யமாக படம் எடுப்பது குறித்துத்தான் அவர் கவனம் செலுத்துவார். அவருடைய மனம் முழுக்க ரசிக தன்மைதான் இருக்கும். எந்தக் காட்சி சொன்னாலும் ரசிகர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்றுதான் யோசிப்பார். சினிமாவை அவர் வெறும் சினிமாவாக மட்டும்தான் பார்ப்பார்.

கே. ஆனால், நீங்கள் சினிமாவை வேறு மாதிரி பார்ப்பவர்.

ப. அது ஒரு இயக்குனரின் சுதந்திரம். அதில் ரஜினி தலையிட மாட்டார். அம்மாதிரி ஒரு பெரிய நட்சத்திரம் இம்மாதிரி விஷயங்களில் இப்படி சுதந்திரமளிப்பது மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். ஆனால், அவருக்கும் சில அச்சங்கள் உண்டு. தான் சொல்லும் சில கருத்துகள் சமூகத்தில் எப்படிப் பார்க்கப்படும் என்று யோசிப்பார். அதனால் சில கருத்துக்களைத் தவிர்ப்பார், சில விஷயங்களை மாற்றிக்கொள்ளலாம் என்பார். பொதுவாக சமூகத்தில் இருக்கும் அம்சங்களை பேசுவதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

கே. காலா எதைப் பற்றிய படம்?

ப. காலா நில அரசியலைப் பற்றிய படம். இன்றைய சூழலில் நகர்ப்புற சேரிகள், அதில் வசிக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது. தாராவியில் வசிக்கும் காலா என்ற மனிதனைச் சுற்றி இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறோம். காலாவுக்கு மனைவி, நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த குடும்ப சென்டிமென்ட் இருக்கும். இதற்கு நடுவில் நில உரிமை பேசப்படும்.

கே. ஏன் கதைக்களமாக தாராவியை எடுத்துக்கொண்டீர்கள்?

ப. நிலவுரிமை என்பது இப்போது இந்தியா முழுவதுமே இருக்கக்கூடிய பிரச்சனையாக இருக்கிறது. தில்லியில் காமென்வெல்த் போட்டி நடக்கும்போது மிகப் பெரிய அளவில் ஆட்கள் மறுகுடியமர்த்தல் செய்யப்பட்டனர். நகரத்தை நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரில் முதலில் குடிசைப் பகுதிகளில்தான் கை வைக்கிறார்கள். ஆக, இது வெறும் தமிழகத்தின் பிரச்சனையாக இல்லை. இந்தியாவின் பிரச்சனையாக இருக்கிறது. மும்பையில் அது தினமும் ஒரு பிரச்சனை. ஆகவே அந்த இடத்தைத் தேர்வுசெய்தோம். அங்கே, தரை மட்டத்தில் இருப்பவர்களுக்கும் அடுக்கு மாடிக் கட்டடத்தில் வசிப்பவர்களுக்கும் இடையில் யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது.

அப்படியிருக்கும்போது, அங்கு இந்தப் பிரச்சனையை பேசினால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. இந்தியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியில் இருந்து இந்தப் பிரச்சனையை பேசினால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. அங்கே நெல்லைத் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு சுவாராஸ்யமான களத்தை அமைத்துத் தந்தது.

கே. இது காஜி மஸ்தான் பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது..

ப. இது காஜி மஸ்தான் பற்றிய கதையோ, திரவியம் நாடார் பற்றிய கதையோ இல்லை. இது அவர்கள் யாருடைய கதையும் இல்லை.

கே. படத்தின் பெரும்பகுதி எங்கே படமாக்கப்பட்டது?

படத்தின் காப்புரிமை kala

ப. தராவியில் ரஜினியை வைத்து 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பிறகு அவர் இல்லாமல், 15-20 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். மீதியை சென்னையில் செட் போட்டு எடுத்தோம்.

கே. சினிமாவுக்கு வெளியிலும் ஒரு அமைப்பை வைத்து கருத்துகளைச் சொல்லிவருகிறீர்கள். சினிமாவுக்குள் அது எப்படி பார்க்கப்படுகிறது..

ப. எனக்குத் தெரியவில்லை. ஆனால், யார் , எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ரஞ்சித் என்றால் யார் என்று வெளிப்படைத் தன்மையோடுதான் செயல்படுகிறேன். இது எனக்கான வெளி. இதில் நான் விரும்பியதைச் சொல்வேன்.

கே. முதலில் பேசும்போது, உங்கள் தாத்தா ஒரு பெரியாரியவாதி என்று சொன்னீர்கள். ஆனால், உங்கள் அரசியலைப் பேசும்போது நீங்கள் பெரியாரைத் தவிர்க்கிறீர்கள்.

ப. நான் ஏன் பெரியாரைப் புறக்கணிக்க வேண்டும்? அதற்கு என்ன காரணம் இருக்கிறது? பெரியாருக்குப் பிந்தைய இயக்கங்களின் மீது எனக்கு கோபம் இருக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள், அதிகாரம் அடைந்த பிறகு அங்குள்ள இடை நிலை சாதிகளுக்கு இடையிலான முரண்களை தகர்க்கவில்லை என்று கருதுகிறேன். இதை எல்லோரும் சேர்ந்துதான் சரி செய்ய முடியும். நான் அவர்களை எதிர்த்து நிற்க முடியாது. எதிர்ப்பு தேவையில்லை. சாதி எதிர்ப்பு, சாதி முரண்களை ஒழிக்க இங்குள்ள பெரியாரிய, கம்யூனிஸ, அம்தேகரிய இயக்கங்கள் சேர்ந்துதான், இங்குள்ள முற்போக்கு இயக்கங்கள் சேர்ந்துதான் செய்ய முடியும். இம்மாதிரி சூழலில் அவர்களைப் புறக்கணிக்கவோ, முரண்படவோ அவசியமில்லை. சாதி இல்லாத சமுதாயத்தை இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் படைக்க முடியும்.

கே. ஆனால், உங்களுடைய முந்தைய பேச்சுகளை வைத்துதான் இந்த முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

ப. நீங்களாக ஒரு முடிவுக்கு வந்தால் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்