சினிமா விமர்சனம்: 'காலா'

'காலா'
நடிகர்கள் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பாடீல், சாயாஜி ஷிண்டே, சம்பத் ராஜ்
இசை சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு முரளி. ஜி
இயக்கம் பா. ரஞ்சித்

கபாலி படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக நடித்திருக்கும் இரண்டாவது படம்.

மும்பையின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியின் தாதா, கரிகாலன் என்ற காலா (ரஜினிகாந்த்). மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்) மற்றும் மகன்களோடு வாழ்ந்துவருகிறார்.

அந்த குடிசைப் பகுதியை கையகப்படுத்தி, மிகப் பெரிய கட்டுமானத் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறார் அரசியல்வாதியான ஹரிதாதா (நானா படேகர்). ஹரிதாதாவுடனான மோதலில் மனைவி, மகனைப் பறிகொடுக்கிறார் காலா. முடிவில், கட்டுமானத் திட்டத்தை நிறுத்தி அவரிடமிருந்து தாராவியை காலா எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துவரும் நகர்ப்புற நிலவுடமை குறித்த கதையை ஒடுக்கப்பட்ட மக்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் ரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருக்கும் சிறு துண்டு நிலத்தையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி தொடர்ந்து பறிக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள், அதை எதிர்த்து ஒடுக்கப்பட்டவர்கள் எப்படிப் போராடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது என்பதையே இந்தப் படம் சொல்கிறது.

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவுட் ஆனபடி அறிமுகமாகிறார் ரஜினிகாந்த். பிறகு படம் நெடுக அவருடைய ஆட்டம்தான். நரைத்துப்போன தாடியுடனும் சுருக்கிய சருமத்துடனும் தோற்றமளிக்கும் ரஜினி, தன் அனாயாசமான நடிப்பாலும் பாணியாலும் வெகுவாகக் கவர்கிறார்.

தன் முன்னாள் காதலியை சந்திக்கவரும் காட்சியும், காவல் நிலையத்தில் அமைச்சரை "யாரு இவரு" என்று கேட்டு நோகடிக்கும் காட்சியும், வில்லனின் வீட்டுக்குள்ளேயே புகுந்து எச்சரிக்கும் காட்சியும் ரஜினியால் மட்டுமே செய்யக்கூடியவை. ஒரு பாலத்தில் நடக்கும் சண்டைக் காட்சி அவரது ரசிகர்களுக்குப் பெரிய விருந்து.

ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரி ராவுக்கு இது பெரிய ரீ - என்ட்ரி வாய்ப்பு. துவக்கத்தில் நாடகத்தனமாக இருக்கும் அவரது நடிப்பு, போகப்போக இயல்பாகிறது.

ரஜினியின் முன்னாள் காதலியான ஹிமா குரேஷியின் பாத்திரமும் நண்பர் மாரிமுத்துவாக வரும் சமுத்திரக்கனியின் பாத்திரமும் கதையை நகர்த்துவதில் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை.

வில்லனான நானா படேகர் அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் அசத்துகிறார். ஆனால், பல இடங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பது புரியவில்லை.

ஏழு பாடல்களில் சில முழுமையாகவும் சில பகுதியாகவும் இடம்பெறுகின்றன. கண்ணம்மா பாடல் தொடர்ந்து காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால், பின்னணி இசை பல இடங்களில் இல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. குறிப்பாக நானா படேகர் பேசும் இடங்களில் பின்னணி இசை பெரும் தொந்தரவாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் முரளியும் நிஜ தாராவியைப் போன்ற செட்டை உருவாக்கியிருக்கும் கலை இயக்குனர் ராமலிங்கமும் பாராட்டத்தக்கவர்கள்.

திரைக்கதையைப் பொறுத்தவரை, முதல் பாதியில் காலாவின் மிகப் பெரிய குடும்பத்தை அறிமுகப்படுத்துவது, அவரது முன்னாள் காதலியை வைத்து "ப்ளாஷ்-பேக்"கில் சிறுவயது ரஜினியின் கதையை அனிமேஷனில் விவரிப்பது, தாராவியை அபகரிக்க நினைக்கும் முயற்சியை முடக்குவது என விறுவிறுப்பாகவே நகர்கிறது. இருந்தபோதும் இந்த அறிமுக படலம் வெகு நேரத்திற்கு நீண்டுகொண்டே போவது சற்று அலுப்பை ஏற்படுத்துகிறது.

படத்தின் காப்புரிமை LYCA

இரண்டாவது பாதியில் 'தாராவியைக் கைப்பற்ற நினைக்கும் ஹரிதாதா VS காப்பாற்ற நினைக்கும் காலா' என்ற போட்டி விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டும். மாறாக, உபதேசங்களாக, தத்துவங்களாக, அலுப்பூட்டும் சம்பவங்களாக கடந்துசெல்கிறது. தொடர்ந்து காலாவை அடித்துக்கொண்டேயிருக்கிறார் ஹரிதாதா. மனைவி, மகனைக் கொல்கிறார். வீட்டை எரிக்கிறார். கலவரத்தை ஏற்படுத்துகிறார். கைதுசெய்ய வைக்கிறார்.

எப்போதுதான் காலா, ஹரிதாதாவைப் புரட்டியெடுக்கப்போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால், கடைசிவரை அப்படியேதும் நடப்பதில்லை. உச்சகட்டக் காட்சியில் மிகப் பெரிய, வண்ணமயமான பாடலோடு படம் நிறைவடைகிறது. இந்தப் பாடல் நன்றாக இருந்தாலும், படத்தில் வரும் நில அபகரிப்பு தொடர்பான பிரச்சனைக்கு அது ஒரு தீர்வாக நம்மை சமாதானப்படுத்தவில்லை. இரண்டாம் பாதியில் உள்ள இந்த பலவீனங்களே படம் முடியும்போது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன.

இருந்தபோதும் பல விதங்களில் இந்தப் படம் கவனத்திற்குரியது. படம் நெடுக வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் பிம்பங்களுக்கு மாற்றான பிம்பங்களை தொடர்ந்து முன்வைக்கிறார் ரஞ்சித். ரஜினியின் மேஜையில் டேனியலின் படைப்புகள், ராவண காவியம் புத்தகங்கள் இடம்பெறுவது, ராமன் நல்லவன், ராவணன் அரக்கன் என்ற கதைக்கு மாறாக ராவணனாக காலாவை உருவகப்படுத்தியிருப்பது போன்றவை கவனிக்கத்தக்கவை.

வில்லனாக வரும் ஹரிதாதா தொடர்ந்து தூய்மை குறித்தும், வளமான எதிர்காலம் குறித்து பேசுவதும் வில்லனின் கொடி காவி நிறத்தில் இருப்பதும் பல தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கக்கூடும்.

மேலும் ஒரு காட்சியில், எச். ராஜாவைச் சுட்டிக்காட்டுவதுபோல எச். ஜாரா என்ற பெயர் இடம்பெற்றுள்ள பெயர்ப் பலகை வருவதும் நுணுக்கமான சித்தரிப்பு. ஆனால், நிஜத்தில் இப்போதுவரை ரஜினியின் அரசியலுக்கு ஆதரவாக இயங்கிவரும் சில கட்சிகளுக்கும் அதன் தொண்டர்களுக்கும் இந்தக் காட்சிகள் பெரும் அதிர்ச்சியாக இருக்கக்கூடும்.

படத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போலவே ஒரு மிகப் பெரிய போராட்டம் காலாவால் நடத்தப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் முடிவில் தூத்துக்குடி கலவரத்தைப்போலவே ஒரு கலவரம் நடக்கிறது. அந்தக் கலவரத்தை காவல்துறையே தூண்டிவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான காட்சி இது. ஆனால், சமீபத்தில் தூத்துக்குடி கலவரம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்களோடு இந்தக் காட்சிகள் முரண்டுபடுகின்றன. இது பார்வையாளருக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

படத்தில் பிரதான பாத்திரத்தை ஏற்றிருக்கும் ரஜினி, பிரம்மாண்டமான திரையில் பிரம்மாண்டமான முறையில் ஒரு போராட்டத்தை, ஒரு வழிமுறையை சொல்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் நியாயத்தைப் பேசுகிறார். ஆனால், நிஜத்தில் ரஜினி அளிக்கும் பேட்டிகளும் தெரிவிக்கும் கருத்துகளும் இந்தக் காட்சிகளுக்கு முரணாக இருப்பதால், படம் பார்ப்பவர்கள் நிஜ ரஜினியுடன் ஒன்றுவதா அல்லது திரையில் போராடும் காலா ரஜினியுடன் ஒன்றுவதா என்ற முரண்பாடு ஏற்படுகிறது.

ரஞ்சித்தின் முதல் இரண்டு படங்களான அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களிலும் ஒரு அரசியலைச் சொல்லியிருப்பார். கலைநேர்த்தியுடன் வெளிப்படும் மிக நுணுக்கமாக அவரது பார்வையும் அரசியலும் அந்தப் படங்களில் வெளிப்பட்டன. ஆனால், இந்தப் படத்தில் வெளிப்படையாகவே பேசுகிறார். இந்த நேரடி பேச்சு,ரஞ்சித் விரும்புவதைச் சாதிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: