சுவையான, தரமான உணவு வேண்டுமா?: 10 முக்கிய தகவல்கள்

நமக்கு உணவைச் சமைப்பதும் உண்பதும் பிடிக்கும். புதிய உணவுப் பொருட்களைத் தேடி சந்தையில் அலையவும் செய்கிறோம். உணவுகளுக்கு சுவையூட்ட ஆய்வகங்களில் மட்டுமே செய்யக்கூடிய சில சோதனைகளைச் செய்யவும் நாம் தயங்குவதில்லை.

பிபிசி வானொலி வழங்கும் 10 சிறந்த சமையல் ஆலோசனைகள் உணவைப் போலவே மிகவும் சூடாகவும் சுவையாகவும் உள்ளன.

இதோ அந்த 10 ஆலோசனைகள்.

1. மரப் பலகைகளையே பயன்படுத்துங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

சுகாதாரம் கருதி ஸ்டைன்லெஸ் ஸ்டீல் தட்டுகளையே காய்கறிகளை நறுக்க பெரும்பாலான தொழில்முறை சமையல் கலைஞர்கள் பயன்படுத்துக்கின்றனர்.

சிலர் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மரப் பலகைகளை பயன்படுத்துவது கிருமிகள் அதில் தங்க வாய்ப்பளிக்கும் என்ற மாயை பலர் மத்தியிலும் நிலவுகிறது.

ஆனால், உண்மை அதுவல்ல. நீரை உறிஞ்சும் தன்மை உடையதால் மரப்பலகை தண்ணீரை உடனே உள்ளிழுத்துக்கொள்ளும். அது பேக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் மரப்பலகையில் வாழ்வதைக் கடினமாக்கிவிடும்.

'"பிளாஸ்டிக் தட்டுகளில் விழும் கீறல்களில் தண்ணீரும் பேக்டீரியாவும் தங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. மரப்பலகைகளில் அதற்கான வாய்ப்பில்லை," என்கிறார் சமையல் நிபுணர் ஷோ லாங்லின்.

2. எல்லா சமையலுக்கும் ஏற்ற கடுகு எண்ணெய்

படத்தின் காப்புரிமை Getty Images

கடுகு எண்ணெய்க்கென்று தனியாக ஒரு சுவை இல்லாததால், நீங்கள் சமைக்கும் உணவுப்பொருள் சுவையும் மணமும் எவ்வகையிலும் மாறாது.

கடுகு எண்ணையின் கொதி நிலை அதிகமாக இருப்பதால் உங்கள் உணவு கருகிப்போகவும் அதிக நேரம் ஆகும்.

இதன் விலையும் ஒப்பீட்டளவில் பிற சமையல் எண்ணெய்களைவிடவும் குறைவு.

3. இறைச்சியின் சுவையை தக்க வைப்பது எப்படி?

படத்தின் காப்புரிமை Getty Images

சமைத்த இறைச்சியை உடனே உண்ணாமல், சில நிமிடங்கள் மூடி வைப்பது அதில் உள்ள சாறுகளைத் தக்கவைக்க உதவும்.

சமைக்கப்பட்ட இறைச்சியின் வெப்பம் குறையும்போது, அதன் உள்ளே இருக்கும் நீர் பிசுபிசுத்துப் போய் உள்ளேயே தங்கிவிடும்.

எவ்வளவு நேரம் அதை ஆற வைக்க வேண்டும் என்பது உங்கள் சமையல் அறையின் வெப்பத்தைப் பொறுத்தது.

4. புதிய ஈஸ்டுகளையே பயன்படுத்துங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

பன் தயாரிக்கும்போது மைதா அல்லது கோதுமை மாவை உப்பலாக மாற்ற உயிருள்ள, புதிய ஈஸ்டுகளையே (Yeast) பயன்படுத்துங்கள். பழைய, வறண்ட ஈஸ்டுகளைத் தவிர்த்து புதியனவற்றைப் பயன்படுத்துவது சுவையை மிகவும் அதிகரிக்கும்.

அவை கிடைப்பது அரிதுதான். ஆனால், கொஞ்சம் மெனக்கெடுவது நல்லது.

சில நாட்கள்தான் அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க முடியும். பின்னர் அவை வறண்டுவிடும்.

5. குளிர்பானங்களில் நுரையை தக்க வைப்பது எப்படி?

படத்தின் காப்புரிமை Getty Images

குளிர்ந்த சூழலில் அந்த குளிர்பானங்களை, இறுக மூடிப் பாதுகாத்து வைப்பது நுரையைத் தக்க வைக்கும் உத்தியாகும்.

அப்போதுதான் அதிக அழுத்தம் உண்டாகி கரியமில வாயு வெளியேறாமல் இருக்கும்.

நீங்கள் குடுவையைக் குலுக்குவதால் நுரை உண்டாகாது. வெளியே அடைக்கப்பட்டிருக்கும் அந்தக் குடுவையில் குலுக்குவதால் உள்ளே எந்த மாற்றமும் உண்டாகாது.

6. காளாண் தோலை நீக்காதீர்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

சிலர் காளானின் தோலை நீக்கிவிட்டு சமைக்கவே விரும்புவார்கள். காளானின் தோலை செதுக்கிவிட்டு சமைப்பது ஒரு மோசமான செயல் என்கிறார் சமையல் விமர்சகர் ஜே ரெய்னர்.

அது அதிக நேரம் தேவைப்படும் வேலை மட்டுமல்லாது, அதன் மேற்பரப்பில் இருக்கும் சில சுவைகளையும் இழக்கச் செய்கிறது.

மண் படிந்து இருந்தால் அவற்றை கழுவினால் மட்டும் போதும். அல்லது லேசாக பிரஷ் வைத்துத் தேய்க்கலாம்.

7. வெண்ணெய்யில் உப்பு சேர்க்கலாமா?

படத்தின் காப்புரிமை Getty Images

இது ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி.

முந்தைய காலங்களில் ரொட்டி செய்ய உப்பு சேர்க்கப்பட்ட வெண்ணெய்யும், சமையலுக்கு உப்பில்லாத வெண்ணெய்யும் சேர்த்துள்ளனர்.

பேக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவை வளர்வதைத் தடுக்கும் நோக்கிலேயே உப்பு சேர்க்கப்பட்டது.

வெண்ணெய்யில் உள்ள நீரை பேக்டீரியா உறிஞ்சுவதை உப்பு தடுக்கிறது.

சிலர், உணவில் அதிக நீர்த்தன்மை இல்லாமல் இருக்க உப்பு சேர்க்கப்படாத வெண்ணெய்யை பயன்படுத்துவர்.

8. தூக்கி எறிவதிலும் சுவை உள்ளது

படத்தின் காப்புரிமை Getty Images

நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் காய்கறிகளின் பாகங்கள் ஒரு வேளை சுவை மிக்கதாக இருக்கலாம்.

காலி பிளவரின் இலைகள், பட்டாணியில் தோல் , கொத்தமல்லித் தண்டு என அனைத்துமே உண்ணக்கூடியவைதான். வெங்காயத்தின் தோலை உரிக்காமல் பொன்னிறம் ஆகும் வரை நன்றாக வறுத்து சமைத்து சாப்பிடலாம்.

9. ஒயின் நன்றாக உள்ளதா என்பதை எப்படிகண்டுபிடிப்பது?

படத்தின் காப்புரிமை Getty Images

உங்களுக்கு வழங்கப்படும் நாள்பட்ட ஒயின் நல்ல நிலையில் உள்ளதா என்பதை அதை மூடப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டையை முகர்ந்துபார்த்து கண்டுபிடிக்கலாம்.

ஒயினின் மூடி கெட்டுப்போயிருந்தால் அதில் ட்ரைகிளோரோ அனிசோல் எனும் நச்சுப் பொருள் உண்டாகும்.

அந்த நச்சு உண்டாகி இருந்தால் ஒயின் மனத்துக்கு பதிலாக மூடியில் ஈரத்தால் ஏற்படும் துர்நாற்றம் வீசும். ட்ரைகிளோரோ அனிசோல் உண்டாக்கும் அந்த துர்நாற்றம் குறைந்த அளவில் இருந்தாலும் எளிதில் கண்டுகொள்ளும் விதத்திலேய இருக்கும்.

முகர்ந்து பார்த்தபின் அந்த ஒயினை குடிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

10. பாஸ்தா முழுமையாக வெந்துவிட்டதா?

படத்தின் காப்புரிமை Getty Images

பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் ஆகியன முழுமையாக சமைக்கப்பட்டதும் அவற்றில் உள்ள மாவுத் தன்மையால் பிசுபிசுத்துப்போகும்.

அதை அறிய நீங்கள் அவற்றில் ஒரு துண்டை சுவரின் மீது வீசலாம். அது ஒட்டிக்கொண்டால் நன்றாக சமைக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.

அதற்கு ஒரு மாற்று வழியும் உள்ளது. நீங்களே உங்கள் வாயில்போட்டு சுவைத்துப் பார்ப்பதுதான் அது.

நீங்கள் எந்த முறையை பின்பற்ற விரும்புகிறீர்கள்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்