சினிமா விமர்சனம்: Race 3

பாலிவுட்டின் வெற்றிகரமான தொடர் சினிமாக்களில் ஒன்றான Race பட வரிசையில் 3வது படம். முந்தைய இரண்டு பாகங்களில் நாயகனாக சாயிஃப் அலிகான் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சல்மான் கான்.

முந்தைய இரண்டு படங்களை அப்பாஸ் - மஸ்தான் கூட்டணி இயக்கியிருந்தது. இந்தப் படத்தை ரெமோ டி சௌஸா இயக்கியிருக்கிறார். மூன்று படங்களிலிலும் அனில் கபூர் நடித்திருக்கிறார் என்பது ஒரு ஒற்றுமை.

திரைப்படம் Race 3
நடிகர்கள் அனில் கபூர், சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ், பாபி தேவல், டெய்ஸி ஷா
இசை சலீம் மெர்ச்சண்ட், சுலைமான் மெர்ச்சண்ட்
இயக்கம் ரெமோ டிசௌஸா

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் சட்டவிரோத ஆயுதத் தொழில் ஈடுபட்டிருக்கும் மிகப் பெரிய பணக்காரர் ஷம்ஷேர் சிங்கின் (அனில் கபூர்) அண்ணன் மகன் சிக்கந்தர் சிங் (சல்மான் கான்).

ஷம்ஷேர் சிங்கின் மகன் சூரஜ், மகள் சஞ்சனா (சகீப் சலீம், டெய்ஸி ஷா). அவரது சொத்தின் பெரும் பகுதி சிக்கந்தர் சிங்குக்கு உயில் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. இதனால், சூரஜும் சஞ்சனாவும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், இந்திய அரசியல்வாதிகளின் பாலியல் லீலைகள் காட்டும் வீடியோ காட்சிகளைக் கொண்ட ஹார்ட் டிஸ்க் ஒன்றை வைத்து, பெரும் பணம் திரட்ட முடிவுசெய்கிறார் ஷம்ஷேர் சிங்.

அந்த ஹார்ட் டிஸ்க் ஒரு வங்கி லாக்கரில் இருக்கிறது. சிக்கந்தர், சூரஜ், சஞ்சனா ஆகியோர் சென்று எடுத்துவருகின்றனர்.

இதற்கிடையில், ஜெஸ்ஸிகா என்ற பெண் இவர்களுக்கு நடுவில் வருகிறாள். இறுதியில், ஷம்ஷேர் சிங் எல்லோருக்கும் எதிரியாகிவிட, சிக்கந்தர், சூரஜ், சஞ்சனா ஆகியோர் அவரை பெரிய துரத்தலுக்குப் பிறகு முறியடிக்கிறார்கள்.

முந்தைய இரண்டு படங்களோடு ஒப்பிட்டால் ரொம்பவே சுமாரான படம் இது. துவக்கத்திலிருந்தே தாறுமாறாகப் பயணிக்கிறது திரைக்கதை.

ஒரு மாபெரும் ஆயுத தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு பணக்காரர், அரசியல்வாதிகளின் பாலியல் வீடியோக்களை வைத்து மிரட்டுவது, அவர்கள் எல்லோரையும் மொத்தமாக தான் இருக்கும் இடத்திற்கே வரவழைப்பது ஆகியவை படம் பார்ப்பவர்களின் நம்பிக்கைத் தளர்வை ரொம்பவுமே சோதிக்கின்றன.

படம் நெடுக விலை உயர்ந்த கார்களை வைத்து நடக்கும் சண்டைக் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பூட்டுகின்றன.

2.45 மணி நேரம் ஓடும் இந்த நீளமான படத்தில் சற்றேனும் ஈடுபாட்டோடு நடித்திருப்பவர் அனில் கபூர். ஜாக்குலின் பெர்ணான்டஸ் சில காட்சிகளில் பரவாயில்லை. மற்ற அனைவருமே ஒரு திகைப்புடனேயே வந்துபோவதைப்போல இருக்கிறார்கள்.

சல்மான்கானின் படத்தைப் பார்க்க வருகிறவர்கள், அவரது சட்டையில்லாத உடலைப் பார்க்க மட்டுமே வருகிறார்கள் என்ற எண்ணத்தை அவர் இப்போதைக்கு மாற்றிக்கொள்வதாக இல்லை போலிருக்கிறது.

அதனால், இந்தப் படத்திலும் சட்டை இல்லாமல் நீண்ட சண்டைக் காட்சி உண்டு. மற்றபடி, எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் நடித்துவிட்டுப் போகிறார் மனிதர். இவரைப் பார்த்து பாபி தேவலும் சட்டையைக் கழற்றியிருக்கிறார்.

ஒரு காட்சியில் ஒரு பெரிய படைப் பிரிவே சல்மான்கானைத் துரத்துகிறது. சுட்டுத்தள்ளுகிறது. மனிதர் சிறு காயங்களோடு தப்புகிறார்.

மற்றொரு காட்சியில் சல்மான்கான் செல்லும் வண்டி மலை உச்சியில் இருந்து விழுகிறது. சல்மான்கான் பறக்க ஆரம்பித்துவிடுகிறார். நமக்கு விவேகம் அஜீத் நினைவுக்கு வருகிறார்.

படத்தில் உள்ள இரண்டு நாயகிகளும் நிறைய பார்ட்டிகளுக்குச் செல்கிறார்கள். ஷாம்பெய்ன் குடிக்கிறார்கள். கவர்ச்சியாக சண்டையிடுகிறார்கள்.

இதையெல்லாம் விட பெரிய காமெடி, இந்தப் படத்தின் வில்லன். ராணா (ஃப்ரெட்டி தருவாலா) என்ற பெயரில் வரும் இந்த வில்லன் கடைசிவரை வில்லத்தனம் எதுவுமே செய்வதில்லை.

படத்தில் பாராட்டும்படி இருப்பது அயனங்கா போஸின் ஒளிப்பதிவும், அனல் அரசுவின் சண்டைக் காட்சிகளும்தான்.

சல்மான்கான் ரசிகர்கள் மட்டும் இந்த முப்பரிமாணப் படத்தை (3D) சற்று சிரமப்பட்டு ரசிக்கலாம். இதற்கு அடுத்த பாகம் வேறு வரவிருக்கிறது. என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்