நான் ஏன் எட்டு வழிச்சாலை குறித்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தேன்? - விளக்கும் இயக்குநர்

  • மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்

மரத்திலிருந்து பறவையின் கூட்டை கலைப்பதற்கு ஒப்பானது விவசாயிகளிடம் நிலத்தை பறிப்பது என்கிறார் திரைப்பட இயக்குநர் சந்தோஷ் கோபால்.

2016 கடந்த ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து 'ஜல்லிக்கட்டு' என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் சந்தோஷ். அப்படம் வெளியீட்டிற்கு தயாரக இருக்கிறது. இப்போது சேலம் - சென்னை 8 வழிச் சாலை குறித்து திரைப்படம் இயக்கி வருகிறார்.

திரைப்படம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் சந்தோஷ்.

எட்டு வழிச் சாலைகள் குறித்து ஏராளமான போராட்டங்கள் நடந்து வரும் இச்சூழலில் எது குறித்து பேச வருகிறது இப்படம்?

"நிலத்தை குறித்தும், அந்த நிலத்தை நம்பி மட்டும் நூறாண்டுகாலமாக வாழும் எளிய மனிதர்கள் குறித்தும் பேசுகிறது இப்படம். பொருள்வயமான இந்த உலகில் நகரங்களில் வாழும் நமக்கு எந்த நெகிழ்வான உணர்வுகளும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த மக்களுக்கு நிலம்தான் எல்லாம். ஒரு மரத்திலிருந்து பறவையின் கூட்டை கலைப்பதற்கு சமம் விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிப்பது. உங்கள் வீட்டில் பறவை கூடு கட்டி இருந்தாலும் நீங்கள் அதை கலைப்பதற்கு நீங்கள் ஒரு நியாயம் சொல்லலாம். ஆனால், நீங்கள் நடாத ஒரு மரத்திலிருந்து, உங்களிடம் பலம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பறவையை விரட்டி மரத்தை வெட்டுவது எப்படி நியாயமாகும். அந்த மரம் உங்களால் விரட்டப்பட்ட பறவையின் எச்சத்திலிருந்து கூட முளைத்திருக்கலாம். அந்த பறவையின் நியாயத்தையும், மரத்தின் மீது இருக்கும் உரிமையையும் பேசுகிறது இப்படம்"

இப்படியாக ஒரு படம் பண்ணலாம் என்ற யோசனை எப்படி வந்தது?

"தருமபுரி மாவட்டம் அரூரில் தொழிற்பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன். ஒரு நாள் பயிற்சி அளிக்க நான் அங்கே சென்றிருந்த போது, நான் பார்த்த காட்சி என்னை பதபதைக்கவைத்தது. ஒரு சிறு விவசாயியின் நிலத்தை அளப்பதற்காக ஏராளமான போலீஸாரும், அதிகாரிகளும் அங்கு திரண்டு இருந்தனர். தங்களுக்கு வாழ்வளிக்கும் நிலத்தை கொத்தி மஞ்சள் கல் நடுவதை பார்த்து எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் அழுத அந்த விவசாயிகளின் மரண ஓலம் என்னை பதபதைக்க செய்தது. என்னையும் அறியாமல் என்னிடம் இருந்த கேமிராவை கொண்டு படம் பிடிக்க தொடங்கினேன். அந்த நாளில்தான் இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்டு, பூஜை போட்டெல்லாம் படிப்பிடிப்பை தொடங்கவில்லை. காலமும், நிலமும் இப்படத்தை முடிவு செய்து இருக்கிறது. நான் அதில் பயணித்து கொண்டிருக்கிறேன்"

திட்டமிடாமல் படப்பிடிப்பு தொடங்கி இருக்கலாம். ஆனால், ஆய்வு மேற்கொண்டு இருப்பீர்கள் தானே?

"ஆம். விரிவான ஆய்வை மேற்கொண்டேன். சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், பியூஷ் மனுஷ் ஆகியோரை சந்தித்து தகவல் திரட்டினேன். அவர்கள் சொன்ன தகவல் எல்லாம் அச்சம் தருவதாக இருந்தன. பெருமுதலாளிகளின் நன்மைக்காக நம் அரசுகள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிவிட்டதா என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது. சூழலியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் என எல்லாரையும் கடந்து நிலத்தை இழக்கும் விவசாயிகளே இந்த சாலை குறித்து அதன் அரசியல் குறித்து நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அளித்த தகவல்களை கொண்டுதான் திரைக்கதை அமைத்திருக்கிறேன்."

ஆனால், தேசத்தின் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும் தானே?

"தேசத்தில் வாழும் மக்களின் வளர்ச்சிதானே தேசத்தின் வளர்ச்சி. அந்த பெரும்வாரி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டு சிறு குழுவின் வளர்ச்சியை மட்டும் பேசுவது எந்த விதத்தில் நியாயம். ஏற்கெனவே உள்ள சென்னை சேலம் சாலையிலேயே கணக்கிட்ட அளவுக்கு மக்கள் செல்லாத போது, புதிய சாலைகள் எதற்கு? வளங்களை சுரண்டுவதுதான் வளர்ச்சியா? வளங்கள் வங்கி இருப்பு போல... வங்கி இருப்பை மொத்தமாக நாம் செலவு செய்துவிட்டால் நாளை நம் பிள்ளைகள் எதனை கொண்டு வாழும்? சித்தேரிமலையில் உள்ள பழங்குடிகள் இத்தனை காலமாக நிலத்தை நம்பி வாழ்ந்து இருக்கிறார்கள். நிலம் மட்டும்தான் அவர்களின் ஒரே பிடிமானம். இப்போது அதையும் பிடுங்கி கொள்வது என்ன நியாயம்?"

படத்தின் தொழில்நுட்ப குழு குறித்து சொல்ல முடியுமா?

"பசுபதி, கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திகளில் நடிக்கிறார்கள். அசோக் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் இசை அமைக்கிறார்"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :