பழங்கால இசைக் கருவிகளுக்கு உயிர்கொடுக்கும் அரசு அலுவலர்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
பாம்பு வடிவ இசைக்கருவி
படக்குறிப்பு,

பாம்பு வடிவ நாதசுவர இசைக்கருவி

பல்லவர்கள், சோழர்கள் என பல சாம்பிராஜ்யங்களில் அரசவைகளில் இசைக்கப்பட்ட யாழ் இசைக்கருவி எப்படி இருந்திருக்கும்? அந்த இசையை தற்போது கேட்கமுடியுமா?

முடியும் என்பதற்கு சாட்சியாக இருப்பது சென்னையில் உள்ள அரசாங்க சங்கீத வாத்தியாலா. சங்ககாலம் தொட்டு இசைக்கப்பட்டுவந்த 12 விதமான யாழ் இசைக்கருவிகளை ஓசையே இல்லாமல், மீட்டுருவாக்கம் செய்துவரும் அரசு அலுவலர் கோபாலின் உதவியால் அந்த யாழைப் பார்க்கலாம், இசையைக் கேட்கலாம்.

சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் இசை வாத்தியங்களுக்கான மையத்தில் பழமையான இந்திய மற்றும் வெளிநாட்டு இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்துவருகிறார் கோபால்.

மீன் உருவம் கொண்ட மட்ச்ய யாழ், வில் யாழ், முதலை உருகொண்ட மகர யாழ், சிறிய அளவிலான செங்கோட்டு யாழ், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகோட யாழ் என பல்வேறு யாழ் இசைக்கருவிகள் இந்த மையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றை கோபால் ஆர்வத்துடன் இசைத்துக்காட்டுகிறார்.

அங்குள்ள 250 கருவிகளில் சுமார் நூறு கருவிகளை உருவாக்கியவர் கோபால் என்பதால், ஒவ்வொரு கருவிகளையும் கையாளுவதிலும், விளக்கிச்சொல்வதிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறார்.

தமிழ்நாட்டின் புராதான பேண்ட் வாத்தியம்?

அழகிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய ஐமுக முழவம் ஒன்று இங்குள்ளது.

''விதவிதமான வெளிநாட்டு பேண்ட் வாத்தியங்களைப் பார்க்கும் பலருக்கும், ஐமுக முழவம் என்ற தாளவாத்தியம் எப்படி இருக்கும் என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல கோயில்களில் திருவிழாக்களின் போது வாசித்த இந்த கருவியை தற்போது காண்பது அரிதாகிவிட்டது. நடுப்பகுதியில் பெரிய தாளமும் அதைச் சுற்றி, நான்கு முழவங்களும் இருக்கும். ஐந்தும் விதவிதமான இசையைக் கொடுக்கும் அற்புதக் கருவி இது,'' என்கிறார் கோபால்.

நாக்கில் வைத்து வாசிக்கப்படும் மோர்சிங் வாத்தியம், பத்துக்கும் மேற்பட்ட ப்ளூட் கருவிகள், ஓம் என்ற சத்தத்தை தரும் பஞ்சலோக பிரணவ கந்தா, கேரளாவில் கணியன் மலைவாழ் மக்களின் கோக்கரா என்ற வாத்தியம் இங்குள்ளன.

வரலாற்றை சொல்லும் கருவிகள்

மைசூரில் உள்ள கோயில்களில் வாசிக்கப்பட்ட மூன்று விதமான சுருதி தண்டி, ஆந்திராவில் உள்ள காலஹஸ்தி கோயிலில் நெற்றிப்பகுதியில் கட்டிக்கொண்டு வாசிக்கப்படும் சந்திர பிறை மற்றும் சூரிய பிறை என்ற இரண்டு விதமான சிறிய பறைக்கருவிகள், மலபார் பகுதியில் வாசிக்கப்படும் திமிலா, காஷ்மீரில் பிரபலமாக இருந்த ரபாப் என்ற நரம்பு இசைக்கருவி, இந்தோனீஷியாவில் காணப்படும் வயலின் வகை, ரஷ்யாவில் காணக்கிடைக்கும் முக்கோண வடிவிலான கிட்டார் என அந்த சிறிய அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கும்போதும் ஒரு இனக்குழு அல்லது ஒரு நாட்டின் வரலாற்றில் ஒரு பக்கத்தை வாசித்த உணர்வு வருகிறது.

கோபால்
படக்குறிப்பு,

கோபால்

இரண்டு புறம் தாளம் வரும் மிருதங்கம் மட்டுமே பார்த்திருப்போம். இங்கு முப்புறங்களிலும் தாளம் தரும் ஒரு மிருதங்கம் உள்ளது. மிருதங்கத்தின் நடுப்பகுதியில் தாளிமிடும்படியாக அந்த மிருதங்கம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வரிசையில் மண்ணால் செய்யப்பட்ட மிருதங்கம், கல்லால் செய்யப்பட்ட நாதசுவரம், பாம்பு வடிவில் நாதசுவரம், கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுரைக்காய்களில் செய்யப்பட்ட கணமில்லாத வீணைகள் என ஒவ்வொன்றும் நம்மை ஆச்சரியப்படுவைக்கின்றன.

அறுபது கலைஞர்கள் இருந்த மையம்

இலக்கியங்கள் மற்றும் கோயில் சிற்பங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் பல இந்திய இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்து, அவற்றை விற்பனை மூலம் பிரபலப்படுத்துவதற்கு 1956ல் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் அறுபது கலைஞர்கள்வேலைசெய்தார்கள் என்றும் தற்போது தான் மட்டுமே இருப்பதாக கூறுகிறார் கோபால்.

சங்கீத வித்யாலயா என்ற பெயரில் இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத் தொடங்கிவைத்து, தென்னிந்தியாவில் முக்கிய இசைஆசிரியர்களில் ஒருவாராக அறியப்படும் சாம்பமூர்த்தி உள்ளிட்ட ஆளுமைகள் பணியாற்ற இந்த மையம் தற்போது உதவிக்காக ஏங்கி நிற்கிறது.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள இசை வாத்தியங்களுக்கான மையத்தின் முகப்பு
படக்குறிப்பு,

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள இசை வாத்தியங்களுக்கான மையத்தின் முகப்பு

''ஒவ்வொரு கலைஞரும் பணி ஓய்வு பெற்ற பின்னர், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தனியார் இசைக்கருவிகள் தயாரிப்பு நிலையங்கள் பெரியஅளவில் வந்ததும், இந்த மையத்தை மேம்படுத்தவில்லை என்பதால் இசைத்துறையில் இருக்கும் நபர்களுக்கு கூட தெரியாத நிலைமைக்கு இந்த மையம் சென்றுவிட்டது. நானும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்றுச்சென்றுவிட்டால், புதிதாக இசைக்கருவிகளைச் செய்வதும், தற்போதுள்ள கருவிகளை பாதுகாக்கவும் பணிக்கு யாரவது அமர்த்தப்படுவார்களா என்று தெரியவில்லை,'' என்று வருத்தத்துடன் பேசினார் கோபால்.

தந்தை சோமுவின் கவனிப்பில் இசைக்கருவிகளுடன் வளர்ந்த கோபாலுக்கு பழைய இசைக்கருவிகளை உருவாக்குவது, புதிதுபுதிதாக கருவிகளை வடிவமைப்பு செய்வது மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது. ''எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இசைக்கருவிகளோடு இருக்கிறேன். பாலக்காட்டு மணி ஐயருக்கு மிருதங்கம் என்று தொடங்கும் பட்டியலில் இளம் தலைமுறையில் சித்ரவீணை ரவிகிரன் வரை பலருக்கும் இசைக்கருவிகளை தந்தையின் உதவியுடன், அவரின் ஓய்வுக்குப் பிறகு நானாகவே ஈடுபட்டும் செய்துள்ளேன். இந்த மையத்தில் லேத் வசதிகள் மேம்படுத்தாததால், தற்போது உள்ள வசதிகளை வைத்து செய்யக்கூடிய கருவிகளை தயாரித்துவருகிறேன்,'' என்கிறார் கோபால்.

அரசு அலுவலராக முப்பது ஆண்டுகளாக வேலைசெய்துவரும் கோபால், பள்ளிகள் மற்றும் அரசுவிழாகளில் கண்காட்சிக்கு இசைக்கருவிகளை அளித்துவிட்டு, திரும்பப்பெறுவது என்பதைத்தாண்டி, சென்னை மையத்தில் அவருக்கு பணிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனாலும், தனக்கென வேலைகளை வகைப்படுத்திக்கொண்டு ஆர்வத்துடன் கருவிகளை வடிவமைத்து வருகிறார்.

''இசையை விளக்க மொழி தேவையில்லை''

ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரியாவிட்டாலும், அவராகவே முயற்சி செய்து, இந்த மையத்தில் ஆரம்ப காலத்தில் வாங்கப்பட்ட ஆங்கில இசைப்புத்தகங்களை பார்த்து, வெளிநாட்டுக் கருவிகளை வடிவமைத்துவருகிறார்.

ஐரோப்பியன் லயர் என்ற நரம்பு கருவி, தென்னாப்பிரிக்காவில் வாசிக்கப்படும் பிடில் கருவி ஒன்றையும் சமீபத்தில் செய்துள்ளார்.

மீன் வடிவத்திலுள்ள யாழ்
படக்குறிப்பு,

மீன் வடிவத்திலுள்ள யாழ்

பலவிதமான இசைக்கருவிகளை உருவாக்கிவிட்டோம்; இத்தனை கருவிகளை எப்படி வாசிப்பது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் உள்ளது என பெருமை கோபாலிடம் இல்லை. ஒரு மனவருத்தம் அவரை வாட்டுகிறது.

''பல வெளிநாட்டுக்காரங்க வந்து பார்ப்பார்கள். எனக்கு தெரிந்த அளவில் அவர்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். புரியாதபட்சத்தில் வாசித்துக் கட்டுவேன். இசைக்கு மொழி எதற்கு?,'' கேள்வியுடன் சிரிக்கிறார். பார்வையாளர்கள் தங்களது கருத்துகளை எழுதிவைத்துள்ள புத்தகம் இந்த மையத்தில் உள்ள இசைக்கருவிகளின் முக்கியத்துவத்தை சொல்லும் ஒரே ஆவணமாக உள்ளது.

தான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்த கருவிகளை டெல்லியில் உள்ள அருங்காட்சியத்திற்கு எடுத்துசெல்லும் யோசனையில் அரசு உள்ளது என்று கூறும், ''இந்த அறிய கருவிகளை தமிழ்நாட்டு குழந்தைகள் பார்க்க டெல்லி செல்லமுடியுமா? அவர்கள் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்று எண்ணும்போது வலிக்கிறது,'' என்கிறார் ஆதங்கத்துடன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :