குஜிலி இலக்கியத்தை மீட்டெடுக்க களமிறங்கிய சென்னை பெண்கள்

  • 14 செப்டம்பர் 2018

சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் சாதாரண மக்களின் இலக்கியமாகக் கருதப்படும் 'குஜிலி இலக்கியம்' என்ற பாடல்களை தொகுத்து, இசைவடிவம் கொடுத்து உயிர்ப்பித்து வருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Nivedita louis

வரலாறு தொடர்பாக உரைகளை நிகழ்த்தும் நிவேதிதா லூயிஸ் மற்றும் இசை ஆசிரியர் மொனாலி ஆகியோர் குஜிலி பாடல்களை நகரத்தின் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றிவருகிறார்கள்.

குஜிலி இலக்கியம் என்றால் என்ன?

சமீபத்தில் சென்னையின் வரலாற்றை விளக்கும் நிகழ்வு ஒன்றில், நிவேதித்தா குஜிலி பாடல்களுக்கான பின்புலம் மற்றும் பொருளை வழங்க, அதை இசையோடு பாடிக்காட்டினர் மொனாலி.

'குஜிலி'என்பது தமிழ் வார்த்தையாக தெரியவில்லை. இதன் பொருள் என்ன என்ற கேள்வி நிகழ்ச்சிக்கு வந்த பலரிடமும் இருந்தது. பெயர் காரணம் தொடங்கி, குஜிலி இலக்கியத்தை மீட்டுடெடுப்பது எவ்வளவு முக்கியம் என்று விளக்கினார் நிவேதித்தா.

''வரலாறு என்பது அறிஞர்களால் மட்டுமே எழுதப்பட்டது அல்ல. சாதாரண மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த காலங்களில், தங்களைச்சுற்றி நடந்த சம்பவங்களை வாய்ப்பாட்டாக பாடியும், எழுதியும் உள்ளனர். பாடல்களை சிலர் எழுதி, தாங்களாகவே புத்தகமாகப் பதிப்பித்துள்ளனர். இதுபோல சாதாரண மக்களின் வரலாறாக இருப்பதுதான் குஜிலி பாடல்கள். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகில் குஜிலி பஜார் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இன்றும் உள்ளது. இங்குதான் குஜிலி பாடல் புத்தகங்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் விற்கப்பட்டன. 1850 ல் தொடங்கி 1950கள்வரை பிரபலமாக இருந்த இந்த குஜிலி பாடல்கள் தற்போது அரிதாகிவிட்டன,'' என்று விளக்கத் தொடங்கினார் நிவேதித்தா.

''பழைய பொருட்களை ஏமாற்றி விற்கும் இடமாகவும், திருட்டு பொருட்கள் அதிகம் விற்கப்படும் இடமாகவும் குஜிலி தெரு இருந்துள்ளது. குஜராத்தில் இருந்து வந்திருந்த வணிகர்கள் 'குச்சுலியர்கள்' என்று அழைக்கப்பட்டதற்கான இலக்கிய சான்றுகள் உள்ளன.

அத்தெருவில் பாலியல் தொழிலாளர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும் பதிவுகள் உள்ளன. அந்த காலத்தில் நடந்த பரபரப்பான குற்றச் சம்பவங்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை நகரத்தில் கொண்டுவரப்பட்ட ரயில்நிலையங்கள், முதன்முதலில் விமானம் காட்சிப்படுத்தபட்டட சம்பவம், தெருச்சண்டைகள் என பலவிதமான செய்திகள் குறைவான விலைக்கு, மலிவான அச்சுத்தாளில், பாடல்களாக எழுதி வெளியிடப்பட்டன. பல எழுத்தாளர்கள் எழுதிய பாடல் புத்தகங்கள் குஜிலித்தெருவில் கூவிக்கூவி விற்கப்பட்டன,'' என்று விவரிக்கிறார் நிவேதிதா.

காட்சிகளை கண்முன் நிறுத்தும் குஜிலிப் பாடல்கள்

சில குஜிலி பாடல்களை எழுதியவர்கள் அந்த பாடலை பாட வேண்டிய ராகம், தாளம் ஆகியவற்றைக் குறிப்பிட்டும் எழுதியுள்ளதாகக் கூறி 'மேல் பறக்கும் மோட்டார் கார் சிந்து' (விமானம் பற்றிய பாடல்) என்ற பாடலை பாடிக்காட்டினார் மொனாலி.

படத்தின் காப்புரிமை Monali / Facebook
Image caption மொனாலி

''1913ல் சூளையைச் சேர்ந்த முனுசாமி முதலியார் என்பவர் எழுதிய 'மோட்டார் கார் சிந்து' பாடலை ஆதி தாளத்தில், நாதநாம கிரியை என்ற ராகத்தில் பாடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு பத்தியில் விமானத்தின் அழகை வருணிக்கும்போது அதன் பாகங்களை ஆசிரியர் உருவகப்படுத்தியுள்ளது சிறப்பான அம்சம்,'' என்று கூறி பாடலை பாடினார்.

''பறக்கும் மோட்டார்காரை பார்த்தாயோ நீ பெண்ணே

பக்ஷி போல் உருவமும் தோற்றது இது கண்ணே

விசிறி போல் தலைபுரம் வைத்தாரே அதுமுன்னே

வேண்டிய இஞ்சினும் வயித்தில் வைத்தார் கண்ணே

சக்கரம் ரெண்டு லப்பர் டியூபு வைத்து செய்தாரே கண்டு

கெற்பத்தில் துரையவர் குந்தியிருக்கிறார் பாரு..'' என்று பல உருவகங்களைக் கொண்ட நீண்ட பாடல் அது.

மெட்டுகள் சொல்லாத பாடல்களுக்கு, அர்தத்தை விளங்கிக்கொண்டு, அந்த பாடலில் இடம்பெற்றுள்ள உணர்வுக்கு ஏற்ப தாளம் அமைத்துப்பாடியதாகக் கூறுகிறார் மொனாலி.

படத்தின் காப்புரிமை Nivedita louis
Image caption பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜூல்ஸ் டைக் என்பவர் 1911இல் இந்தியா கொண்டுவந்த பிளரியட் விமானத்தை மோட்டார் கார் என்று நினைத்து குஜிலி பாடல் பாடப்பட்டது.

''நான் ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசை என இரண்டு விதமான இசையில் பாடல்களை பாடுவேன். குஜிலிப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ள ராகம்,தாளம் போன்றவற்றை பார்க்கும்போது, இந்த பாடலை எழுதிய சாதாரண மனிதர்கள், இசையை எவ்வாறு ரசித்து வாழ்ந்துள்ளனர் என்பது எனக்கு புலப்பட்டது.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடக்கும் இசைக்கச்சேரிகளில் குஜிலி பாடல்களுக்கும் இடம் கிடைக்கவேண்டும் என்பது எங்களின் விருப்பம்,'' என்று குஜிலி பாடல்களுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தைச் சொல்கிறார் மொனாலி.

மொனாலியின் தாய் மொழி பெங்காலி என்றாலும், தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவருவதால், தமிழில் பேசவும், எழுதவும், பாடவும் கற்றுக்கொண்டுள்ளார்.

''இந்த குஜிலி பாடல்களைப் பாடும்போது, இந்த மொழியின் அழகுடன் பாடவேண்டும் என்று கவனம் எடுத்துக்கொண்டேன். சுமார் மூன்று மாதங்கள் நானும் நிவேதிதாவும் கடுமையாக உழைத்தோம். அதன் பயனாக தற்போது இரண்டு நிகழ்வுகளில் இந்த குஜிலி பாடல்களை வழங்க எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. குஜிலி பாடல்களை எழுதியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்,'' என்றார் மொனாலி.

தாதுவருஷ பஞ்ச கும்மி பாடலின் சிறப்பு

1877ல் நேர்ந்த பஞ்சத்தை மக்களால் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த பஞ்சத்தை 'தாது வருஷப் பஞ்சக்கும்மி' என்ற பாடலாக எழுதியுள்ள வீரபத்திர முதலியார் என்பவரின் வரிகள் அந்தக்காலகட்டத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதாக அமைந்துள்ளன என்கிறார் நிவேதிதா.

''கொட்டி கிழங்கு கிட்டிக் கிழங்கும் கொஞ்சமும்கூட அகப்படலே

மட்டுப்படாத இந்தக் கருப்பினில் வயிறு வளர்ப்போம் வாங்களடி

முஷ்டக்கீரையும் மின்னக்கீரையும் முருங்கக்கீரை அகப்படலே

கஷ்டப்பட்டு நாமும் இந்தக்கருப்பினில் காலங்கழிப்போம் வாங்கள்…

காட்டுபக்கம் நூறு பிணம் ஓ சாமியே

வீட்டுப்பக்கம் நூறு பிணம்ஓ சாமியே

ரோட்டுப்பக்கம் நூறு பிணம் ஓ சாமியே

மேட்டுப்பக்கம் நூறு பிணம் ஓ சாமியே''

ஆகிய வரிகள் நெஞ்சை உலுக்குபவையாக அமைந்துள்ளன என்ற நிவேதித்தா, அறிஞர்களால் எழுதப்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களைவிட, அன்றைய அரசாங்க ஆவணங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளை விட குஜிலிப்பாடல்கள் பஞ்சத்தின் கோரமுகத்தை காட்டுவதாக உள்ளன என்கிறார்.

மக்கள் மொழியில் அமைந்த பாடல்கள்

குஜிலிப் பாடல்களை எழுதியவர்கள் முறையான கல்வி கற்றவர்களாக இல்லாவிட்டாலும், தங்களுக்கு தெரிந்த செய்திகளை பிறருக்கு கொண்டுசேர்க்கும் விதமாக பாடல்களை அமைத்துள்ளனர் என்கிறார் நிவேதிதா. மன்னார்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், மாயவரம், சூளை, திருச்சி போன்ற பகுதிகளில் குஜிலி கவிஞர்கள் இருந்தனர் என்றும் அனைத்து மதத்தினரும் பாடல்களை எழுதியுள்ளனர் என்றும் கூறுகிறார்.

'' சிந்து, நொண்டி நாடகம் அல்லது நொண்டிச் சிந்து, கும்மி, நாட்டார் பாடல்கள் என பல வடிவங்களில் குஜிலிப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பல கற்பிதங்களை உடைப்பனவாகவும் இந்த பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கிண்டி ரேஸ் கிளப் பற்றி, 'குதிரைப்பந்தய சிந்து' என்ற தலைப்பில் சுப்பையன் என்பவர் இயற்றிய பாடலை பார்த்தால், ரேஸ் கிளப்க்கு வெறும் பணக்காரர்கள் மட்டும் வரவில்லை. ஏழைகளும் வந்துள்ளனர். பெண்கள் கைக்குழந்தையுடன் கூட வந்துள்ளனர் என்பது புரியும். ஆங்கிலேயர்கள்,சீனர்கள், அரசு அதிகாரிகள், ஊர் மக்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட பலரும் ரேஸ் மைதானத்திற்கு அதிகாலையில் வந்திருந்தனர் என்று விளக்கமாக கூறுகிறது சுப்பையனின் பாடல்,'' என்றார்.

குதிரைப்பந்தய சிந்து:- சுப்பையன்

காண விநோதம் கிண்டிரேஸ் கார்த்திகை மாதம் கண்ணால்…

ஆணும்பெண்ணும் வருவார் அங்குமிங்கும் அலைவார்

தோணுமைதானமெங்கும் சுற்றிசுற்றிக் கலைவார்

கைப்பிள்ளையோடு சில கன்னிமாரும் திரிவார்

ஒப்புவயிற்றுப்பிள்ளையோடு பலர் திரிவார்

வீட்டுவேலையைவிட்டு வேணபெண் வந்திடுவார்

காட்டுப்பெண்மாமியுடன் நால்வர்க்கு முந்திடுவார்

அழும்பிள்ளை தனைத்தொட்டியாட்டிப் படுக்கவைத்து

எழும்பூரு ரயிலேறி, யேகும் பெண்மார்கள் பித்து

கவர்னர் துரை வருவார் கலக்டர் ஜஸ்டீஸ் வருவார்

யவனர் பார்சீகள் பல ஆங்கிலேயர் வருவார்

குருடர் செவிடர் பலகூனக்கிழவர் நொண்டி

திருடர் நெருங்கிவந்து சேப்பிற்கையிடுங்கிண்டி....

என விரிவாக ரேஸ் கிளப் காட்சிகளை சொல்கிறது இந்த பாடல்.

முதல் உலகப்போர், சென்னை உயர்நீதிமன்ற சுற்றுச்சுவரில் எம்டன் குண்டு எறிந்த சம்பவம், அந்த காலத்தில் நடந்த மாமியார் மருமகள் சண்டை வரையிலான சம்பவங்களை குஜிலிப் பாடல்கள் படம்பிடித்துக்காட்டுகின்றன என்கிறார் நிவேதிதா.

குஜிலி பாடல்களுக்கு தடை

குஜிலி பாடல்களின் மறைவு குறித்து பேசிய அவர், 1930களில் தடை செய்யப்பட்ட இலக்கிய வகையில் குஜிலி பாடல்களும் சேர்க்கப்பட்டன என்பதால் குஜிலி பாடல் புத்தகங்கள் வாங்குவதும், அதை வைத்திருப்பதும் குற்றமாக கருதப்பட்டது என்கிறார்.

படத்தின் காப்புரிமை Nivedita

''ஒரு கட்டத்தில் சுதந்திரத்திரத்தை கருவாகக் கொண்டும் குஜிலி பாடல்கள் அமைந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த பாடல் புத்தகங்கள் தடை செய்யப்பட்டது இந்த பாடல்களின் அழிவுக்கு ஒரு முக்கிய காரணம். அதோடு, சினிமா பாடல்கள் புத்தகமாக வெளியாகிய காலம் என்பதால், இந்த பாடல் புத்தகங்கள் விற்பனை சரிந்தது. செய்தித்தாள்களை சாதாரண மக்களும் வாங்கி படிக்கும் அளவுக்கு மலிவான விலையில் கிடைத்ததால், குஜிலி பாடல்களுக்கு இடம் இல்லாமல் போனது,'' என்றார் அவர்.

''தற்போது மிகவும் குறைவான எண்ணிக்கையில் குஜிலி பாடல் புத்தகங்கள் நம்மிடம் கிடைத்துள்ளன. எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாசலாபதி குஜிலி பாடல்கள் குறித்து விரிவான ஆய்வை நடத்தி முச்சந்தி இலக்கியம் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். குஜிலி பாடல் என்ற இலக்கிய வடிவத்தை நாம் தொலைத்துவிடக்கூடாது, இந்த பாடல்களை மேடைகளில் வழங்கவேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டுவருகிறோம். இந்த இலக்கியத்தை பாதுகாத்து, மதிப்பளிப்பது ஒவ்வொருவரின் கடமை,'' என்று முடித்தார் நிவேதிதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்