வேள்பாரி: 50 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த புனைக் கதைத் தொடர்

ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் சரித்திர புனைகதைத் தொடரான வேள்பாரி, 100வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் புனைகதைத் தொடரொன்று இத்தனை வாரங்கள் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

வேள்பாரி தொடரின் முதல் அத்தியாயம் ஆனந்த விகடனின் 2016ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழில் வெளியானது. வியாழக்கிழமையன்று வெளியாகியுள்ள இதழில் இதன் நூறாவது அத்தியாயம் வந்துள்ளது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் வாசகர்களை இணைக்கும் விழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"இந்தத் தொடரை முதலில் எழுத ஆரம்பித்தபோது 50-55 வாரங்கள் வரைதான் வருமென நினைத்தேன். ஆனால், 50 வாரங்களைத் தாண்டியபோது பாதிக் கதைகூட முடியவில்லை. வாசகர்களின் வரவேற்பும் இருந்ததால், விகடனிலும் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தினார்கள். இப்போது 100வது வாரத்தை எட்டியுள்ளது" என்கிறார் வேள்பாரி தொடரின் ஆசிரியரும் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன்.

இந்தத் தொடர் ஒரு வருடத்தை எட்டிய நிலையில், இதற்கென மிகப் பெரிய வாசகர் வட்டம் உருவாகியிருக்கிறது. வாராவாரம் வியாழக்கிழமையன்று இந்தத் தொடரைப் படித்துவிட்டு சமூகவலைதளங்களில் எழுதவும் ஆரம்பித்தார்கள்.

"ஒவ்வொரு வாரமும் விகடன் இதழை வாங்கியதும் வேள்பாரி தொடரைத்தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இந்தத் தொடர் எனக்கு ஈழப்போரை நினைவூட்டியது. தற்போது சூழலுக்கான போராட்டங்களை இந்தத் தொடர் எனக்கு நினைவுபடுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், எத்தனை தமிழ்ப் பெயர்களை இந்தத் தொடர் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. தவிர, சங்க காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களையும் இந்தத் தொடர் மிகச் சுவையான முறையில் சொல்லிவருகிறது. யார் வீட்டில் ஆனந்த விகடன் இதழைப் பார்த்தாலும் அவர்கள் வேள்பாரி படிக்கிறார்களா என்றுதான் முதலில் கேட்பேன்" என்கிறார் இந்தத் தொடரின் தீவிர வாசக்களில் ஒருவரான இலங்கை வேந்தன்.

வேள்பாரியின் கதை இதுதான்: மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்துவரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக வேளிர் குலம். அதன் தலைவன் பாரி. இவனது ராஜ்ஜியம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்பு மலையில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் மூவேந்தர்கள் சமவெளியில் ஆட்சி செய்கிறார்கள். வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைக்கிறான்.

அதில் அவனது துறைமுகம் தீக்கிரையாகிறது. இதனால், சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான் பாண்டியன். பாரியை மலையைவிட்டு கீழே வரச்செய்ய பாரியின் நண்பனான நீலனையும் பிடித்துவைக்கிறான். பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் நடத்தும் இந்தப் போரில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இறுதி அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது.

Image caption சு. வெங்கடேசன்

"தமிழ்நாட்டின் வாழ்வாதாரச் சிக்கல்களை அந்த காலகட்ட மனிதர்களும் மன்னர்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வேள்பாரியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். மூவேந்தர்கள் வணிகர்களுக்கு ஆதாரவாக இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்த நிலையில், ஓர் இனக் குழுத் தலைவனான பாரி எப்படி இயற்கையைக் காப்பாற்ற எப்படி போராடினான் என்பதுதான் மையப்புள்ளி. அதற்காகவே இந்தத் தொடரை வாராவாரம் படித்துவந்தேன்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையின் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை என கதையின் துவக்கத்தில் ஆசிரியர் வெங்கடேசன் கூறியதைச் சுட்டிக்காட்டும் சுந்தர்ராஜன் அதை அற்புதமாக விவரித்துச் சென்றதுதான் கதையின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

இந்தத் தொடரில் வரும் போர்க் காட்சிகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. "போர்க்காட்சிகள் என்றால் புராணங்களில் வரும் மந்திர - தந்திரக் காட்சி பற்றிய பதிவுகள் மட்டுமே இங்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. நமது வீரக்கலைகள் பற்றி இங்கு முறையாக தொகுக்கப்படவில்லை."

"கோட்டைகளிலும் அரண்மனைகளிலும் எத்தனை விதமான பொறிகள் இருந்தன என்பதை சிலப்பதிகாரம் பட்டியலிடுகிறது. எதிரிகளை தாக்குவதற்க்கு இத்தனை வகையான பொறிகள் இருந்திருக்குமேயானால் மற்ற ஆயுதங்கள் எவ்வளவு இருந்திருக்கும்? நமது பழந்தமிழ் இலக்கியங்களிலும் வாய்மொழி மரபுகளிலும் ஆயுதங்களைப் பற்றியும், போர்க்கருவிகள் பற்றியும், போருக்கான வேலைப்பாடுகள் பற்றியும் வீரக்கலைகள் பயிற்றுவிக்கும் முறைபற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். அதனடிப்படையில்தான் இப்போர்க்களக் காட்சியை உருவாக்கினேன்" என்கிறார் சு. வெங்கடேசன்.

"ஆனந்த விகடனின் பாரம்பரியத்தில் தொடர்கதைகள் என்பது ஒரு முக்கியமான அம்சம். அதை மிகப் புதுமையான அம்சங்களோடும் வெளியிடுவோம். 30களிலேயே தியாக பூமி, அதன் திரைவடிவத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களோடு வெளியிட்டோம். இந்த காலகட்டத்தில் தொடர்கள் என்பது முழுமையாக தொலைக்காட்சிக்கு சென்றுவிட்டது. ஆகவே இந்த காலகட்டத்தில் சமூக தொடர்களைவிட சரித்திரத் தொடருக்குத்தான் புத்தகத்தில் வாய்ப்பிருக்கிறது."

"இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சு. வெங்கடேசனிடம் பேசினோம். அப்படித்தான் இந்தத் தொடருக்கான ஆரம்பம் உருவானது" என பிபிசியிடம் தெரிவித்தார் விகடன் குழுமத்தின் தலைவரான பா.ஸ்ரீநிவாசன்.

வேள்பாரி தொடர் துவங்கியதும் வாசகர்கள் அதில் மூழ்கிப்போய்விட்டனர். இப்போது மூவேந்தர்களும் பாரியை முற்றுகையிட்டிருக்கும் நிலையில், பாரிக்கு மட்டும் ஏதாவது ஆனால், நடப்பதே வேறு என ஒரு வாசகர் மிரட்டியிருக்கிறார். #savevelpari என பிரசாரம் செய்யப்போவதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதெல்லாம் அந்தத் தொடரின் அமோகமான வெற்றியைக் காட்டுகிறது என்கிறார் ஸ்ரீநிவாசன்.

வேள்பாரி தொடருக்கு மணியம் செல்வன் வரைந்துவரும் ஓவியங்களும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. "நான் வரைய ஆரம்பித்து 50 ஆண்டுகளாகின்றன. பொதுவாக நான் சமூக நாவல்களைவிட வரலாற்றுப் புனைவுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பேன். ஏனென்றால் அவை சித்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கக்கூடியவை. வேள்பாரியைப் பொறுத்தவரை, கதை நடக்கும் நிலப்பகுதி மலையும் மலைசார்ந்த இடமுமாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எழுத்தில் மிகச் சிறப்பாக அந்தப் பகுதியைச் சொன்னதன் மூலம் சு. வெங்கடேசன் ஒரு சவாலை எனக்கு ஏற்படுத்தினார். அந்த சவாலை நான் எதிர்கொண்டேன். அதுதான் இந்த வரவேற்பிற்குக் காரணம்" என பிபிசியிடம் கூறினார் மணியம் செல்வன்.

ஆனந்த விகடன் இதழில் இதற்கு முன்பாக தில்லானா மோகனாம்பாள் தொடர் 100 வாரங்களுக்கு மேல் வெளியானது. இதற்குப் பிறகு சாண்டில்யனின் சில கதைகள் நூறு வாரங்களுக்கு மேலாக வெளியாகியுள்ளன. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் வார இதழ் ஒன்றில் தொடர்கதை ஒன்று 100 வாரங்களுக்கு நீள்வது இதுவே முதல் முறையாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்